எமது சமயங்கள் அனைத்தும் வாழ்வியலையே போதித்து எம்மை வழிப்படுத்துவதாக அமைந்துள்ளன. தைத்திருநாள் என்பது, சூரியபகவான் தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் காலமாகும். உத்தராயண புண்ணிய கால ஆரம்பம் என போற்றப்படுகின்றது.
இன்னுமொரு வகையில் உழவர் திருநாளை நன்றிகளை தெரிவித்துக்கொள்ளும் ஓர் சிறப்பம்சம் நிறைந்த நாளாக பார்க்கப்படுகிறது. அதாவது உழவர்கள் தம்தொழிலுக்கு உதவிகள் புரிந்த சூரிய பகவானுக்கு நன்றிகள் பகிர்ந்து, பொங்கலிட்டு படைத்து நிவேதனம் செய்யும் ஓர் விழாவாக பண்டிகையாக நோக்கலாம். அத்துடன் அனைத்து உயிர்களையும் மதித்து அன்புடன் நன்றிகள் பகிர்ந்து கொள்வதாகவும் நாம் காணலாம்.
நாம் சமய வழி நிற்பதில், நடப்பதிலிருந்து பல்வேறு வாழ்வியல் தத்துவங்களை நடைமுறைகளை கற்றுக் கொள்ள வேண்டும். அன்பு செலுத்தி நடக்கப் பழக வேண்டும். நன்றிகள் பகிர்ந்து கொள்ளப்பழக வேண்டும். இயற்கையை நேசிக்கும் பாங்கினை பழக, கற்க வேண்டும். இவ்வகையில் சமயங்கள் வாழ்வியலையே போதித்து நிற்கின்றன.
அவ்வகையில் நாமும் கற்றுக் கொள்ள வேண்டும்.
எமது நாட்டில் அன்பு நிலைக்க வேண்டும். அறம் வேண்டும். தர்மத்தின் வழி நடக்க வேண்டும். அன்பு, அறம், தர்மம், நேர்மை, இயற்கையை மதித்தல் மேலோங்க வேண்டும். இவற்றை எல்லாம் இழப்போமானால் அல்லது மீறி நாம் நடப்போமானால் எமக்கு கிடைப்பது மிகவும் துயரம் மிகுந்த வாழ்க்கையாக அமையும்.
மலர்ந்துள்ள தைத்திருநாள் முதல் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பலமும் இன்பமும் பெற்று வாழ்க என அன்பே உருவான பரம்பொருளின் பாதம் பணிந்து பிரார்த்தனை செய்து, மனமார்ந்த நிறைந்த நல்வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறோம்.
சுபம்.
கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள்.
தலைவர், இந்துக் குருமார் அமைப்பு. 13.01.2022
சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள்.
செயலாளர், இந்துக் குருமார் அமைப்பு.