இன்றைய சமுதாயம் எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய சவால்களில்போதைப்பொருள் பாவனையும் ஒன்றாகும். பொழுதுபோக்குக்காகவும்,சிறிது நேரம் கிடைக்கும் அற்ப சந்தோசத்துக்காகவும் பயன்படுத்தப்படும் இந்த போதைப் பொருட்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவித்து உயிரிழப்புக்களை ஏற்படுத்துவதோடு,சமூகத்தில் பல சீர்கேடுகளையும் தோற்றுவிக்கின்றன.
ஒரு நாட்டின் வளர்ச்சி, அபிவிருத்தி என்பன அந்நாட்டில் சுகதேகிகளாக வாழும் மக்களிலேயே தங்கியுள்ளன. அதிலும் நாட்டின் எதிர்காலத்தையும் தலைவிதியையும் தீர்மானிப்பவர்களாக இளந்தலைமுறையினரே காணப்படுகின்றனர். இந்நிலையில்,தெற்காசிய வலையத்தில் பல தொன்மையான வரலாறுகளையும், சிறப்புக்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகின்ற, இலங்கைத் தீவின் சிரசு எனப் போற்றப்படுகின்ற வடமாகாணமானது கலாசாரம், கல்வி, மக்களின் வாழ்வியல் என அனைத்து மட்டத்திலும் சிறந்து விளங்கியதும், விளங்கி வருவதும் யாவரும் அறிந்ததே.
இவ்வாறு அனைத்து மட்டங்களிலும் சிறந்து விளங்கும் வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வரும் ஒவ்வொரு குடிமகனது மனதிலும் யாழ்ப்பாணம் அதன் பெருமையை, சிறப்பை படிப்படியாக இழந்து வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் என்றுமில்லாத அளவிற்கு தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. போதைப்பொருள் சந்தை கடத்தலுக்கான முக்கிய கேந்திர நிலையமாக இப்பகுதி மாறி வருவதாக எண்ணத் தோன்றுகின்றது. கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது போதைப்பொருள் குற்றங்கள் வடக்கில் அசுர வளர்ச்சியைப் பெற்று பெற்றிருப்பதைக் காண முடிகின்றது.
யாழ் சிறைச்சாலை அத்தியட்சகரின் கருத்துப்படி யாழ்ப்பாணத்தில் கஞ்சா, ஹெரோயின் பாவனையாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்களில் சிலர் போதைவஸ்து வியாபாரிகளின் அடிமைகளாக உள்ளனர். சிறைச்சாலையில் போதைவஸ்து பாவித்த கைதிகள் ஏனைய கைதிகளுடன் தொடர்பில் இல்லாது தனியாகவே வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகளின் கருத்துப்படி யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஹெரோயின் பாவனையும் கஞ்சா பாவனையும் அதிகரித்துள்ளதாகத் தெரிகின்றது. மேற்கூறிய தகவல்கள் யாழ் பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றன.
போதைவஸ்து பாவனையானது ஒருவரை அதற்கு அடிமையாக்கி விடும். அவரது வருமானம் முழுவதையும் இதற்கெனவே செலவிட்டு அவர்களது உடலையும் கெடுத்துக் கொள்வார்கள். மது பாவனையால் உடல் பருமன், ஈரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டு விரைவில் நோயாளியாகி இறுதியில் உயிரிழக்கும் நிலை ஏற்படுகின்றது.
நாட்டின் பல இடங்களில் மதுபானசாலைகள் பெருகி விட்டன. இதனால் பல குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. குடும்பங்களில் பிரச்சினைகள் தோன்றவும்,நாட்டில் களவு,கொலை,விபத்துக்கள் இடம்பெறவும் மதுபாவனை பிரதான காரணமாகும். அதுமாத்திரமன்றி பல இளைஞர்கள் கல்வி கற்க வேண்டிய சிறுவர்கள் கூட தமது கல்வியை இடைநிறுத்தி விட்டு மதுப்பாவனைக்கு அடிமையாகி திரிவதை நாம் அவதானிக்கலாம்.
அதனைப் போலவே சிகரெட், கஞ்சா போன்ற புகைத்தல் பொருட்கள் பாவிப்பதனால் அவர்கள் இளம் வயதிலேயே இதற்கு அடிமையாகி பல குற்றச் செயல்களில் ஈடுபடும் நிலை ஏற்படுகின்றது. சிறு வயதினர் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட இதுவும் வாய்ப்பாக அமைகின்றது. சிறுவயதில் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் இவர்களின் கல்வி பாதிப்புற்று எதிர்காலம் தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் போய் விடுகின்றது. அவர்களை நம்பியுள்ள குடும்பங்களும் வேதனை அடைகின்றன. இவ்வாறான போதைக்கு அடிமையானவர்கள் ‘கொலை, களவு ,கொள்ளை பெண்கள் மீதான வன்முறைகள், போன்றவற்றில் ஈடுபடுவோராக சமூகத்தில் காணப்படுகின்றனர்.
போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த சமூக மட்டத்தில் விழிப்புணர்வு செயற்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும். பொதுவாக போதைப் பொருளுக்கு அடிமையானவர் 16 வயது தொடக்கம் 35 வயது வரையிலானவர்கள். பாடசாலைக் கல்வி சமூக ஒழுக்கத்தை ஏற்படுத்துகின்றது. பெற்றோர் தமது பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கண்காணிப்பாக இருத்தல் அவசியம். பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் பணம் நல்ல வழியில் செலவு செய்யப்படுகின்றதா என்பதை உற்று பார்த்தால் வேண்டும்.
போதைப்பொருள் பாவனையின் தீமையை மதத் தலைவர்களும் தமது அன்றாட சமய நிகழ்வுகளில் நினைவூட்டல் வேண்டும். போதைப்பொருள் பாவனையிலிருந்து மக்களை மீட்பதற்கு மருத்துவ வசதிகளை மேம்படுத்தல் அவசியம்.பெற்றோர் தம் பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்த்தல் அவசியம். தனியார் கல்வி நிலையங்கள் என்பவற்றை சூழ ஏற்படும் நட்புச் சூழலையும்,விளையாட்டு மைதானச் சூழலையும் பாதுகாப்பானதாக மாற்றிக் கொள்ளுதல் வேண்டும். பொது நிறுவனங்கள் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு ஊட்டுவது அவசியமாகும்.
இளைஞர்களுக்கு போதிய தொழில் முயற்சிகள்,தொழில்நுட்பக் கல்வி என்பவற்றை அதிகரிக்க வேண்டும். வேலையற்ற இளைஞர்களிடம் சேரும் மிகையான பணம் அவர்களை போதைப்பொருள் மீது நாட்டம் அடைய வைக்கும் எனவே பெற்றோர் உறவினர்கள் தமது இளைஞர்களை சுயமாகத் தொழில் செய்வதற்கு வழிபடுதல் அவசியம். கிராமங்களிலுள்ள விளையாட்டுக் கழகங்கள் போதைப்பொருள் விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்.
போதைப்பொருள் பாவனை வெறும் சட்டப் பிரச்சினை அன்று. அது சமூகப் பிரச்சினை ஆகும்.இதனை வெறுமனே குறித்த தரப்பினரது பொறுப்பு என்று எமது கடமையிலிருந்து சுகாதார சேவையினர் ஒதுங்க முடியாது. மேலும் இதனை பிரதேச மட்டத்தில் கட்டுப்படுத்தாவிடின் சமூகம் மீள முடியாத பாதாளத்துக்கு சென்று விடும்.
செ.எழிலன்…
ஊடகத்துறை மாணவன்,