கனடா நக்கீரன்
இந்திய – இலங்கை நாடுகளுக்கு இடையில் யூலை, 29 1987 இல் ஓர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதன் அடிப்படையில் 1978 இல் இயற்றப்பட்ட யாப்புக்கு 13 ஏ சட்ட திருத்தம் 14 நொவெம்பர், 1987 இல் நிறைவேற்றப்பட்டது. மாகாண சபைகள் சட்டம் 42 (1987) மாகாண சபைகளை உருவாக்க வழிகோலியது. அரச ஆணை மூலம் பெப்ரவரி 03, 1988 இல் 9 மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. 02 யூன், 1988 இல் 7 மாகாண சபைகளுக்கு தேர்தல் நடந்தது. தற்காலிகமாக இணைக்கப்பட்ட வட – கிழக்குக்கு 19 நொவெம்பர், 1988 இல் தேர்தல் நடந்தது. யூலை 1990 இல் அது கலைக்கப்பட்டது.
இந்த மாகாண சபை முறையின் ஊடாக, காணி மற்றும் போலீஸ் அதிகாரங்கள் மாகாண சபை வசமாகின. மாகாணங்களில் உயர் நீதி மன்றங்களை உருவாக்கவும் சட்டத்தில் இடம் இருந்தது. எனினும், மத்திய அரசாங்கம் இன்று வரை மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரங்களை வழங்க மறுத்து வருகிறது.
வட- கிழக்கு மாகாணசபையின் நிருவாக மொழியாக தமிழுக்கும், ஏனைய மாகாணங்களில் நிருவாக மொழியாக சிங்களத்துக்கு
முன்னுரிமை வழங்கப்பட்டது.
இப்போது 35 ஆண்டுகளுக்குப் பின்னர் 13 சட்ட திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஒரு தரப்பும் அதனை ஒழிக்க வேண்டும் என இன்னொரு தரப்பும் காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்களைக் குறிப்பிடலாம்.
(1) சென்ற ஆண்டுக் கடைசியில் ஏழு கட்சிகள் கூடி 13 சட்ட திருத்தத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடிக்கு அனுப்ப இருந்த கடிதம்.
(2) ஒற்றையாட்சிக்குள் கொண்டுவரப்பட்ட 13 ஏ ஆவது திருத்தத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறி தமிழ்த் தேசிய மக்கள் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், நா.உ கொழும்பு தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை என்றும் தமிழர் தேசியத் தரப்பு ஏற்றுக் கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.
அத்துடன், ததேமமுயினர் இட்டுக்கட்டப்பட்ட கதைகளைக் கூறிப் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்தவை வருமாறு:-
13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கான தீர்வாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் கூறியது கிடையாது.
தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருந்தாலும் சரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும் சரி, தமிழரசுக் கட்சியாக இருந்தாலும் சரி, இந்த நிலைப் பாட்டில் மாற்றங்கள் காணப்பட்டிருக்கவில்லை.
இந்தப் பின்னணியில் தற்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய ஆவணத்திலும் அவ்விடயங்கள் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. இது சம்பந்தமான ஆவணத்தில் கையொப்பமிட்ட தலைவர்களும் மிகத் தெளிவாக அந்த விடயத்தைக் கூறியுள்ளனர்.
இருப்பினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இந்த ஆவணத்தைத் திரிவுபடுத்தி, இட்டுக்கட்டப்பட்ட விடங்களை வெளிப்படுத்திப் பொய்யான பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.
எம்மைப்பொறுத்தவரையில், பிரிக்க முடியாத, பிளவுபடுத்த முடியாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வரும் இணைந்த வடக்கு, கிழக்கில், தங்களைத் தாங்களே ஆட்சி செய்யக் கூடிய வகையிலும், தங்களின் தலைவிதியை தீர்மானிக்க கூடிய வகையிலும், மீளப்பெறமுடியாத அதிகாரப் பகிர்வு செய்யப்பட்டு, சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும். அதுவே தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்கும்.
ஆனால், 13 ஆவது திருத்தச்சட்டமானது, தற்போதைய அரசமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். அத் திருத்தச்சட்டமானது அதிகாரப்பகிர்வின் ஒரு வடிவமாக அரசமைப்பில் காணப் படுகின்றது. ஆகவே அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் மாறிமாறி இருந்த தலைவர்கள் அனைவரும் 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்றே வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்கள்.
பிரேமதாச காலத்தில் மங்கள முனசிங்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. சந்திரிகாவின் காலத்தில் பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற தலைப்பில் தீர்வுப்பொதி தயாரிக்கப்பட்டது.
பின்னர் இரணில் விக்கிரமசிங்க காலத்தில் ஒஸ்லோ பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டன. மஹிந்த ராஜபக்ச 13 + என்று குறிப்பிட்டமையோடு சர்வகட்சி அறிக்கையும் தயாரிக்கப் பட்டது. அதன் பின்னர் மைத்திரி – இரணில் கூட்டாட்சியில் புதிய அரசியலமைப்புக்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இவற்றில் கோட்டாபய கூட அரசியல் தீர்வு பற்றி இந்தியப் பிரதமருக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இவ்வாறான பின்னணியில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும். அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காகவே நாம் எமது நிலைப்பாட்டைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றோம்.
விசேடமாக இந்தியா தமிழர்களின் விடயத்துடன் நீண்டகாலமாகத் தொடர்பு பட்டுள்ளது என்ற அடிப்படையில் அவர்களுக்குள்ள தார்மீகக் கடமையை முன்னெடுக்குமாறு நாம் கோரியுள்ளோம்.
நாம் எமது மக்கள் வழங்கிய ஆணையை மீறாது, சரியான திசையில் பயணிக்கின்றோம். இதனை சில தரப்புக்கள் அரசியலுக்காக குழப்புவதற்கு முனைகின்றன என்றார்.
இன்று தமிழ்த் தேசியப் பரப்பில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரது கட்சியும் மக்கள் மத்தியியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அதனால் அந்தப் பிம்பத்தை உடைக்க வேண்டிய தேவை அவருக்கு ஏற்பட்டுள்ளது.
ஒற்றையாட்சி கேட்ட தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் அதன் பினாமியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இன்று இணைப்பாட்சி கேட்பது நல்ல முன்னேற்றம். ஆனால் 13 ஆவது சட்ட திருத்தம் தமிழ்மக்களது அரசியல் தீர்வுக்கான ஒரு சட்டம் இல்லை என்று தமிழ்க் காங்கிஸ் கட்சி வாதாடுவது புத்திசாலித்தனமான அரசியலாக இல்லை. 13 ஆவது சட்ட திருத்தம் மாகாணசபைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வை வழங்குகிறது. அது மட்டுமல்ல அதிகாரப் பகிர்வுக்கான அலகு மாகாணம் என்பது முதன்முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1965 ஆம் ஆண்டு எழுதப்பட்ட டட்லி – செல்வா உடன்பாட்டில் அதிகாரப் பரவலாக்குக்கான அலகு மாவட்டம் என்றிருந்தது.
13 இன் கீழ் நிறைவேற்று அதிகாரம் ஆளுநர் கையில் இருக்கிறது என்பதும் ஆளுநர் சனாதிபதியின் முகவர் என்பதும் உண்மையே. ஆளுநர் நினைத்தால் மகாண சபையைக் கலைக்குமாறு சனாதிபதியை கேட்கலாம்.
ஆனால் நடைமுறையில் மாகாண சபையை முதலமைச்சர் உட்பட 5 பேர் கொண்ட ஒரு அமைச்சர் வாரியம் நிருவாகிக்கிறது. அமைச்சர்களது நியமனம் முதலமைச்சரின் ஆலோசனைப்படியே இடம்பெறும். அமைச்சர்களை விலக்குவதாக இருந்தாலும் முதலமைச்சரின் ஆலோசனையின் அடிப்படையிலேயே செய்ய முடியும். அமைச்சரவை மட்டுமல்ல ஏனைய விடயங்களிலும் முதலமைச்சரின் ஆலோசனைப் படியே பெரும்பாலும் ஆளுநர் வினை செய்ய வேண்டும்.
2013 -2018 வரை இயங்கிய வட மாகாண சபையில் முதலமைச்சரின் ஆட்சிக்கு ஆளுநர்கள் முட்டுக் கட்டையாகவோ தடையாகவோ இருந்ததில்லை. முதலமைச்சர் குடைச்சல் கொடுக்கிறார் அவரோடு சேர்ந்து பணிபுரிய முடியாது எனக் கூறி ஆளுநர் எச்.எம்.எஸ். பலிகக்கார (27-01-2015 தொடக்கம் 16-09-2016 வரை) தனது பதவியைத் துறந்திருந்தார்.
13 திருத்தத் சட்டத்தில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட காணி அதிகாரங்கள், பொலீஸ் மற்றும் சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டால் மாகாண சபை முறைமையில் இணைப்பாட்சிக்குரிய பல அம்சங்கள் காணப்படும்.
எனவேதான் இனச் சிக்கலைத் தீர்த்து வைக்க இணைப்பாட்சிதான் சரியான தீர்வாக இருந்தாலும் அது கிடைக்கும் வரை குறைபாடுடைய 13 சட்ட திருத்தத்தை ஒரு தொடக்கப் புள்ளியாக வைத்துக் கொள்ள வேண்டும் என தமிழ் அரசுக் கட்சி கூறுகிறது. ததேகூ இன் தலைவர் இரா சம்பந்தர் கூறுவது போல தமிழ்மக்களது வேட்கை இணைப்பாட்சிதான். அதில் மாற்றம் இல்லை. தமிழ் அரசுக் கட்சி தொடங்கிய காலம் தொட்டு இணைப்பாட்சி அரசியல் அமைப்புக்கு போராடி வருகிறது. அதனால் அதன் பெயர்கூட ஆங்கிலத்தில்
Federal Party என மற்றவர்களால் அழைக்கப்படுகிறது.
கஜேந்திரகுமார் 13 சட்ட திருத்தத்தை எதிர்ப்பது – அதனை முற்றாக ஒழிக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டி நிற்கும் சிங்கள – பவுத்த பேரினவாதிகளுக்கு அவல் கொடுத்த மாதிரி இருக்கும். சனாதிபதி கோட்டாபய அரசு புதிதாகக் கொண்டுவர இருக்கும் யாப்பில் 13 முற்றாக கைவிடப்பட்டுள்ளதாக ஒரு சிங்கள செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
கஜேந்திரகுமார் எப்போதும் எதிர்ப்பு அரசியலை நடத்தி வருபவர். இது அந்தக் குடும்பத்தின் பரவணி. பண்டா – செல்வா உடன்பாட்டை அன்றைய தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜிஜி பொன்னம்பலம் சிங்கள – பவுத்த பேரினவாதிகளை விட மிகவும் மூர்க்கத்தனமாக எதிர்த்தார். தமிழ் அரசுக் கட்சி தமிழ்மக்களை வட – கிழக்கு மாகாணங்களுக்குள் முடக்கப் பார்க்கிறது எனக் கடுமையாக விமர்ச்சித்தார். தமிழர்கள் பருத்தித்துறை தொடக்கம் தேவேந்திரமுனை வரை சுதந்திரமாக வாழும் உரிமை வேண்டும் என்றார். வெளிநாடுகளில் இருந்து கொண்டு கஜேந்திரகுமாரின் கட்சிக்கு பணம் கொடுக்கும் போலிப் புலி ஆதரவாளர்கள் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பழைய வரலாற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
13 திருத்தச் சட்டத்தை யாரும் முழுதாக ஏற்றுக் கொள்ளவில்லை. அது சட்டமான போது அதில் இருந்த குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக அதன் பொதுச் செயலாளர் அ. அமிர்தலிங்கம், தலைவர் மு.சிவசிதம்பரம் மற்றும் இரா. சம்பந்தன் அன்றைய இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்திக்கு ஒக்தோபர் 28, 1987 அன்று ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தார்கள் (https://sangam.org/letter-pm-rajiv-gandhi-tulf-13th-amendment/). அதையிட்டுக் கவனம் எடுப்பதாக இராசீவ்காந்தி சொல்லியிருந்தார். ஜே.ஆர். ஜெயவர்த்தனாவை தில்லிக்கு அழைத்து பேச்சு வார்த்தையும் நடத்தினார். ஓரு குறிப்பிட்ட காலத்துக்குள் இலங்கை அரசு மாகாண சபைகளுக்கு மேலதிக அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் என்ற உறுதிமொழியை தில்லி பெற்றுக் கொண்டது. ஆனால் அது நடைமுறைப் படுத்தப்படவில்லை.
2013 -2018 வரை இயங்கிய வட மாகாண சபையில் முதலமைச்சரின் ஆட்சிக்கு ஆளுநர்கள் முட்டுக் கட்டையாகவோ தடையாகவோ இருந்ததில்லை.
13 திருத்தத் சட்டத்தில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட காணி அதிகாரங்கள், பொலீஸ் மற்றும் சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப் படுத்தி ஆளுநருக்குப் பாரப்படுத்தியுள்ள நிறைவேற்று அதிகாரத்தை மாகாண சபையின் அமைச்சு வாரியத்துக்கு பாரப்படுத்தி, பொதுப் பட்டியலை இல்லாது செய்து, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மத்திய அரசால் திரும்பப் பெறமுடியாது என்ற உத்தரவாதம் இருக்குமேயானால் மகாண சபை இணைப்பாட்சி அம்சங்கள் கொண்ட ஒரு அமைப்பாக இருக்கும்.
நொவெம்பர் 1987 இல் 13 திருத்தச் சட்டம் செல்லுபடியாகுமா இல்லையா என உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. நீதியரசர் ஆர்.எஸ். வனசுந்தர 13 ஆவது திருத்தம் 1978 ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்கு முரணானது ஆகையால் அது பொதுமக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பிற்கு விடப்பட வேண்டுமென்று தீர்ப்பளித்திருந்தார். அவரது நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு நீதியரசர்கள் ஓ.எஸ்.எம். செனவிரத்ன, எல்.எச்.டீ. அல்விஸ், எச்.ஏ.ஜீ.டீ. சில்வா ஆகியோர் தீர்ப்பளித்தனர். பிரதம நீதியரசர் எஸ். சர்வானந்தா, அரசியலமைப்பிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ 13 ஏ முரண்பாடாக இல்லை என்பதால் அதனை சட்டமாக்குவதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படுவது போதுமானதால் பொதுமக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு அவசியமில்லை என்று பிரதம நீதியரசர் எஸ். சர்வானந்தா, நீதியரசர்கள் பி. கொலின் தோமி, ஈ.ஏ.டி. அத்துகோரள, எச்.டி.
தம்பையா ஆகியோர் தீர்ப்பளித்திருந்தனர்.
இதன்போது 13 சட்ட திருத்தம் நிறைவேறப் பொதுமக்கள் வாக்கெடுப்பு வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் இடத்தில் ஒன்பதாவது நீதியரசர் K.A.P. இரணசிங்கி இருந்தார். அவரும் தனது தீர்ப்பில் பொதுமக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பிற்கு விடப்பட வேண்டுமென்று தீர்ப்பளித்திருந்தார். ஆனால் சட்ட வரைவிலுள்ள சில சரத்துக்கள் நீக்கப்பட்டால் 13 ஆவது சட்ட திருத்தத்தைத் தான் ஆதரிப்பதாகத் தீர்ப்பளித்தார். இதன் காரணமாக 13 சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக 5 நீதியரசர்களும் எதிர்த்து 4 நீதியரசர்களும் தீர்ப்பளித்ததால் அது நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
எனவே 13 சட்ட திருத்தம் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை மீறவில்லை என்ற தீர்ப்பு அரும்பொட்டில்தான் நிறைவேறியது. இந்தத் திருத்தத்தில் தமிழ்மொழியும் ஒரு உத்தியோக மொழி, ஆங்கிலம் இணைப்பு மொழி என்ற சரத்தும் உள்ளடக்கபட்டது குறிப்பிடத்தக்கது. எனவே 13 ஏ திருத்தச் சட்டம்தான் தமிழ்மக்களது சிக்கலுக்கு நாட்டின் அரசியலமைப்பில் இன்று உள்ள ஒரே பாதுகாப்பாகும். அதிகாரப் பகிர்வை (devolution) வழங்கும் ஒரே சட்ட திருத்தம் 13 மட்டுமே.
13 சட்ட திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு விட்டபோது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களில் இருவரைத் தவிரப் பிற உறுப்பினர்களின் வாக்குகளால் சட்டமாக்கப் பட்டது. பிரதமர் பிரேமதாச முரண்பாடுகள் இருப்பதாகக் கூறினாலும் எதிர்க்காமல் ஆதரித்துப் பேசி ஆதரவாக வாக்களித்தார். விவசாய உணவு அமைச்சராக இருந்த காமினி ஜயசூரிய நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்தார். சிறில் மத்யூ எதிராக வாக்களித்தார். அவ் வேளை பாராளுமன்றத்திற் தமிழர் விடுதலைக் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்த எவரும் இருக்கவில்லை. (நாட்டுப் பிரிவினைக்கு ஆதரவளிப்பதில்லை என 6வது திருத்தச் சட்டத்திற்கு இணங்கச் சத்தியம் செய்து மீண்டும் பதவிப் பிரமாணம் செய்யாதபடியால் பாராளுமன்ற உறுப்புரிமையைப் 17 உறுப்பினர்கள் இழந்திருந்தனர்.ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அதை முழுமையாக எதிர்த்தது. மக்கள் ஐக்கிய முன்னணி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவும் எதிர்த்தார். பாராளுமன்றத்திற்கு வெளியில் ஜே.வி.பி. எதிர்த்தது. செல்லையா இராஜதுரை ஏற்கனவே கட்சிமாறி ஐக்கிய தேசிய அரசில் அமைச்சராக இணைந்திருந்தார்.
ததேகூ இன் தலைவர் சம்பந்தர் தமிழ்மக்களது இலட்சியம் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வரும் இணைந்த வடக்கு, கிழக்கில், தங்களைத் தாங்களே ஆட்சி செய்யக் கூடிய வகையிலும், தங்களின் தலைவிதியை தீர்மானிக்க கூடிய வகையிலும், மீளப்பெறமுடியாத அதிகாரப் பகிர்வு செய்யப்பட்டு, சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என்பதாகும். இதில் மாற்றமில்லை.
13 ஏ ஒரு கோவணம் என்று வைத்துக் கொண்டாலும் பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டு இருக்கிற கோவணத்தை பறிபோகவிட முடியாது. அரசியல் என்பது ஒரு தெரிவு சரிவராவிட்டால் இரண்டாவது தெரிவைக் கைக்கொள்ளும் இராசதந்திரமாகும். இணைப்பாட்சி தெரிவு இன்று சாத்தியம் இல்லை என்றால் அடுத்த தெரிவான அதிகாரப் பரவலாக்கலை (13ஏ) முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கேட்பதாகும்.
இந்தியப் பிரதமர் மோடி மார்ச் 13, 2015 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது “கூட்டுறவு கூட்டாட்சியில் உறுதியான நம்பிக்கை கொண்டவன்” என்று கூறியிருந்தார். இந்தியாவிலும் இதே கோட்பாட்டை – ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் கடைப்பிடித்து வருவதாக – பேசி வருகிறார். 13 ஆவது திருத்தம் பற்றிக் குறிப்பிடுகையில் “13 ஆவது திருத்தத்தை விரைவாகவும் முழுமையாகவும் அமுல்படுத்துவதும் அதற்கு அப்பால் செல்வதும் இந்தச் செயல்முறைக்கு பங்களிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
13ஏ பற்றிய குழப்பத்துக்குக் காரணம் ரெலோ அடைக்கலநாதன், புளட் சித்தார்த்தன், தமிழ் மக்கள் கூட்டணித் தலைவர் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர் சிறிகாந்தா போன்றோர் தொடக்கத்தில் பிரதமர் மோடிக்கு அனுப்ப இருந்த கடிதம் ஆகும். அந்த வரைவைத் தாங்களே தங்களுக்குள் பேசி தயாரித்துவிட்டு அதில் இரா.சம்பந்தன் ஐயா கையெழுத்து இடவேண்டும் என்ற கேட்ட பொழுதுதான் “கட்சியைக் கேளாமல் கையெழுத்துப் போட மாட்டேன்” என்று அவர் மறுத்தார்.
இதன் பின்னர்தான் தமிழ்மக்களது வேட்கை, அவர்கள் கொடுத்த ஆணை சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித் தீர்வு என முன்னைய கடிதம் திருத்தி அமைக்கப்பட்டது. அந்தக் கடிதம்தான் சென்ற மாதம் பிரதமர் மோடிக்கு இலங்கைக்கான இந்தியத் தூதர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் ஆகும்.
இது தெரிந்தும் தனது அரசியல் இலாபத்துக்கு ஆக அந்தக் கடிதம் 13 ஏ திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்த் தலைவர்கள் இந்தியாவிடம் கேட்கிறார்கள் எனக் கஜேந்திரகுமார் பரப்புரை செய்கிறார்.
அதே நேரம் அதே 13 சட்டத்தின் கீழ் உருவாகிய மாகாண சபைத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் எனத் திருவாய் மலர்ந்துள்ளார். 2013 இல் நடந்த மாகாணசபைத் தேர்தலை புறக்கணித்த கஜேந்திரகுமார் இரவோடு இரவாக தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். அது வரவேற்கத்தக்கது. ஆனால் ஒருபுறம் ஒற்றையாட்சி அரசமைப்பின் கீழ் இயற்றப்பட்ட 13 ஆவது சட்ட திருத்தத்தை கடுமையாக எதிர்த்துக் கொண்டு மறுபுறம் அதே 13 ஏ உருவாக்கிய மாகாணசபைத் தேர்தலில் போட்டி போட முடிவு செய்திருப்பது முரண்பாடாகும்.
தமிழ் அரசுக் கட்சியைப் பொறுத்தளவில் 13 ஏ ஒரு தொடக்கப் புள்ளி எனக் கருதுகிறது. பசிக்கிறவனுக்கு “அமாவாசைக்கு வா, பத்துவகைக் கறியோடு சோறு போடுகிறேன்” என்று சொல்லாமல் பழைய சோறும் பச்சடியும் இருக்குது சாப்பிடு எனக் கொடுப்பதே அவனது பசியைப் போக்க ஒரே வழி.
13 ஆவது திருத்தத்தை தமிழ் அரசுக் கட்சி நிராகரிக்கவில்லை. ஆனால் 13 க்கு அப்பால் சென்று 13+ தருவேன் என்று மகிந்த இராசபக்ச பல இடங்களில், பான் கீ மூன் உட்பட பலருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வற்புறுத்துகிறது.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி எப்போதும் எதிர்மறை அரசியல் செய்து பழக்கப்பட்ட கட்சி. அந்தப் பரவணியில் ஊறிய கட்சி. பண்டா – செல்வா உடன்படிக்கையை சிங்கள – பவுத்த கடும்போக்காளர்களை விட மூர்க்கத்தனமாக எதிர்த்த கட்சி. தமிழர்களுக்கு ஒரு பல்கலைக் கழகம் திருகோணமலையில் அமைய வேண்டும் எனத் தமிழ் அரசுக் கட்சி கேட்டபோது, இல்லை யாழ்ப்பாணத்தில் இந்துப் பல்கலைக் கழகம் வேண்டும் எனக் கேட்டவர் ஜிஜி பொன்னம்பலம் அவர்கள். கடைசியில் பல்கலைக் கழகம் திருகோணமலையிலும் இல்லை யாழ்ப்பாணத்திலும் இல்லை என்று ஆனது.
சோல்பரி ஆணைக்குழு முன் தோன்றிய ஜிஜி பொன்னம்பலம் ஐம்பதுக்கு ஐப்பது கேட்டு 9 மணித்தியாலங்கள் வாதாடினார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பெரும்பான்மை 68% சிங்களவர்களை சிறுபான்மை ஆக்குவது மக்களாட்சி முறைமைக்கு எதிரானது என சோல்பரி ஆணைக்குழு தெரிவித்தது. ஜிஜி பொன்னம்பலம் நாட்டின் குடிமக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்கு 23% (1946) பிரதிநித்துவம் கேட்டிருக்கலாம். அது கிடைத்திருந்தால் குடியுரிமைச் சட்டம், வாக்குரிமைச் சட்டம், தனிச் சிங்களச் சட்டம் போன்ற சட்டங்களை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை சிங்களக் கட்சிகளுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.
கஜேந்திரகுமார் புதரில் இருக்கும் இரண்டு பறவைகளைப் (இணைப்பாட்சி) பிடிக்கும் ஆசையில் கையில் உள்ள ஒரு பறவையைப் (13 ஏ) பறக்க விடச் சொல்கிறார். ஆனால் கையில் இருப்பதை வைத்துக் கொண்டு புதரில் இருக்கும் இரண்டு பறவைகளைப் பிடிக்க முயற்சிப்பதுதான் அரசியல் சாணக்கியம் ஆகும். (மிகுதி அடுத்தவாரம்)