இலங்கை இப்போது அனுபவித்து வருவது, ஒரு இன – மத தேசியவாத சனாதிபதி கோட்டாபய இராஜபக்சவின் கொள்கைகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு தொழில்சாரா பொருளாதார பரிசோதனையின் மொத்த வீழ்ச்சியாகும். அவர் இப்போது ஸ்ரீலங்காதீஸ்வர பத்ம விபூஷணா என அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இது (பவுத்த) சங்க சமூகத்தால் எந்தவொரு அரசியல் தலைவருக்கும் வழங்கப்பட்ட ஒரு தனித்துவமான மற்றும் மதிப்புமிக்க பட்டம் ஆகும்.
2019 இல் சனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கையோடு பவுத்த சாசனத்தையும் சிங்கள பவுத்தர்களையும் பாதுகாக்கப் போவதாக கோட்டாபய இராசபக்சா அறிவித்தார். ஏனைய சமயங்கள் மன்றும் சமூகங்கள் பற்றி அவர் கவலைப்படவில்லை. கைதேர்ந்த ஆனால் கருத்தியல் ரீதியாக இணைந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிக அதிபர்களைக் கொண்ட ஒரு அதிகாரக் குழு அல்லது வியத்மக அமைப்பைச் சேர்ந்தவர்களைத் தன்னைச் சுற்றி வைத்துக் கொண்டார். தேவைப்பட்டால் சமூகங்கள் மற்றும் “ஒழுக்கமுள்ள, நல்லொழுக்கமுள்ள மற்றும் கட்டுப்பாடான சமூகத்திற்குள் “செழிப்பு மற்றும் மகிமை” நோக்கி இலங்கையை இட்டுச் செல்வதற்கான ஒரு வளர்ச்சிப் பரிசோதனையை மேற்கொள்ளத் தீர்மானித்தார்.
அவர் மற்றொரு ஹிட்லராக மாறினாலும், அரசியல் மயப்படுத்தப்பட்ட பிக்குகளின் தீவிரக் குழு அவரை முழுமையாக ஆதரிக்க அணியமாக இருந்தது. மற்றும் அவரது ஆட்சிக்கு உள்நாட்டுப் பாதுகாப்பை வழங்குவதற்கு மட்டுமல்லாமல், பொது நிர்வாக சேவைகளையும் வழங்குவதற்காக இராணுவம் முகாம்களில் இருந்து இழுத்து வரப்பட்டது. கோட்டாபய இராசபக்சா அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அவரது பணியை நிறைவு செய்வதற்கு சவாலற்ற ஒரு சர்வாதிகார ஆட்சி அமைப்பாகும். அப்படியான ஆட்சியில் சனநாயக அரசியலமைப்பில் பொதிந்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் சமநிலைகளும் (checks and balances) அவற்றின் பொருளை இழக்கும். இதற்கு முஸ்லீம் யூதாசுகளின் இரண்டகத்துக்கு “நன்றி” சொல்ல வேண்டும். இருபதாவது திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலம் நாடாளுமன்றம் தற்கொலை செய்து கொண்டது வளர்ச்சிக்கான “மாற்று வழி” என்று கோட்டாபய இராசபக்சாவின முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D. இலக்ஷ்மண் விவரித்ததைப் பரிசோதனை செய்யக் களம் அமைக்கப்பட்டது.
இந்த மாற்று வழி என்று அழைக்கப்படுவதன் மிக முக்கியமான அம்சம் மற்றும் அதன் சோதனையானது, பொருளாதாரத் சிக்கல்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தீர்வுகளில் கவனம் செலுத்துவதாகும். ஆனால் இலங்கையின் பொருளாதாரம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகளாவிய உலகின் மாறுபாடுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இலங்கைத் தீவு பரபரப்பான சர்வதேச நீர்வழிகளில் ஒன்றான இந்தியப் பெருங்கடலின் மூலோபாய இடத்திலும் அமைந்துள்ளது. இலங்கை ஒரு புவியியல் மற்றும் பிராந்திய அர்த்தத்தில் மட்டுமே ஒரு தீவு ஆகும். ஆனால் ஒரு உலகளாவிய கிராமத்தில் அது ஒரு சமூகம் மட்டுமே. இதன் பொருள் என்னவென்றால், இலங்கையின் உள்நாட்டுக் கொள்கைகள் நாட்டிற்கு வெளியில் நிகழும் மாற்றங்களால் பாதிக்கப்படாமல் தனித்து இயங்க முடியாது.
கோட்டாபய இராசபக்சாவும் அவரது குழுவினரும் இந்த முக்கியமான உண்மையைக் கவனிக்காமல் இருந்து விட்டதாகத் தெரிகிறது. மறுபுறம் அவர்கள் தங்களது வீட்டில் தயாரிக்கப்பட்ட தீர்வுகளின் செயல்திறன் குறித்து அதிக நம்பிக்கை கொண்டதாகவும் தெரிகிறது. இரண்டு ஆண்டு தொழில்சாரா கோட்பாட்டுக்குப் பிறகு, மாற்று வழி பாறைகளில் மோதியுள்ளது. இந்தத் தோல்வி பொருளாதாரத்தை விட வேறு எங்கும் தெளிவாகவும் வலியுடனும் காணப்படவில்லை.
மாற்று வழியின் பொருளாதாரம் மூன்று முக்கியமான தூண்களின் மிகைப்படுத்தப்பட்ட வலிமையில் கட்டமைக்கப்பட்டது: இயற்கை வேளாண்மை மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு; ஒரு கலப்பு நாணயக் கொள்கை மற்றும் அனைத்துலக நாணய நிதியம் இல்லாத சுதந்திரமான பொருளாதார மேலாண்மை.
இவற்றில் முதலாவது கொள்கையளவில் பாராட்டத்தக்கது. ஏனெனில் மீளுருவாக்கம் செய்யும் வேளாண்மை மூலம் உணவில் தன்னிறைவு அடைவது நாட்டின் விரிவடைந்து வரும் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க உதவுவதோடு, அதே சமயம் பணச் சமநிலையைக் குறைக்கவும் உதவும். மேலும் சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும். இருப்பினும், அதைச் செயற்படுத்தும் வழிமுறையில் சிக்கல் இருந்தது.
சில உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு ஒரே இரவில் தடை விதிக்கப்பட்டால் அது தானாகவே வித்தையை நிகழ்த்திவிடும் என்று சர்வாதிகாரி இராசபக்சா கோட்டாபய நினைத்தார். பாமா எண்ணெய் இறக்குமதிக்கு அவர் தடை விதித்ததன் பின்னணியில் உள்ள ஏரணம் (logic) இதுதான், இது வெதுப்பக உரிமையாளர்கள் முற்றிலும் எதிர்பாராத ஒன்றாகும். இராசயன உரத்தை இறக்குமதி செய்வதைத் தடை செய்ய கோட்டாபய இராசபக்சா எடுத்த நடவடிக்கை, இப்போது நாட்டை பஞ்சத்தின் விளிம்பிற்கு கொண்டு சென்றுள்ளது. உடனடி சேதங்களைக் குறைக்க எந்த ஆயத்த வேலையும் செய்யாமல், மாற்று வழிகள் இல்லாமல், துறையில் நிபுணர்களுடன் கலந்தாலோசிக்காமல், கோட்டாபய இராசபக்சா தனது கட்டளைகள் விரும்பிய பலனைத் தரும் என்று கருதினார். இரண்டு தடைகளும் நீக்கப்பட்டாலும், ஏற்பட்ட சேதம் மிகப்பெரியது மற்றும் அதிக செலவாகும் மற்றும் அதனைச் சரிசெய்ய நீண்ட காலம் எடுக்கும்.
இரண்டாவது தூண், தொற்றுநோயால் தூண்டப்பட்ட உலகளாவிய மந்தநிலையால் பாதிக்கப்பட்டு சுருங்கி வரும் பொருளாதாரத்திற்குப் போதுமான பணப் புழக்கத்தை வழங்குவதாகும். புதிய ஆளுநராக பேராசிரியர் W.D. இலக்ஷ்மன் நியமிக்கப்பட்ட பிறகு, மத்திய வங்கியின் உறுப்பினர்களுடன் இராசபக்சா கோட்டாபய நடத்திய சந்திப்பு நினைவு கூரத்தக்கது. அங்கு அவர் தனது பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்த உதவுமாறு நாணய வாரியத்தை கோரினார். அன்றைய தினம் அரசியலமைப்பு ரீதியாக அதிகாரம் பெற்ற மற்றும் நாட்டின் மிக உயர்ந்த பொருளாதார நிறுவனம் தனது சுதந்திரத்தை இழந்து ஒரு எதேச்சாதிகாரரின் கருவியாக மாறியது.
மத்திய வங்கித் தலைவர், ஒரு மரியாதைக்குரிய கல்வியாளர். அவரது கல்வி நேர்மையைப் பாதுகாப்பதற்கும் ஒரு அரசியல் தலைவருக்கு சேவை செய்வதற்கும் இடையே பரிதாபமாக சிக்கிக்கொண்டார். “எந்தவொரு அறிவார்ந்த செல்வாக்கிலிருந்தும் தங்களைத் தாங்களே முற்றிலும் விடுவிப்பதாக நம்பும் நடைமுறை மனிதர்கள், பொதுவாக செயலிழந்த சில பொருளாதார வல்லுனர்களின் அடிமைகள்” என்று கெய்ன்ஸ் (Keynes) நினைத்ததற்கு மாறாக, மத்திய வங்கிப் பொருளாதார நிபுணர் ஒரு எதேச்சதிகார அரசியல் தலைவரின் அடிமை ஆனார். அவர் நடைமுறைப்படுத்திய பணவியல் கொள்கையானது நவீன நாணயக் கோட்பாட்டின் (Modern Monetary Theory (MMT) கலப்பின தயாரிப்பு ஆகும். இது அமெரிக்காவைப் போன்ற ஒதுக்கப்பட்ட நாணயங்களைக் கொண்ட பொருளாதாரங்களுக்கு ஆனது. நவீன நாணயக் கோட்பாட்டின் சாராம்சம் என்னவென்றால், பணவீக்கத்தைப் பற்றியப் பயம் இல்லாமல் பணப்புழக்கத்தை வழங்குதல் என்ற பெயரில் பணவியல் அதிகாரிகள் பணத்தை அச்சிடலாம்.
ரூபாய் ஒரு ஒதுக்கப்பட்ட கையிருப்பு நாணயம் அல்ல. அதிகப்படியான பண பரிமாற்றத்தின் பணவீக்க விளைவு தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஆனால் மத்திய வங்கித் தலைவர் தனது கணக்கீட்டில் இருந்து உணவுப் பொருட்களின் விலைகளை மிகவும் திறமையாக நீக்கி, பணவீக்கத்தில் சமாளிக்கக்கூடிய ஆனால் “கவலைக்குரிய” உயர்வைக் காட்டினார். இது புள்ளிவிவரங்களுடன் பொய் சொல்லும் தூய கலை ஆகும். லக்ஷ்மணனின் மனசாட்சி அவரைக் குத்தி பல இரவுகளை உறங்கா இரவுகளாகச் செய்திருக்க வேண்டும். அவர் தனது முழு பதவிக் காலத்தையும் நிறைவேற்றாமல் பதவி விலகினார். இப்போது, அவரது வாரிசு, பயிற்சியால் ஒரு கணக்காளர் ஆனால் அரசியலில் ஈடுபட்டவர். அதே தந்திரத்தைத் தொடர்வதில் எந்தக் கவலையும் இல்லாதவர்.
அனைத்துலக நாணய நிதியம் இல்லா பொருளாதார நிர்வாகத்தின் மூன்றாவது தூண், நட்பு நாடுகளின் நிதி உதவியுடன், நாணய பரிமாற்றம் மற்றும் கடன்கள் மூலம், மாற்று வழியில் தான் விரும்பிய இலக்கை அடையும் என்ற நம்பிக்கையுடன் தேர்ந்தெடுப்பது. இந்த மூலோபாயத்தின் குறுகிய பார்வை இரண்டு பகுதிகளில் உள்ளது. முதலாவதாக, அதிகமாக கடன் வாங்குவதாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் விழுக்காடு உயரும். மற்றது பொருளாதாரம் சுருங்கி அல்லது நத்தை வேகத்தில் வளர்ந்து வருவதால், கடன் சுமையாக மாறும். கடந்த கால மற்றும் நிகழ்கால மத்திய வங்கித் தலைவர்கள், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் கறைபடியாத சாதனையை நாடு கொண்டுள்ளது என்று பெருமையுடன் விளம்பரப்படுத்தினர்.
இங்கு முக்கியமானது கடந்த கால வரலாறுப் பதிவு அல்ல. மேலேயுள்ள விழுக்காடு உயரும் போது அதிகரித்து வரும் கடன் அபாயம் ஆகும். Fitch போன்ற அனைத்துலக கடன் முகவர் நிலையங்கள் இலங்கையின் கடன் அபாயத்தை CC க்கு தரமிறக்குவதற்கு இதுவே காரணமாகும். அதாவது கடன் வாங்கும் செலவு அதிகரிக்கும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் நிதி முதலீடு செய்ய ஊக்கமளிக்காது. அனைத்துலக நாணய நிதியத்தின் ஈடுபாடு அனைத்துலக நிறுவனங்களுக்கு வெவ்வேறு சமிக்ஞைகளை அனுப்பும். வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஊக்குவிக்கும். இரண்டாவதாக, இந்தியாவிடமிருந்து $1.9 பில்லியன் வரையிலான சமீபத்திய பொருளாதார மற்றும் நிதித் தொகுப்பு மற்றும் $1.5 பில்லியன் சீனாவின் கடன் போன்ற நண்பர்கள் மற்றும் அண்டை நாடுகளின் உதவிக்கான வேட்டை வெளிநாட்டுக் கொள்கை தாக்கங்களிலிருந்து விடுவிக்க மாட்டாது.
இலங்கையின் பொருளாதாரத் துயரமானது, இந்தியா – சீனாவிற்கும் இடையிலான பதட்டத்தை அதிகரித்துள்ளது. இந்தப் பின்னணியில் இந்திய – சீன இடையில் அறிவிக்கப்படாத பனிப்போரின் பின்னணியில் இன்னும் பரந்த வெளியுறவுக் கொள்கைப் பரிமாணத்தை ஏற்படுத்தும். இந்த உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்தியப் பெருங்கடலில் மூலோபாய ரீதியாக அமைந்திருப்பதற்கு இலங்கை விலை கொடுக்க வேண்டியுள்ளது. பொருளாதாரத்தில் அனைத்துலக நாணய நிதியத்தின் ஈடுபாடு மறைமுகமாக மேற்கத்திய நாடுகளிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வெளிப்படும் அழுத்தங்களில் சிலவற்றையாவது குறைக்கச் செய்யும்.
இவ்வாறு, கோட்டாபய இராசபக்சாவின் பொருளாதாரப் பரிசோதனை கட்டமைக்கப்பட்ட மூன்று தூண்களில் ஒன்று நடைமுறைச் சிக்கல்களால் செயலிழந்தது. மற்ற இரண்டும் கோட்பாட்டுத் தன்மை இல்லாதது. இவற்றுக்கு மேல், உள்ஊழல், சந்தை மாஃபியாவின் அரசியல் அதிகாரம், மந்தமான வரி நிர்வாகம், ஒற்றுமையற்ற அமைச்சரவை போன்ற பல சிக்கல்கள் இருந்தன. இவை தவிர, பொருளாதார ஆய்வாளர்களின் போதிய கவனத்தைப் பெறாத ஒரு சிக்கல் உள்ளது.
மேற்கூறிய அனைத்திலும் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடிந்தாலும், நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரின் தீவிர ஈடுபாடு இல்லாமல் பொருளாதாரம் எவ்வாறு செழித்து வளர்ச்சியடையும்?
சிங்கள- பவுத்தர்களின் நிலையைப் பாதுகாப்பதற்கும் முன்னேற்றுவதற்கும் கோட்டாபய இராசபக்சாவின் அர்ப்பணிப்பு, நாடு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் ஏனைய சமூகங்கள் நீண்ட கால குத்தகைதாரர்கள் மட்டுமே என்றும் தீவிர தேசியவாத பிக்குகளின் கூற்றுக்கான வெளிப்படையான ஒப்புதல். இது சிறுபான்மையினரின் குடியுரிமையின் மெய்நிகர் மதிப்பிழப்பு ஆகும்.
கோட்டாபய இராசபக்சா அல்லது அவரது சகோதரர் பிரதமரோ, இந்த ஆபத்தான கூற்றை அரசாங்கமோ அல்லது எதிர்க்கட்சியோ இதுவரை மறுக்கவில்லை என்பது வியப்பை அளிக்கிறது. அதை மறுதலிக்கத் துணிந்த ஒரே ஒருவர் இப்போது நம்மிடையே இல்லை. அதேநேரம், சிறுபான்மையினருக்கு எதிராகத் தனது தீவிர தேசியவாத ஆதரவாளர்கள் செய்யும் அப்பட்டமான அநீதிகளுக்கு கோட்டாபய இராசபக்சா காட்டும் சகிப்புத்தன்மையும், சிறுபான்மையினர் மற்றும் அவரது அரசியல் எதிரிகளின் மனித உரிமைகளை மிதிக்க சனாதிபதியின் சொந்தத் தயார்நிலையும் அவர் ஒரு பாரபட்சமான சனாதிபதியாக செயல்படுவதை காட்டுகிறது. தீவிர தேசியவாதிகள். அப்படியானால், ஒற்றுமையற்ற மற்றும் பெரும்பாலும் அதிருப்தியடைந்த மக்களுடன் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு வெற்றிபெற முடியும்?
தற்போதைய பொருளாதார பேரழிவு சனாதிபதி கோட்டாபய இராசபக்சாவின் முத்திரையைக் கொண்டுள்ளது, மேலும் பொருளாதார சிந்தனையில் சில தீவிரமான மாற்றம் ஏற்படாத வரை, மக்கள் தாங்கும் தற்போதைய பொருளாதார வலி 2023 ஆண்டிலும் தொடரும்.
(*Dr. Ameer Ali, School of Business & Governance, Murdoch University, Western Australia. ஆங்கில மூலம் https://www.colombotelegraph.com/index.php/scrutiny-of-gotas-economic-experiment/ தமிழாக்கம் நக்கீரன்.