-நக்கீரன்
பத்துமலை, டிச.25:
சோதிடம், சாதகம், பஞ்சாங்க பலன் போன்றவற்றின் மூலம் பக்தர்கள் வஞ்சிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.; தை முதல் நாள்தான் தமிழர்களுக்கு புத்தாண்டு; சித்திரை முதல் நாளைப் பொறுத்தவரை அது இந்துப் புத்தாண்டுதான். ஆனால், சித்திரை முதல் நாளையும் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடினால் அது அவரவர் எண்ணத்தையும் சிந்தையையும் பொறுத்தது என்று கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா குறிப்பிட்டார்.
‘சோதிட இரத்தினம்’ அஸ்ட்ரோபுகழ் மணி முத்துசாமி இயற்றிய சித்திரைப் புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்க நூல், இன்று பத்துமலை திருமுருக திருத்தல வளாகத்தில் வெளியிடப்பட்டது.
அந்த விழாவிற்கு தலைமையேற்று சிறப்புரை ஆற்றிய நடராஜா, “நான் சுயமரியாதைக் கொள்கையை கொண்டிருக்கவில்லை; மலேசிய திராவிடர் கழகத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை; முழு ஆன்மிகவாதியாக வாழ்கிறேன். ஆனாலும், இந்து சமயத்தில் நிலவும் ஒருசில ஏற்றத் தாழ்வையும் வர்த்தக நோக்கையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்றார்.
சோதிடத்திலும் பஞ்சாங்கத்திலும் சாதக பலன் என்பது சாதகாமாக நாலு சங்கதியை சொல்வதுதான். பக்தர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் துன்பத்தையும் துயரத்தையும் எதிர்கொள்ளும்பொழுது, இறைவனிடம் தஞ்சம் அடைவதைவிட அர்ச்சகர்களையும் குருக்கள்களையும்தான் நாடுகின்றனர்.
அர்ச்சனை சீட்டுகூட வாங்க மாட்டார்கள்; ஆலய உண்டியலில் காணிக்கை செலுத்துவதுகூட இரண்டாம்பட்சம்தான். ஆனால், குருக்களைப் பார்த்த உடன் அவர் நீட்டும் அர்ச்சனைத் தட்டில் தாராளமாக பணத்தைப் போடுவார்கள். அப்படியே, தங்களின் பிரச்சினையை அவர்களிடம் சொல்லி பரிகாரம் தேட முயற்சிப்பார்கள்.
சம்பந்தப்பட்ட குருக்களோ பஞ்சாங்கத்தைப் பார்த்து நன்மையைச் சொல்வதாற்குப் பதிலாக, ‘நம்மிடம் ஒருத்தன் வசமாக சிக்கிக் கொண்டான்’ என்று மனதிற்குள் நினைத்து, அவர்களிடம் ஏதாவது பரிகார பூசை, 1008 சங்கு பூசை, அபிஷேகம், ஆராதனை என்றெல்லாம் சொல்லி ஏற்கெனவே நொந்து வந்த பக்தனை மேலும் வாட்டிஎடுத்து விடுவார்கள்.
அதேவேளை, நான், என் மேலாடையை அகற்றிவிட்டு, ருத்திராக்க மாலை, திருநீற்றுப் பட்டை எல்லாம் அணிந்தபடி என்னை ஒரு சாமியாராகவோ அர்ச்சகராகவோக் காட்டிக் கொண்டால் ஒரு பக்தரும் என்னை நாடமாட்டார்கள். இத்தனைக்கும் நான் கருப்பாக இல்லை; ஓரளவு நல்ல நிறத்தில் இருந்தாலும் யார் சமஸ்கிருதத்தில் நாலு வார்த்தை சொல்கிறார்களோ மந்திரம் சொல்கிறார்களோ அது சரியோ தவறோ; தங்களுக்குப் புரிகிறதோ இல்லையோ அவர்களைத்தான் பக்தர்கள் நாடி நிற்கின்றனர்.
இதற்கெல்லாம் பக்தர்களிடம்தான் விழிப்பு ஏற்பட வேண்டும். அதற்காக, அர்ச்சகப் பெருமக்களை நான் குறைசொல்வதாக கருதக்கூடாது. எங்கள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்களின்மூலம் நூற்றுக் கணக்கான அர்ச்சகர்களை ஆதரித்து வருகிறோம். அதேவேளை, நல்ல அர்ச்சகர்களும் உள்ளனர் என்பதை குறிப்பிட்டாக வேண்டும். சமய நெறி வழுவாமல், பக்தர்களுக்கு அபயக்கரம் நீட்டும் உன்னத அர்ச்சகர்களையும் நான் அறிவேன்.
2022 ஏப்ரல் 14-ஆம் நாள் தொடங்கி 2023 ஏப்ரல் 13-வரை உள்ள சுபகிருது ஆண்டுக்கான வாக்கிய பஞ்சாங்கத்தை சோதிட-சாதக நிபுணர் மணி முத்துசாமி இயற்றிய வாக்கிய பஞ்சாங்க நூல், அனைத்து அர்ச்சகர்களுக்கும் பயனளிக்கக்கூடியது. குருக்கள்மாருடன் பக்தர்களும் இந்த பஞ்சாங்க நூலை வாங்கி தாங்களே வாசித்து தங்களின் நட்சத்திர-யோக பலன்களை அன்றாடம் தெரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக இந்தப் பஞ்சாங்கம் எழுதப்பட்டுள்ளது.
எனவே, இந்த நூலை அனைவரும் வாங்கி ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு தன் உரையை நிறைவு செய்தார் தேசிய ஒற்றுமைத் துறை சமய நல்லிணக்கக் குழு ஆணையருமான டான்ஸ்ரீ நடராஜா.
21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப மலேசியவாழ் இந்துப் பெருமக்களிடம், குறிப்பாக தமிழர்களிடையே சமய நன்னெறி, ஆன்மிக மறுமலர்ச்சிக் கருத்துகளை துணிவுடன் எடுத்துரைத்துவரும் டான்ஸ்ரீ நடராஜா மலேசியாவின் இந்து சமய மறுமலர்ச்சித் தலைவராக பரிமாணம் அடைந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவஸ்தான செயலாளர் சேதுபதி 500 வெள்ளி வழங்கி முதல் நூலைப் பெற்றுக் கொண்ட இந்த நிகழ்வில் நூற்றுக் கணக்கில் சமய அன்பர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
நூலாசிரியரான ‘சோதிட திலகம்’ மணி முத்துசாமி இந்த நூலைப் பற்றி குறிப்பிடுகையில், பஞ்சாங்கம் என்பது பஞ்ச(5) அங்கங்களைக் கொண்டது என்று பொருள்.
மனிதன் தன் அன்றாட வாழ்வில் நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்னும் கூறுகளின் அடிப்படையில்தான் வாழ்க்கைப் பலனை அன்றாடம் எதிர்கொண்டு வருகிறான்;
ஒரு மனிதனின் குணம், வாழ்க்கைப் பயணம், உடல்வாகு, அன்றாட பலன், சுப-அசுப காரியங்கள் யாவும் இந்த ஐந்து(பஞ்ச) அங்கங்களின் மூலமே கணிக்கப்படுகின்றன. கரணங்களில் 11 வகை உண்டு; எந்தக் கரணம் ஒரு மனிதனுக்கு உரியது என்பது அவன் பிறந்த நேரத்தின் அடிப்படையில் உறுதிசெய்யப்படும். இவை யாவும் நம் முன்னோர்களும் சித்தர்களும் வகுத்தளித்த மரபுப்படியே வழிவழியாகத் தொடர்கின்றன என்று சுபகிருது(2022-2023) ஆண்டு பஞ்சாங்க நூலைப் பற்றி மணி முத்துசாமி விளக்கம் தந்தார்.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24