(மன்னார் நிருபர்)
(26-12-2021)
அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் எழுதிய ‘மன்னார் மாதோட்டப் புலவர்கள் கலைஞர்கள்’ என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த 16ஆம் திகதி நானாட்டான் புனித டிலாசால் கல்லூரியில் இடம் பெற்றது.
நாட்டுக்கூத்து நாடகங்கள், பாடல்கள் மற்றும் கவிகள் போன்றவற்றை எழுதிய, மன்னார் மாதோட்டத்தில் வாழ்ந்து மறைந்த மற்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஐம்பது ஆளுமைகளின் வாழ்வு, வரலாறு படைப்புக்கள் ஆகியவற்றை தமிழ் நேசன் அடிகளார் விரிவாக இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
550 பக்கங்களைக் கொண்ட ஒரு பெருநூலாக இந்நூல் வெளிவந்துள்ளது. தமிழ் நேசன் அடிகளாரின் இரண்டு வருட உழைப்பின் அறுவடையாக இந்த நூல் அமைந்துள்ளது. பேராசிரியர் சி. மௌனகுரு அவர்கள் இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார்.
வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வெளியீடாக வந்துள்ள இந்நூலின் வெளியீட்டு விழாவுக்கு வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி. சுஜீவா சிவதாஸ் தலைமைதாங்கினார்.
மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். வடக்கு மாகாண முன்னாள் மேலதிக செயலாளர் அ. பத்திநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ஆய்வாளரும் முன்னாள் கல்வி அதிகாரியுமான எஸ். டேவிட் அவர்கள் நூல் ஆய்வுரையை நிகழ்த்தினார். இதன்போது ‘சந்தொம்மையார் வாசாப்பு’, ‘ஞானசவுந்தரி நாடகம்’ ஆகிய இரண்டு கூத்து நாடக நூல்களும் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.