பரதக் கலை பேராசான் அமரர் ஏரம்பு சுப்பையா அவர்களின் புதல்வியும் கனடாவின் பரதநாட்டிய ஆசிரியைகளில் ஒருவருமான திருமதி நந்தினி ஜெகதீஸ்வரன் காலமானர் என்ற செய்தியை எமது வாசக அன்பர்களோடும் பரதக் கலை ஆர்வலர்களோடும் பகிர்ந்து கொள்கின்றோம்.
பரதக் கலை உலகில் சாதனை படைத்த கலைப்பேராசான் திரு ஏரம்பு சுப்பையாவின் மகள் திருமதி நந்தினி ஜெகதீஸ்வரன் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு மிகத் துயர் கொள்கின்றோம். எனவும் அவரின் ஆத்மா சாந்தியடையவும் உலகெங்கும் உள்ள அவரது அபிமானிகளும் உறவினர்களும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்
இணுவிலைப் பிறப்பிடமாகவும், ”கலாபவனம்” கொக்குவில் மேற்கினை வாழ்விடமாகவும் கொண்டு வாழ்ந்தவர் அமரர் ஏரம்பு சுப்பையா (தோற்றம் – 13.01.1922). முதலாவது அரச நியமனம் பெற்ற நடன ஆசான் என்ற பெருமைக்குரியவர். பரதம், கதகளி ஆகிய நடனத்துறையில் பேராற்றல் பெற்று இருபத்தேழு வருடங்கள் இம்மண்ணிலே நடனத்துறையில் தடம்பதித்தவர் இப்பெருங்கலைஞர் ஏரம்பு சுப்பையா ஆவார். இலங்கை மண்ணில் அனைத்து மாவட்டங்களிலும் கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு விழாக்கள், கலாச்சார சமய விழாக்கள், சுதந்திர தின விழாக்கள், நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் என இவரின் நடனப் பாதங்கள் பதியாத இடங்கள், அரங்குகள் இல்லையென்றே கூறலாம். பரம்பரை வழியாக இத்துறையில் ஈடுபட்டு வரும் இவர் தந்தையார் ஏரம்பு அண்ணாவியாரிடம் ஆரம்ப நடனக் கலையைக் கற்றுக் கொண்டவர்.
பின்னர் அவர் இந்தியா சென்று நடன நிகேதன் சென்னை குருஜி கோபிநாத் அவர்களிடம் கதகளியையும், திருச்செந்தூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் பரதக்கலையையும் பயின்றார். அக்காலப் பகுதியில் இந்திய மண்ணிலும் தன் நடன ஆற்றலை இவர் வெளிப்படுத்தினார். இந்திய திரைப்படமான சந்திரலேகா, சக்ரதாரி ஆகிய திரைப்படங்களிலும் இவர் நடனமாடியுள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்த மகாராணியார் எலிசபெத், தேசாதிபதியாகவும் பிரதமராகவும் இருந்த சேர். ஜோன் கொத்தலாவலை ஆகியோர் முன் இவரின் நெறியாள்கையில் நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. இந்நிகழ்வுக்காக ஏரம்பு சுப்பையா அவர்கள் பாராட்டுதலையும் பெற்றிருந்தார்.
இவ்வாறான ஒரு சிறப்புக்கள் கொண்ட நடனக் கலைக் குடும்ப விளக்கின் ஒரு திரியாக விளங்கிய பரத நாட்டிய ஆசிரியர் திருமதி நந்தினி ஜெகதீஸ்வரன் கனடாவில் காலமானர் எனற செய்தி அனைவரையும் ஆளாத துயரில் ஆழ்த்தியுள்ளது