இலங்கை அரசாங்க தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவரான சமன் ரத்னப்பிரிய ஆகியோர்க்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இரு தடையுத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அவர்களது தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெப்பதை தடுத்து குறித்த தடையுத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தடை உத்தரவிற்கு தொழிற்சங்கங்கள் பல எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
குறித்த தொழிற்சங்கம் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்புக்கு எதிராக, சட்ட மாஅதிபரினால் விடுக்கப்பட்ட தடையுத்தரவு கோரிக்கைக்கு அமைய இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க இலங்கையில் தாதியர்களின் பணிப் பகிஷ்ரிப்பு நடவடிக்கை காரணமாக வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள அசௌரிய நிலை தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு எடுத்துக் கூறி, அறிக்கை சமர்ப்பித்திருந்தாலும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கை என்றே எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
எனினும் சட்ட மா அதிபரின் கோரிக்கையை ஏற்ற கொழும்பு மாவட்ட நீதிமன்றம், தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுத்து, அரச தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவருக்கு எதிராக இவ்வாறு தடையுத்தரவுகளை வழங்கியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல், சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் மற்றும் உதவி வைத்திய சேவைகளில் ஈடுபடும் 18 சுகாதார தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பணிப் புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர் என்பதும் இந்த போராட்டத்திற்கு ஏனைய பல தொழிற்சங்கங்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.