கனடாவின் தலைநகரில் கடந்த மூன்று வாரங்களாகத் தொடரும் ‘சுதந்திர ஊர்வலம்’ என்னும் பெயர் கொண்ட கனரக வாகன சாரதிகள் மற்றும் கனரக போக்குவரத்து நிறுவன உரிமையாளர்களின் ஆர்ப்பாட்டம் கனடாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாக கருதப்படும் இந்த நாட்களில் அரசியல் ரீதியாக முதலில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் கொன்சர்வேர்ட்டிவ் கடசியின் தலைவருமான எரின் ஓ டுல் அவர்களை ‘ காலி’செய்தது. இவ்வாறாக மூன்று வாரங்களாகத் தொடரும் இந்த ‘சுதந்திர ஊர்வலம்’ என்னும் பெயர் கொண்ட கனரக வாகன சாரதிகள் மற்றும் கனரக போக்குவரத்து நிறுவன உரிமையாளர்களின் ஆர்ப்பாட்டம் ஒட்டாவா நகரத்தின் காவல்துறைத் தலைவரையும் ‘காலி’ செய்கின்றது என்ற செய்தி தற்போது வெளியாகின்றது.
55 வயதான திரு ஸ்லோலி, ஓட்டாவா காவல்துறைத் தலைவராகப் பதவியேற்பதற்கு முன்பாக ரொறன்ரோ நகரத்தின் காவல்துறையின் உதவித் தலைவராகவும் விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கடந்த 19 நாட்களாக கனடாவின் தலைநகரின் மையப்பகுதியை முடக்கிய வண்ணம் உள்ள ‘சுதந்திர ஊர்வலம்’ என்னும் பெயர் கொண்டதடுப்பூசி எதிர்ப்பு ஆணை எதிர்ப்புக்களைக் கையாண்டதற்காக பெருமளவு விமர்சனங்களை எதிர்கொண்டார்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக “கடைசி முயற்சியாக” அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்திய இந்த வேளையில் காவல்துறை தலைமை அதிகாரியின் பதவி விலகல் இடம்பெறவுள்ளது
திரு ஸ்லோலி இன்று ஒட்டாவா போலீஸ் ஆணைக்குழு கூட்டத்திற்குப் பிறகு தனது பதவி விலகல் தொடர்பான முடிவை உறுதிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் கனேடிய ஆண்கள் உதைப்பந்தாட்ட வீரரான திரு ஸ்லோலி, டொராண்டோ காவல்துறையில் இணைந்து மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பணியாற்றி பின்னர் 2019 ஆம் ஆண்டு ஒட்டாவா பொலிஸ் சேவையில் பொறுப்பேற்றார். ஒட்டாவாவில் அவரது ஒப்பந்தம் 2024 இல் முடிவடைய இருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அவரது வாழ்க்கை முழுவதும், அவர் ஒரு முற்போக்கான சீர்திருத்தவாதியாக நற்பெயரைப் பெற்றார், போலீஸ்-சமூக உறவுகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணித்தார்.
இருப்பினும், “சுதந்திர ஊர்வலம் ” எதிர்ப்புக்களின் காரணமாக ஒட்டவா நகர் வாழ் மக்களின் எதிர்ப்புக்களைச் சந்தித்தார். பின்னர் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். போராட்டத்தை அடக்கும் முயற்சியாக ஒட்டாவா நகர சபையும் ஒரு வாரத்திற்கு முன்பு அவசர நிலையை பிரகடனப்படுத்தியது.
கடந்த வாரம் திரு ஸ்லோலி தனது பதவியை தொடர்வதில் உறுதியாக இருந்தார்,என்றும் அவர் பதவி விலகும் எண்ணம் “முற்றிலும் இல்லை” என்றும் அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
“நான் இங்கு ஒரு வேலை செய்ய வந்தேன், அந்த வேலையை நான் முழுவதுமாக முடிக்கப் போகிறேன்,” என்று அவர் கூறினார்.
இவ்வாறான நிலையில் ஒட்டாவா நகரின் காவல்துறை தலைமை அதிகாரி பதவிக்கு நியமனம் செய்ய ஒருவரும் முன்வரமாட்டார்கள் என நகரத்தின் மேயர் அவர்கள் ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார்.