சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
உதயன் வாசகர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தேன் இல்லாத ஜாடியில் குரங்கு கையை நுழைக்காது என்று ஒரு செலவடை உண்டு. அது சீனாவுக்கும் பொருந்தும். அப்படி தேனுடன் சேர்ந்து 42 உலக ஜாடிகளை ( நாடுகளை) தேனுடன் சேர்ந்து சீனா அபகரித்துள்ளது என்று பன்னாட்டு அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கவலையளிப்பது மட்டுமின்றி மிகவும் அச்சமளிப்பதாகவும் உள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் எய்ட்டேட்டா எனும் ஆய்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள தகவலின்படி உலகின் 165 நாடுகள் கூட்டாக $385 billion ( பில்லியன் டாலர்கள்) கடன்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதில் 42 நாடுகள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வழி தெரியாமல் கண்முழிப் பிதுங்கி நிற்கின்றன. இந்த 42 நாடுகள் குறைந்த மற்றும் இடைநிலை வருவாய் உள்ள நாடுகள். சுலபமாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இலங்கை, உகாண்டா, ஜிம்பாப்வே, ஜிபோட்டி போன்ற நாடுகளும் லாவோஸ், பர்மா போன்ற ஆசிய நாடுகளும் உள்ளன. இவை அனைத்தும் தொடர்ந்து கடன் வாங்கியுள்ளன. அதாவது வாங்கிய கடனுக்கு வட்டியைச் செலுத்த மற்றொரு கடன் வாங்குவது, பிறகு அதற்கொரு கடன் இப்படி வட்டிக்கு மேல் வட்டிக்கு கடன் என்று வாங்கி கடைசியில் அடமான சொத்தை தனக்கு உரிமையாக்கிக் கொள்ளும் நவகாலனித்துவ நாடுபிடிக்கும் முறையை சீனா கையாண்டு வருகிறது என்று கடன் வாங்கிய நாடுகளும், மேற்குலக நாடுகளும் கண்டனமும் கவலையும் ஒருசேர வெளியிட்டுள்ளன.
சீன அதிபர் ஷீ ஜின்பிங்கின் ஆட்சிக் காலத்தில் பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேடிவ் என்றழைக்கப்படும் சாலை மூலமாக ஒரு வட்டமான பாதையை அமைப்பது அல்லது ஒரு பகுதியை சுற்றி வளைப்பது என்று பொருட்படும். இதை அவர் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கிறார்.
“சீனா மிகவும் விரைவாகக் குறைந்த வருவாய் மற்றும் மத்திய வருவாய் கொண்ட நாடுகளுக்கான `கந்துவட்டிக்காரனாக` மாறியுள்ளது என்பதே உண்மை என்று அந்த ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. அதிகாரபூர்வமாக வளர்ச்சிப் பணிகளுக்கு அளிக்கும் உதவியை தான் அளிக்கும் கடன் அல்லது வலிந்து தன்னிடம் வாங்கும் கடனுடன் சீனா இணைந்து சிறிய நாடுகளை தனது கிடுக்கிப்பிடியில் கொண்டுவந்துள்ளது என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
வாங்கிய கடனை வட்டியுடன் நேரத்திற்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் அல்லது சொத்தை எழுதிக் கொடுக்க வேண்டும் என்கிற நிலைப்பாடு தான் சீனா அல்லது சீன நிறுவனங்களின் நிலைப்பாடாக உள்ளது.
இதன் பின்புலத்திலேயே சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இன் இலங்கை விஜயத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீள்வதற்கு வழி தெரியாமல் அல்லாடும் இலங்கைக்கு, சீன அமைச்சரின் விஜயம் மேலோட்டமாகப் பார்க்கும் போது ஏதோ ஆதரவளிப்பது அல்லது ஆறுதல் கூறுவது போலிருந்தாலும் அதற்குப் பின்னர் ஆழமான நகர்வுகள் உள்ளன.இம்முறை தனது பயணத்தின் போது வாங் யி தம்மிடம் வாங்கிய கடன்களுக்கு இலங்கையின் பதில் என்ன என்பதை அறிந்து கொள்வதற்காகவே அமைந்தது என்று உள்தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையத்தில் `பட்டத்து இளவரசர்` நாமல் ராஜபக்ச அவரை வரவேற்றதும் பின்னர் இலங்கை – சீன உறவுகள் ஏற்பட்டு 65 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் வைபவ ரீதியாக சில நிகழ்வுகள் இடம்பெற்றன. உள்ளூர் ஊடகங்கள் அவரது வருகை மற்றும் அரசின் உபசரிப்புகளை “ அவர் ஊதுவதும்; இவர் ஆடுவதும்” என்ற வகையிலேயே இருந்தது. ஊடக அறத்தை மறந்து தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக இலங்கை கடன் நெருக்கடியை மூடி மறைத்து அவரது விஜயத்தையும், அவர் சென்று பார்வையிட்ட இடங்கள், அவர் இலங்கை அரச தலைவர்களைச் சந்தித்தது மற்றும் இதர முக்கியஸ்தர்கள் அவரை சந்தித்தது ஆகிய செய்திகளை மட்டுமே வெளியிட்டன. ஆனால் வாங்கிய கடன்களுக்கு வாய்தா கேட்கவே இந்த சந்தர்ப்பத்தை இலங்கை பயன்படுத்தியது.
“ஐயா சாமி; வாங்கிய கடனைக் கேட்காதீர்கள், மேலும் அவகாசம் கொடுங்கள், முடிந்தால் கடனை தள்ளுபடி செய்துவிடுங்கள்”, பிறகு நாங்கள் புதிதாகக் கடன் வாங்க வசதியாக இருக்குமென்று ராஜபக்சக்கள் கதறியதாகச் சீன தரப்பை மேற்கோள்காட்டி அலரி மாளிகை தரப்பிலிருந்து தகவல் கசிந்துள்ளது. நாட்டில் ஏற்கனவே உணவு மற்றும் மின் தட்டுப்பாட்டு நிலவுகிறது, மக்களுக்கு எரிவாயு கிடைப்பதில்லை, கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி ஆகியவை காரணமாக கடும் நெருக்கடிகளும் அதற்குத் தீர்வு காண்பதிலும் கடும் சவால்களை இலங்கை அரசு எதிர்கொள்கிறது.
“நாங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகைக்கான காலக்கெடுவை மாற்றியமைத்து ஒத்திவைத்தால், பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியான காலத்தில் எமக்கு அது பெரிய உதவியாக இருக்கும்” என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சீன வெளியுறவு அமைச்சரிடம் வேண்டியுள்ளார். இதை அவரது அலுவலகமே அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இலங்கையில் கையிருப்பிலுள்ள அந்நியச் செலாவணி விரைவாகக் கரைந்துவரும் நிலையில் ராஜபக்ச அரசாங்கம் வாங்கிய கடன்களைச் செலுத்த தவறிவிடும் என்று சர்வதேச தரமதிப்பீட்டு முகமைகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே, இலங்கைக்கு மிக அதிகளவில் கடன்களை வழங்கியுள்ள சீனாவின் வெளியுறவு அமைச்சரின் அமைந்துள்ளது.
மத்திய வங்கியிடமிருக்கும் அந்நியச் செலாவணி பெருமளவு குறைந்துவிட்டதால் அவசியமான பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்வதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் இறுதியில் இலங்கையிடமிருந்த அந்நியச் செலாவணி 1.5 பில்லியன் டாலருக்கும் கீழ் குறைந்துவிட்டது. அந்த தொகையின் மூலம் ஒரு மாதம் மட்டுமே இறக்குமதிகளைச் செய்ய முடியும். கையிலிருப்பிலிருந்த அந்நியச் செலாவணி குறைந்ததன் காரணமாக, அனல் மின்நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாமல் போனதால் நாடு முழுவதும் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு அது பகிர்ந்தளிக்கப்படும் நிலையை தோற்றுவித்தது.
கடந்த நிதியாண்டின் முடிவில் ( ஏப்ரல் 2021) இலங்கைக்கு சுமார் 35 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டுக் கடன் உள்ளது, அதில் 10 % சீனாவுக்குச் செலுத்த வேண்டியது என்று தரவுகள் காட்டுகின்றன. அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் மத்திய வங்கி திருப்பிச் செலுத்த வேண்டிய கடனையும் சேர்ந்தால் இந்த தொகை மேலும் மிகவும் அதிகமாக இருக்கக் கூடும்.
இலங்கை சீனாவிடமிருந்து உட்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்காக மிகப்பெரும் தொகையைக் கடனாகப் பெற்றுள்ளது. அப்படியாகத் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட பெரும்பாலான கட்டமைப்பு வசதிகள் `வெள்ளை யானைகளாகவே` இருந்துள்ளன. இதற்கு நல்லதொரு உதாரணம் `போர் வெற்றி நாயகர்` மஹிந்த ராஜபக்ச பெயரில் அம்பாந்தோட்டை-மத்தளையில் அமைக்கப்பட்ட விமான நிலையமாகும்.சீன நிதியுதவியுடன் கட்டப்பட்டு 2013 ஆம் ஆண்டில் பெரும் விளம்பரம் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட பரபரப்பிற்கிடையே இந்த விமான நிலையம் திறக்கப்பட்டது. 210 மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட இந்த விமான நிலையத்திற்கு சீனாவிடமிருந்து 190 மில்லியன் டாலர் கடனாகப் பெறப்பட்டது. அந்தளவுக்கு பெருந்தொகையை முதலீடு செய்து கட்டப்பட்ட விமான நிலையம் முழுமையான பயன்பாட்டிற்கு வரவுமில்லை வருமானம் ஈட்டவுமில்லை.ஒரு கட்டத்தில் தானியக் களஞ்சியமாகப் பயன்படுத்தப்படும் அவல நிலையும் ஏற்பட்டது. அதே போன்று தென்னிலங்கையிலுள்ள அம்பாந்தோட்டை துறைமுகமும் கடன் சுமையால் 99 ஆண்டுக் காலத்திற்கு சீனாவிற்கு குத்தகைக்கு அளிக்கப்பட்டது. சுமார் 15,000 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட அந்த துறைமுகத்திற்கு சீனாவிடமிருந்து 1.5 பில்லியன் டாலர் கடனாகப் பெறப்பட்டிருந்தது. கடனைக் கொடுத்து பின்னர் அபகரிப்பதே தொடக்கத்திலிருந்து சீனாவின் நோக்கமாக இருந்தது.
தேவையில்லாமல் உட்கட்டமைப்பு என்கிற பெயரில் ஏராளமான முதலீடுகளைச் சீனாவிடமிருந்து கடனாகப் பெறப்பட்டது. அதற்காக அவரவர்களுக்கு உரிய `கமிஷன் தொகையும்` கிடைத்தது என்கிற குற்றச்சாட்டும் நிலவுகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகம் கிழக்கு-மேற்கு கடல்வழி பாதை மற்றும் வர்த்தகத்தில் அமைந்துள்ளது என்றும், அதை சீனாவிற்கு நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு அளிப்பது இந்தியப் பெருங்கடலில் சீனா கால்பதிக்க வழிசெய்துவிடும், அதன் மூலம் அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு குந்தகமாக அமையும் என்றும், சீனா அந்த துறைமுகத்தை தமது இராணுவ நடவடிக்கைக்காக பயன்படுத்தும் என்று அமெரிக்காவும் இந்தியாவும் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தன. அதே நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உள்ளன.
இன்று இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு முன்னர் போர்ச் சூழல் என்ற போர்வையிலும், பின்னர் வளர்ச்சி என்ற மேற்பூச்சைக் காரணம் காட்டி தொடர்ச்சியாக கடன்கள் பெறப்பட்டன. அதில் பெரும்பாலும் சீனாவிடமிருந்தே பெறப்பட்டன. வாங்கிய கடனை உரிய நேரத்தில் செலுத்த இலங்கைக்கு போதிய வல்லமை இல்லையென்று பொருளாதார வல்லுநர்கள், கேந்திர விவகாரங்களுக்கான ஆய்வாளர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர்.
”இலங்கைக்கு சீனா தொடர்ந்து உதவி செய்யும்” என்று சீன வெளியுறவு அமைச்சக பேச்சாளர் கூறியுள்ளதில் ஆழமான அர்த்தம் உள்ளது. அதாவது தொடர்ந்து நீங்கள் கடன் பெறலாம், ஒரு கட்டத்தில் வாங்கிய கடனிற்காக நாங்கள் சொத்துக்களை அபகரிக்கத் தயங்க மாட்டோம் என்பதே அதன் பொருள்.
இதனிடையேசீனாவிடம் ` அரசியை நன்கொடையாக வேண்டியுள்ளோம்` என்று இலங்கையின் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இரு தினங்களுக்கு முன்னர் ஊடக சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார்.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
பொருள்:
முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் பொதி போல கருகிவிடும்.