தென் ஆப்பிரிக்க இனஒதுக்கல் எதிர்ப்பு இயக்கத்தவரும் நோபல் பரிசு வென்றவரும் உலகின் உளச்சான்றாய்த் திகழ்ந்தவருமான பேராயர் தெஸ்மாண் டூட்டூவின் மறைவு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆழ்துயர் கொள்கிறது.
பேராயர் டூட்டூ அவர்களே, என்றென்றும் ஈழத்தமிழர் நெஞ்சில் நிலைத்திருப்பீர்கள்!
தென் ஆப்பிரிக்க இனஒதுக்கல் எதிர்ப்பு இயக்கத்தவரும் நோபல் பரிசு வென்றவரும் உலகின் உளச்சான்றாய்த் திகழ்ந்தவருமான பேராயர் தெஸ்மாண் டூட்டூவின் மறைவு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆழ்துயர் கொள்கிறது.
தமது நீண்ட நெடிய வாழ்நாளில் அவர் உலகெங்கும் துயரப்பட்ட மக்களினங்களின் உரிமைகளுக்காக சலியாது போராடினார். இனஒதுக்கலைக் கலைக்கும் முயற்சியில் கறுப்புத் தென் ஆப்பிரிக்கர்களுக்காகப் போராடியது மட்டுமல்ல, இலங்கைத் தீவின் ஈழத் தமிழர்கள் உட்பட உலகெங்கும் ஒடுக்குண்ட மக்களினங்களின் உற்ற நண்பரும் தோழருமாக விளங்கினார்.
“அநீதி கோலோச்சும் நிலைமைகளில் எப்பக்கமும் சேராமல் நடுநிலை காப்பீர்களானால், நீங்கள் ஒடுக்குமுறையாளனின் பக்கம் நிற்கத் தீர்மானித்து விட்டதாகப் பொருள்” – இதுவே அவர் வாழ்க்கையில் கடைப்பிடித்த மெய்யியலாக இருந்தது. தம் துணிவுமிக்க செயல்களால் இந்தக் கருத்துக்குப் பொருள்தந்தார். முதலில் இன ஒதுக்கலுக்கு எதிரான இயகத்தில் பங்கு வகித்தார். பிறகு உலகுதழுவிய முறையில் மாந்தவுரிமைகளுக்காகப் போராடினார்.
சிறிலங்காவில் பேரினவாத ஆட்சியாளர்களை எதிர்த்து எப்படி மீண்டும் மீண்டும் எமது சார்பில் அவர் வெளிப்படையாக ஓங்கிக் குரல் கொடுத்தார் என்பதை ஈழத்தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். அவர் கொழும்பு ஆட்சியாளர்களைச் சாடியதோடு, நாட்டின் ஆய்தப்படைகள் தாம் செய்யும் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படுவோமென்ற அச்சமே இல்லாமல் முழுமையான சட்ட விலக்குடன் தமிழர்களுக்கு எதிராக, இனவழிப்புக் குற்றமே புரிய இடமளித்தமைக்காகப் பன்னாட்டுலகச் சமுதாயத்தையும் சாடினார்.
”மாந்தவுரிமைச் செயற்பாட்டாளர்களும், ஊடகவியலாளர்களும், ஆட்சிக்கு எதிரானவர்களும் தொடர்ந்து இன்றளவும் ஒடுக்கப்படுவதும் காணாமலாக்கப்படுவதுமான நிகழ்வுகள் உண்மையில் கொடுந்திகலூட்டக் கூடியவை” என்றார் டூட்டூ. மூத்தவர்களின் குரலாக இறுதி மூச்சுவரை ஒலித்தவர் சிறிலங்காவில், போரின் கடைசிக் கட்டங்களில் இழைக்கப்பட்ட பெருந்திரளான வன்கொடுமைக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்தி வந்தார்.
2013ஆம் ஆண்டு கொழும்பில் சிறிலங்கா ஆட்சியாளர்கள் முன்னின்று நடத்திய பொதுநலவாய நாடுகளின் ஆட்சித் தலைவர்கள் கூட்டத்தைப் புறக்கணித்து ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களைக் கவனப்படுத்த முதன் முதலாக அழைப்பு விடுத்தவர்களில் பேராயர் டூட்டூவும் ஒருவர்.
அந்த நேரத்தில் அவர் சொன்னார்: “சிறிலங்கா ஆட்சியாளர்கள் நாணயமாகச் செயல்படவில்லை என்று கருதுவதற்குப் போதிய காரணங்கள் உள. உலகம் தன்னாலியன்ற எல்லா வழிகளிலும் நெருக்குதல் கொடுக்க வேண்டுமென நினைக்கிறேன்.”
2014ஆம் ஆண்டு உலகு தழுவிய முறையில் 38 மாந்தவுரிமைச் செயற்பாட்டளர்கள் மற்றும் அமைப்புகளோடு சேர்ந்து அவர் முன்வைத்த கோரிக்கை: சிறிலங்காவில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்தும், மாந்தகுலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் புலனாய்வு செய்திட ஐநா மாந்தவுரிமைப் பேரவை பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்க ஆணையிட வேண்டும் என்பதாகும்.
அதிகாரத்தைப் பார்த்து உண்மை பேச அஞ்சியவரல்லர் ஆயர் டூட்டூ. தலாய் லாமா தென் ஆப்பிரிக்காவுக்கு வருகை தர விசா வழங்க மறுத்து சீன அரசாங்கத்தின் அழுத்தத்துக்குப் பணிந்தமைக்காக தென் ஆப்பிரிக்க அரசாங்கத்தை அவர் வெளிப்படையாகவே குற்றஞ்சொன்னார். உலகுதழுவிய பெயரும் புகழும் பெற்றவராக இருந்த போதிலும் அவர் ஒருபோதும் ஒடுக்குமுறையாளர்களை அரவணைத்துக் கொண்டதில்லை. ஒடுக்குமுறையால் பாதிப்புற்றுத் துயரம் சுமந்தவர்களைச் சாலப் பரிந்து ஏற்றுக் கொண்டவராகவே எப்போதும் இருந்தார். அவர்கள் ஆடிய போது அவரும் ஆடினார், அவர்கள் சிரித்த போது அவரும் சிரித்தார், அவர்கள் அழுத போது அவரும் அழுதார்.
ஈழத்தமிழர்கள் ஆற்றல்மிக்க தங்கள் கூட்டாளியை இழந்து விட்டனர் என்பது மட்டுமல்ல. உலகம் அறம்சார் திசைகாட்டி ஒருவரை இழந்து விட்டது. துணிவுக்கும் அறத்துக்கும் நீதிநெறிக்கும் ஆளுருவமாகத் திகழ்ந்தவர் ஆயர் டூட்டூ. அவர் இல்லாத உலகில் இன்னுங்கொஞ்சம் இருள் கூடிப்போனது போல் உணரப்படும்.
நீதிக்கான அவரது ஆர்வத்துடிப்பும், ஏழை எளியோர், ஒடுக்குண்டோர் பால் அவரது தோழமையும் நம்மை வழிநடத்த வேண்டும்.
பேராயர் டூட்டூவின் மறைவால், ஈழத் தமிழர்கள் அருமை நண்பரையும், தங்கள் குறிக்கோளுக்காகப் போராடும் உலக வீரனையும் இழந்து விட்டார்கள். எம் நெஞ்சிலும் நினைவிலும் அவர் என்றென்றும் பதிக்கப்பட்டிருப்பார்.