தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (30.01.2022) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மிகச்சிறப்பாக நிகழ்ந்தேறியது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக வவுனியாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி த. மங்களேஸ்வரன் பங்கேற்றிருந்தார். சிறப்பு விருந்தினர்களாக வடபிராந்திய விவசாய ஆராய்ச்சிப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி எஸ். ஜே. அரசகேசரி, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ. எம். றியாஸ் அகமட் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் கடந்த ஆண்டு தேசிய ரீதியில் மாணவர்களிடையே இணைய வழியில் சூழல் பொதுஅறிவுப் பரீட்சையொன்றை நடாத்தியிருந்தது. இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்றிருந்த இப்பரீட்சையில் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற முதல் மூன்று மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் பசுமை அமைதி விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இவர்களோடு விசேட சித்தி மற்றும் அதிதிறமைச் சித்தி பெற்ற மாணவர்களில் ஒரு தொகுதியினர் பசுமை அமைதிச் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளனர். யாழ் மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த செல்வன் சிவகரன் அபிசாய்ராம் முதலாம் இடத்தினைப் பெற்று தங்கப் பதக்கத்தினையும், யாழ் வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த செல்வி ~ண்முஹி கருணாநிதி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தினையும், மட்டக்களப்பு புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த செல்வி டிலுக்சினி டன்ஸ்ரன் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கங்களையும் சுவீகரித்துக்கொண்டார்கள். இவ்விருதுகள் சூழலியல் ஆசான் க.சி. குகதாசன் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டுள்ளன.
2021ஆம் ஆண்டுக்கான சிறந்த சூழல்நேயச் செயற்பாட்டாளருக்கான பசுமை அமைதி விருதை இயற்கை விவசாயி அல்லைப்பிட்டி மகேஸ்வரநாதன் கிரிசன் பெற்றுக்கொண்டார். தாலகாவலர் மு.க. கனகராசா ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட இவ்விருதோடு, ஒரு இலட்சம் ரூபா பொற்கிழி வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
வரவேற்புரையை தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சூழல்பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த. யுகேஸ் ஆற்ற, நன்றியுரையை பொதுச் செயலாளர் ம. கஜேந்திரன் நிகழ்த்தியிருந்தார். பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்த இவ்விழாவுக்கான அனுசரணையை புலம்பெயர்ந்த தமிழர் கூட்டமைப்பு வழங்கியிருந்தது.