குரு அரவிந்தன்
தோளும் அழியும் நாளும் சென்றென,
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்றுக்
கண்ணும் காட்சி தௌவின, என் நீத்து
அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே,
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று, 5
யாங்கு ஆகுவென் கொல் யானே? ஈங்கோ
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின்
மறக்குவேன் கொல் என் காதலன் எனவே. – அம்மூவனார்
‘ஏன்டி என்னை இப்படிப் பார்க்கிறாய்?’ என்றாள் சுமதி.
‘இப்படி இளைச்சுப் போயிட்டியே, இந்த வெள்ளைநிற சுடிதாரில ஏஞ்சல் மாதிரியே இருக்கிறாய்..! ஜிம்முக்குப் போறியா..? நானும்தான் மாதக்கணக்காய் முயற்சி பண்ணுறேன், முடியல்லையே’ என்றாள் சினேகிதி.
நீண்ட நாட்களின் பின் சந்தித்த சினேகிதியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திண்டாடினாள் சுமதி.
சினேகிதி சொன்னது உண்மைதான், மெலிந்து தான் போயிருந்தாள் சுமதி,
அதற்குக் காரணம் ஜிம்முக்குப் போனதுதான் என்றும் இவளுக்குத் தெரியும், ஆனால் ஜிம்முக்குப் போனாலும் அங்கே உடற்பயிற்சியில் அவள் அதிகம் கவனம் செலுத்தவில்லை. அவள் மெலிந்ததற்கு அதுவல்லக் காரணம், அவளது கவனம் எல்லாம் வேறெதிலோ இருந்ததுதான். அங்கே அவள் சந்தித்த ஒருவன், நினைவிலும் கனவிலும் இவளைக் கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது தான் காரணம் என்று தோழியிடம் எப்படிச் சொல்வது.
இவளது தயக்கத்தை அவள் உடனே புரிந்து கொண்டாள்.
‘என்னடி யாரிடமாவது மாட்டிக்கிட்டாயா?’ என்றாள்.
இவள் தேவையில்லாமல் வெட்கப்பட்டாள்.
‘இப்போது தான் புரியுது, பாரதி சொன்ன வரிகளின் அர்த்தம், உணவு செல்லவில்லை, சகியே, உறக்கம் கொள்ளவில்லை அதுதானே?’ என்றாள்.
இவள் மௌனமாகத் தலையசைத்தாள்.
‘அப்புறம் என்னாச்சு?’
‘பாலும் கசந்ததடீ சகியே, படுக்கை நொந்ததடீ!’ என்று இவள் சொல்லிச் சோகமாகச் சிரிக்கச் சிநேகிதியும் சேர்ந்து சிரித்தாள்.
‘சங்ககாலத்தில இருந்து காதலர்கள் இதைத்தானே சொல்லிட்டு இருக்கிறார்கள். புதிதாக ஏதாவது இருந்தால் சொல்லேன்’ என்றாள்.
‘எந்தக் காலமாக இருந்தாலும் காதல் காதல்தானே, இது உடலும், உணர்வும் சம்பந்தமானது, அதனால்தான் ஒன்றையொன்று பாதிக்கின்றது’ என்றாள்.
‘உடலும், உணர்வுமா? என்ன சொல்கிறாய்?’ என்றாள் தோழி.
‘ஆமாம், காதல் உணர்வு ஏற்படுவதற்கு ஏதாவது ஒரு வகையில் ஈர்ப்பு ஏற்படவேண்டும், அதைத்தான் சொன்னேன்’ என்றாள்.
‘அப்படி என்றால் அது காதல் அல்ல, உடலையோ அல்லது அழகையோ பார்த்து மயங்குவது என்றால், காமம் என்றுதானே சொல்ல வேண்டும்’ என்றாள் சினேகிதி..
‘நீ எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக்கோ, ஆனால் உண்மை அதுதானே! இந்த ஈர்ப்புத்தான் அதன்பின் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வைக்கிறது. இருவருக்குமிடையே புரிந்துணர்வு இருந்தால்தான் அது உண்மையான காதல், புரியுதா?’ என்றாள்.
‘எனக்கு இன்னும் புரியலை, நீ என்ன சொல்ல வாறாய்?’
‘ஒருவருடைய உடம்பிலே, அழகிலே, குரலிலே, எழுத்திலே, இப்படி இன்னும் பல. சுருங்கச் சொன்னால் ஒருவருடைய நடையுடை பாவனையில் மற்றவர் கவரப்படுவது. சில சமயம் அது நல்ல நட்போடும் நின்று விடலாம், இல்லை என்றால் அதையும் தாண்டிக் காதலாக மாறித் திருமணத்திலும் முடியலாம். ஒருதலைக் காதலாக இருந்தால் அது தோல்வியில் முடிந்து விடும். ஓன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள் ‘சொல்லாத காதல் என்றுமே செல்லாத காதல்தான்!’ என்றாள்.
‘சபாஷ், காதலுக்கு விளக்கம் எல்லாம் சொல்லுமளவிற்கு முன்னேறிவிட்டாய், வயதுக் கோளாறினால் ஏற்பட்ட மாற்றம்தான் இது. கீப்பிட்ரப்!’ என்றாள் தோழி.
‘இந்த வயதில காதலிக்காமல் வேறு எப்ப காதலிக்கிறதாம், மனசுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் சில தேவைகள் இயற்கையானதுதானே!’ என்றாள் சுமதி.
‘எங்கே சந்தித்தாய் அவனை, எப்படி இருப்பான்?’ என்றாள் சினேகிதி.
‘ஜிம்முக்குப் போனேனா, அங்கே அவன்தான் பார்சனல் றெயினராய் வந்தான். முதல் நாளே அவனும், அவனுடைய சிரிப்பும் என்னை அப்படியே உறைய வெச்சிட்டுது. அன்று இரவு முழுதும் என்னால் தூங்கவே முடியவில்லையென்றால் பாரேன்’ என்றாள் சுமதி.
‘உன்னுடைய ஹிரோவை இப்பவே எனக்குப் பார்க்கணும் போல இருக்குடி’
சுமதி செல்போனை எடுத்து அவனுடன் எடுத்த செல்பியைக் காட்டினாள்.
படத்தில் பையன் அழகாக ஸ்மாட்டாகத்தான் இருந்தான். இவளுக்கு ஏற்ற ஜோடிதான். பக்கத்தில் நின்ற இவளது முகத்தில் ‘எனக்கே எனக்காய்’ என்பது போன்ற அப்படி ஒரு சிரிப்பு!
‘எப்படி இவனை மடக்கினாய் உன்னைப் போலவே அவனும் உன்னை விரும்பிறானா?’ என்றாள் சினேகிதி.
‘அவன் ஒவ்வொரு முறையும் அருகே மிக நெருக்கமாய் வரும்போதெல்லாம் மனசு திக்,திக்கென்று அடித்துக் கொள்ளும், எனக்கு உடம்பெல்லாம் கூசும். ஆனால் அவனோட பக்கமிருந்து எதிர்வினை எதுவுமே நடக்கலை, அவன் ரொம்பவும் மரியாதையோடு நடந்து கொண்டான்.’
‘நீ சொல்வதைப் பார்த்தால், அப்பாவியாய் இருப்பான் போல..?’ என்றாள் சினேகிதி.
‘அப்படித்தான் நானும் நினைச்சேன், அவன் விலகிவிலகிப்போக, துரத்திப் பிடிக்கணும்போல எனக்குள் ஒருவித வெறிதான் ஏற்பட்டது.’
‘அப்புறம் என்னாச்சு?’
‘இனியும் என்னாலே தாங்க முடியாது சாமி என்று ஒருநாள் சின்னதாய் ஒரு கேம் விளையாடிப் பார்த்தேன்’
‘என்னடி செய்தாய்?’ என்றாள் அதிர்ந்துபோன தோழி.
‘ரெட் மில்லிலே ஓடும்போது, அவன் அருகே வருவதை அவதானித்தேன், தற்செயலாக கால் தவறி விழுவது போல அவனது பக்கம் சரிந்தபோது, அருகே வந்த அவன் என்னைத் தாங்கிக் கொண்டான்.’
‘அது போதுமே உனக்கு’ என்றாள் சினேகிதி.
‘இல்லை, காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளணும் தெரியுமா, நான் கொஞ்சம் மயக்கமானமாதிரியும் நடிச்சேன்.’
‘அடப்பாவி, ஏண்டி அப்படிச் செய்தாய்?’
‘அவன் பாவமடி, அதை உண்மை என்று நம்பிப் பயந்து போயிட்டான். ஓடிப்போய் தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் தெளித்து விட்டான். ‘காலையில சாப்பிடலை அதுதான் கொஞ்சம் பலவீனமாயிட்டேன்’ என்று ஒரு பொய்யை எடுத்து விட்டேன். அதையும் நம்பி கன்ரீன்ல சாப்பாடும் வாங்கித்தந்தான்டி!’
‘உனக்கு எற்ற மாதிரி ஆடக்கூடிய நல்ல ஆளைத்தான்டி பிடிச்சிருக்கிறாய், அப்புறம் என்ன நடந்தது?’
‘சூட்டோடு சூடாய் ஒருநாள் டேற்ரிங்குக்குக் கேட்டேன் சம்மதித்தான்’ என்றாள் சுமதி.
‘ஓ..! இந்த விடயத்தில அவ்வளவு வேகமா நீ..?’
‘அவன் தன்னைப் பற்றிச் சொன்னான் நானும் என்னைப் பற்றிச் சொன்னேன். அவனோட இருக்கும்போதெல்லாம் சொர்க்கத்திலே இருப்பது போல மகிழ்ச்சியாய் இருந்திச்சு, அப்புறம் இரண்டாவது டேட்ரிங், இருவரும் கையைப் பற்றிக் கொண்டு, எதிர்காலம் பற்றிப் பேசிக் கொண்டு பூங்காவில் நீண்ட தூரம் நடந்தோம், நடந்தோம் என்று சொல்வதைவிட காற்றிலே மிதந்தோம் என்றுதான் நினைக்கின்றேன்.’
‘ஆகா, கதை ரொம்ப சுவாரஸ்சயமாக இருக்கிறதே’ என்றாள் சினேகிதி.
‘இனித்தான் சுவாரஸ்யமே இருக்கு, தனது காரில் கூட்டிவந்து என்னுடைய இருப்பிடத்தில் வண்டியை நிறுத்தினான். மெல்ல இருட்டியிருந்தது, இறங்குவதற்காகத் தயக்கத்தோடு அவனிடம் விடைபெற்றபோது, சட்டென்று என்னை அருகே இழுத்து முத்தம் ஒன்று தந்தான்டி, சொன்னால் நம்பமாட்டாய், அம்மாடி சொர்க்கத்திற்குப் போய்வந்தது போல, அந்தக்கணம் என்னையே நான் இழந்திட்டேன்’ என்றாள் சுமதி.
‘நல்ல முன்னேற்றம் தான், ஆனால் அதற்கேன் இப்ப சோகமாய் இருக்கிறாய், உங்களுக்குள் ஏதாவது ஊடலா?’ என்றாள் சினேகிதி.
‘அப்படி இருந்தாலும் நான் இருக்கிற நிலையில எப்படியாவது அவனிட்ட சரண்டர் ஆகிவிடுவேனே, என்னாலே முடியல்லையே’ என்றாள் சுமதி.
‘ஏன்டி இப்படி புலம்புறாய்?’
‘எல்லாம் நல்லபடியாய்தான் போய்க் கொண்டிருந்தது, ஆனால் யார் கண்பட்டுதோ, திடீரென நாங்கள் பிரியவேண்டி வந்திடிச்சு’ என்றாள் சுமதி.
‘பிரியவேண்டி வந்திச்சா, ஏன் என்னாச்சு?’
‘துபாயிலே நல்லதொரு வேலை கிடைச்சு அதனாலே அவன் திடீரெனப் போகவேண்டி வந்திடிச்சு. அவன் ஏற்கனவே விண்ணப்பித்திருந்த வேலையாம், நல்ல சம்பளம், காசேதான் கடவுள் என்று சொல்லிப் போயிட்டான். சீக்கிரம் வந்திடுவேன், கொஞ்சநாட்கள் தானே பொறுத்துக் கொள்ளமாட்டியா என்று கெஞ்சிக் கேட்டான்.’
‘அதுதானா, பிரிவுத்துயரால் வந்த சோகமா இது?’ தோழி பரிதாபப்படுவது போலக் கேலி செய்தாள்.
‘பல்லைக் கடிச்சிட்டு இருக்கத்தான் முயற்சி பண்றேன், மனசுக்கு சமாதானம் சொன்னாலும் இந்த உடம்பு கேட்குதில்லையே, ஆறுமாதம் கழிச்சுத்தான் அவனுக்கு விடுமுறை கிடைக்குமாம்!’ ஏக்கத்தோடு சொல்லிச் சிணுங்கினாள்.
‘புரியுது, இந்தப் பருவத்தில் காதலனைப் பிரிஞ்சு இருப்பது ரொம்பக் கஷ்டம்தான், அதுவும் ரொம்ப நெருக்கமாய் இருவரும் பழகிட்டு. உன்னுடைய ஏக்கப் பெருமூச்சைப் பார்க்கவே தெரியுதே..!’ என்றாள் சினேகிதி.
தோழிகள் இருவருக்கும் பேசுவதற்கு நிறையவே விடயங்கள் இருந்ததால், இரவு தூக்கம் வரும்வரை பேசிக்கொண்டே இருந்தார்கள். படுக்கையிலும் விட்ட கதையைத் தொடர்ந்தார்கள்.
‘ஏன்னடி உடம்பு இப்படிக் கொதிக்குது, ஜ+ரமா?’ என்றாள் அருகே படுத்திருந்த சினேகிதி.
‘உடம்பு சுடுகுதா? எனக்கா, ஏன்டி ஒருவேளை கொரோனா வைரஸ்ஸாக இருக்குமோ?’ என்று பயந்தாள் சுமதி.
‘என்னடி பயமுறுத்திறாய், அவனைப் பார்க்காமலே செத்துப்போயிடுவேனோ என்று பயப்படுறியா?’ என்றாள் சினேகிதி.
‘இல்லை நான் அதுக்குப் பயப்படவில்லை, அப்படி ஏதாவது என்றால் அவன் என்னை மறந்திடுவானாடி?’
‘உனக்குக் காதல் பைத்தியம் முத்திப்போச்சு, இப்போ பேசாமல் தூங்கு. அவன் சீக்கிரம் வந்திடுவான்.’ என்று சமாதானப் படுத்தினாள் சினேகிதி.
இருவரும் பேசிக் கொண்டே ஒரே போர்வைக்குள் படுத்தபடி தூங்கி விட்டார்கள். திடீரென விசும்பும் ஒலி கேட்டு சினேகிதி திடுக்கிட்டு விழித்துப் பார்த்தாள், அருகே சுமதிதான் தூக்கத்தில் விசும்பிக் கொண்டிருந்தாள்.
பாவம், அவளது நிலையை எண்ணித் தோழி பரிதாபப்பட்டாள். அமைதியாகத் தூங்கட்டும் என்று எதுவுமே பேசாமல் அவள் பக்கம் திரும்பி அவளை மெல்ல அணைத்து முதுகிலே வருடி விட்டாள் சினேகிதி.
தோழியின் மூச்சுக் காற்று இவளது காதுமடலில் படவே, தூக்கக் கலக்கத்தில் எதுவுமே புரியாத சுமதி என்ன நினைத்தாளோ தெரியவில்லை, காதலன் என்று நினைத்தோ என்னவோ, தோழியை இறுக அணைத்து அவளது கன்னத்தில்..!
‘என்னாச்சு இவளுக்கு, கனவு ஏதாவது கண்டிருப்பாளோ?’ என்று அவளது அணைப்புக்குள் அகப்பட்ட தோழி எதுவும் புரியாமல் வியப்போடு விழித்தாள்.
தூக்ககலக்கத்தில் இவளை இறுக அணைத்தபடி அப்படியே இருந்த சுமதி, சற்று நேரத்தில் வேகமாக மூச்சிரைப்பதையும் அதன் பின் மெல்ல மெல்ல அடங்கிப் போனதையும் இவள் உணர்ந்தாள்.
விடிந்த பின்பும் இவள் பக்கம் சரிந்து ஒரு கையால் இவளை இறுக அணைத்தபடி, இவளுக்குள் ஒடுங்கிப் போய் விழிமூடிப் படுத்திருந்த சுமதி, வாய்க்கு வந்தபடி காதலனின் பெயரைச் சொல்லி அவனுடன் கெஞ்சுவதுபோல, ஏதேதோ பிதற்றிக் கொண்டிருந்தாள்.
காதலனுக்குக் கிடைத்திருக்க வேண்டிய அதிர்ஸ்டம், இதமான அவளது அணைப்பில், போர்வைக்குள் கிடைத்த மென்மையான அவளது உடற்சூட்டில் என்னவென்று சொல்ல முடியாத, இதுவரை ஒருபோதும் அனுபவிக்காத ஒரு புதுவிதமான சுகத்தைச் சற்றும் எதிர்பாராமலே, அவளிடம் களவாடிய அந்த தருணத்தை அனுபவித்தாள் இந்தத் தோழி. காலம் செய்த கோலத்தில், புதுமையான இந்த அனுபவத்தைப் பெற்ற இவளும் ஒருவிதத்தில் அதிர்ஸ்டக்காரிதான்..!’