எஸ்.பி கனக்ஸ் என்றும் ‘காப்புறுதி’ கனக்ஸ் என்றும் மொன்றியல் வாழ் தமிழர் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவரும், – கிழக்கிலங்கை திருக்கோவிலூர் பதியில் உதித்தவரும் ,, சுவாமி விபுலானந்தர்ஆவர்களின் புகழ் பரப்பியவரும். தமிழ் இலக்கியச் சிந்தனையாளரும், ‘கல்கிதாஸன்’ எனும் புனைப்பெயரில் கவிதை எழுதி களிப்பூட்டியவரும் அருமை சினேகிதருமான கனகசபாபதி அவர்கள் கனடா மொன்றியால் நகரில் அமரத்துவம் எய்திவிட்டார் என்ற செய்தியைக் கேள்வியுற்றதும் சில நிமிடங்கள் நிலைகுலைந்து போனேன்.
“காலா வாடா” சற்று உன்னை காலால் உதைப் பேனடா” என பாரதியை வழிமொழிந்து தைரியம் தந்த ‘ கனக்ஸ்’ காலமாகி விட்டார் என்ற தகவல் நிஜம் என்றதும், நாங்கள் இருவரும் இணைந்து பயணப்படுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் திட்டங்கள் தீட்டியிருந்தோம்? இன்னும் கொஞ்சக் காலம் அவர் வாழ்ந்திருக்கலாமே? என்ன கொடுமையிது!
“புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்”
வள்ளுவப் பெருந்தகை எழுதிவைத்த இக்குறள் வழி நட்பு தான் எங்களிருவருக்கும்.
‘நட்பு பொருந்துவது அடிக்கடி சந்தித்துப் பழகுவதைப் பொறுத்தன்று. ஒத்த உணர்ச்சி இருந்தால் அதுவே நட்பின் உரிமைகளை உண்டாக்கும்.”
பேராதனைப் பல்கலைக் கழகப் பட்டதாரியான நண்பர் புலமைப்பரிசில் பெற்று சிறிது காலம் அப்போதைய மேற்கு ஜெர்மனி – மியூனிச் நகரத்தில் தொழிற் கல்வியை முடித்து பின்னர் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். 1980 களின் ஆரம்பத்தில் மொன்றியல் நகரில் வாழத் தொடங்கிய 10 பேரில் நண்பர் கனக்ஸ்-ம் ஒருவராவார். எனவே மொன்றியால் தமிழர்கள் மூத்த குடிமகனும் அவர் எனலாம்.
1992இல் இவருடனான அறிமுகமும் – நட்பும் ஆரம்பித்தது.
அன்பு அறிவிப்பாளர் பி. எச்.அப்துல் ஹமீது அவர்களின் கலைச்சேவையை பாராட்டி எடுக்கப்பட்ட சிறப்பு வைபவத்தில் இருவரும் கை கோர்த்து கொண்டோம்.
எங்களது “கனடா தமிழ் கலாச்சார சங்கம்” எனக்கடுத்து இவரைத் தலைமை தாங்க அழைத்தது. என்னால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்” ஆரோக்கியமாக வளர்வதற்கும் பக்கபலமாகத் தோள்தந்தார்.
மொன்றியல் நகரில் நடந்தேறிய உலகத் தமிழ் பண்பாட்டு மாநாட்டில் சிறப்புரை வழங்குவதற்காக சினிமா இயக்குனர் பாரதிராஜாவையும் – பேராசிரியர் கா. சிவத்தம்பி ஐயாவையும் அழைத்து வருவதில் – பெரிதும் பங்கெடுத்து வெற்றிகரமாக உழைத்த செயல்வீரர். இவ்வாறு பல சம்பவங்களை நினைத்துப்பார்க்கிறேன். 2021 நவம்பரில் மொன்றியல் நகரில் நடந்தேறிய “உதயன் வெள்ளி விழா” சிறப்புற நடைபெறுவதற்கும் நல்லாதரவு வழங்கினார்.
ஒரே அலைவரிசையில் சிந்தித்துச் செயலாற்றக் கூடிய நல்ல தோழரை இழந்தது மட்டுமல்ல – நீண்ட காலம் சன் லைவ் காப்புறுதி முகவராகப் பணிபுரிந்து மொன்றியால் வாழ் தமிழ் மக்களின் நன்மதிப்பையும் பெற்றவராவார்.
தமிழர்கள் உள்ளிட்ட கனடிய சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றே சொல்வேன். நாட்டார் பாடல்களை கூத்துக் கலை வடிவத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் மேடையேற்றி அடுத்த தலைமுறைக்கு அறியத் தரவேண்டும் எனும் கலை முயற்சியில் ஈடுபாடுடையவர். கலாநிதி க.தா. செல்வராஜ் கோபால் (ஈழத்துப் பூராடனார்) பிரதம ஆசிரியராகவும், எஸ் பி கனகசபாபதி (B.A) இணை ஆசிரியராகவும் இணைந்து எழுதி வெளியிட்ட “மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச் சுவடுகள்” நூல் வெளியீட்டின் போது என்னை அழைத்து நூல் விமர்சனம் செய்ய வைத்தார்.
நல்ல தமிழ்க் குடிமகனாக வாழ்ந்தவரின் நட்பை இழந்து உடுக்கை இழந்தவனாகிவிட்டேன். 2003-இல் சுவாமி விபுலானந்தர் நினைவு விழா சிறப்பு மலரை தன் கைப்பட “அன்பு நண்பர் திரு. சண்முகராஜா அவர்கட்கு முத்தமிழ் வித்தகர் நினைவுடன் என் இனிய அன்பளிப்பு. எஸ்.பி கனக்ஸ் எழுதிய வரிகளைப் பார்க்கும் போது விழித்திரையை நீர்த்திவலைகள் மறைகின்றன.
சிரித்த முகமும்; சீரிய பண்பாடும்
சிந்தும் தமிழ் மொழியும்; நிறைந்த விருந்தோம்பலும்
என்றென்றும் என் நினைவில்…!
-வீணை மைந்தன்