காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்ப சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா.
(மன்னார் நிருபர்)
(3-02-2022)
இலங்கையின் சுதந்திர தினமான நாளை வெள்ளிக்கிழமை (4) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்ரிப்பதாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.
-மன்னாரில் இன்று வியாழக்கிழமை(4) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கை சுதந்திர தினம். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் அந்த நாளை கரி நாளாக அனுஷ்டிக்க இருக்கிறோம்.
எங்களுடைய உறவுகளுக்காக வீதிகளில் நின்று போராட்டங்கள் செய்து எந்த ஒரு பிரயோசனமும் இல்லாத நிலையில் இந்த சுதந்திர தினத்தில் கரி நாளாக நாங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை (4) 10 மணி அளவில் அனுஸ்டிக்க இருக்கிறோம்.
அதனால் வீதிகளில் நின்று போராடும் தாய்மார்களுக்கு வலு சேர்ப்பதற்காக வர்த்தக சங்கங்கள், பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் , தனியார் நிறுவனங்கள் , அரசியல்வாதிகள் , சமூக நிறுவனங்கள் , சமூகத் தொண்டர்கள் ,மனித உரிமை செயற்பாட்டாளர்கள் , அனைவரும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எம்மோடு வந்து நின்று எமக்கு ஆதரவு தர வேண்டும்.
மேலும் ஒவ்வொரு மாவட்டமாக நீதியமைச்சர் வருகை தந்தார் .ஆனால் அவர் நீதி அமைச்சராக வரவில்லை. நிதியமைச்சர் ஆகவே வந்தார்.அதனால் சில மாவட்டங்களில் அவரை சந்திப்பதையும் நாங்கள் தவிர்த்துக் கொண்டோம்.
அவருக்கு தெரியும் நாங்கள் நிதிக்காக போராட வில்லை. எங்களுடைய உறவுகளுக்காக போராடுகிறோம் என்று.
அதே போல் மன்னாருக்கு 13 திணைக்களங்கள் வருவதாக இருந்து இறுதியில் வந்தது 7 திணைக்களம். அதில் ஓ. எம். பி .மன்னாருக்கு வந்து 4 வருடங்கள் ஆகின்றது.
இன்று வரை அது எந்த ஒரு செயற்பாடுகளையும் செய்யவில்லை. அது அரசாங்கத்திற்கும் தெரியும். இருந்தும் ஜனாதிபதி அவர்கள் நீதி அமைச்சரை அனுப்பி ஒவ்வொரு மக்களாக சந்தித்து வருகின்ற ஜெனிவா கூட்டத்தொடரில் அரசாங்கத்திற்கு சாதகமாக மாற்றுவதற்கு செயல்பட்டு வருவதாக அறிய முடிகிறது.
எனவே நாங்கள் இங்குள்ள இலங்கை அரசாங்கத்தை நம்பவில்லை. எங்களுக்கு சர்வதேச நீதி வேண்டும்.
ஆகவே தான் வர இருக்கின்ற சுதந்திர தின நிகழ்வின் போது முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கரி நாளாக அனுஸ்டிக்க இருக்கிறோம்.
இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு எமக்கு ஆதரவு தந்து வலு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.
-குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க பிரதி நிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.