சிவா பரமேஸ்வரன் & கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி
இலங்கை, பர்மா, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, பூட்டான் போன்ற நாடுகளில் சமூகத்தில் பிக்குமார்களுக்கு உயர்ந்த இடம் அளிக்கப்படுவதும், அவர்கள் புத்த பிரானின் அறிவுரைகளைப் பின்பற்றி தானம் பெறும் பாத்திரத்தை வீதி வழியாக எடுத்துச் சென்று அளிக்கப்படும் உணவை பெற்றுக் கொண்டு வாழ்க்கையை நடத்துவது அறியப்பட்ட ஒன்று. ஆனால் கடுமையான பௌத்த நிலைப்பாட்டைக் கொண்டுள்ள இலங்கை அரசு, பிக்குமார்களைப் போலவே தான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நாடு நாடாக, அமைப்பு அமைப்பாக, ஐயா சாமி தருமம் செய்யுங்கள், முடிந்தளவுக்கு தானமோ அல்லது கடனோ அளித்து எமக்கு உதவுங்கள் என்று கோரி உலா வந்துகொண்டிருக்கிறது.
தற்போது இலங்கையிலிருந்து கடன் கேட்டு வருகிறார்கள் என்றாலே, நாடுகளும் பன்னாட்டு நிதி நிறுவனங்களும் கதவைப் பூட்டிவிட்டு காணாமல் போகும் நிலையை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளன. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது, வாங்கிய கடன்களை குறித்த நேரத்திற்கு திருப்பியளிப்பதற்கான நிதியாரங்கள் இலங்கையில்லை. இரண்டாவது, போர் முடிந்து 12 ஆண்டுகளுக்கு பிறகும் பன்னாட்டுச் சமூகம் மற்று நிதி வழங்கும் அமைப்புகளுக்கு இலங்கை தொடர்ச்சியாகக்கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை. அதிலும் குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பான விஷயங்கள், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், கோவிட் பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடல்களை எரித்தது போன்ற பல விஷயங்களில் பன்னாட்டுச் சமூகம் இலங்கை மீது மிகவும் கடுப்பில் உள்ளது என்பது உண்மை.
அடிப்படையில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி விவேகபூர்வமற்ற பேரினப்பொரளாதாரக் கொள்கைத் தெரிவுகளால் விளைந்த ஒன்றாகும். மாறாக பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் (சகடோட்டங்கள் – Business cycle) காரணமாகவோ அல்லது கோரோனா பெருந்தொற்று காரணமாகவோ விளைந்த ஒன்றல்ல.
வெளிநாட்டுக் கடன்களைப் பெற்று பொருளாதார விருத்திக்கு பங்களிக்கவல்ல உட்கட்டுமானதிட்டங்களில் முதலீடு செய்வது உள்நாட்டில் நிதிவசதிகள் குன்றிய நாடுகள் கைக்கொள்ளும் பொதுவான உபாயம் தான். ஆனால் பெரும் பொருட் செலவில் உருவாக்கப்படும் உட்கட்டுமானங்கள் – அவை பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் உற்பத்திப் பெருக்கத்திற்குப் பங்களித்து அந்நியச் செலாவணியைப் பெறபங்களிப்பதன் ஊடாக நீண்டகாலரீதியில் ஒரு நாட்டின் பொருளாதார விரிவாக்கத்திற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும்.
வெள்ளையானைகள்
அது மட்டுமன்றி ஒரு அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டக் குறைநிலையை இட்டு நிரப்பவும் வெளிநாடுகளிலிருந்து கடன்கள் பெறப்படும். மேலும் அவ்வப்போது ஏற்படும் அந்நியச் செலாவணிபற்றாக்குறைகளைப் பூர்த்தி செய்யவும் கடன்கள் வாங்கப்படுகின்றன. இலங்கையைப் பொருத்தமட்டில் 2009இல் உள்நாட்டு யுத்த முடிவின் பின்னர் மாபெரும் உட்கட்டுமான திட்டங்களுக்கு ஏராளமான கடன்கள் வாங்கப்பட்டன. குறிப்பாக மாகம்புர துறைமுகம், மத்தளைராஜபக்ச விமான நிலையம் தாமரைகோபுரம், தெற்கு அதிவேக வீதி, விமான நிலைய வீதி என்பன மிகப்பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டன. ஆனால் அவை வெள்ளையானைகளாக மாறி பெரும் பொருளாதார சுமையை உருவாக்கியுள்ளன. அதிவேக வீதிகளில் மக்கள் பயணிப்பதால் வருவாய் கிடைத்தாலும் டொலர் உள்வருகைக்கான மூலாதாரம் அதில் கிடையாது.
மாகம்புர துறைமுகத்தை நிர்வகிக்க முடியாது சீனாவுக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட்டது. மத்தளை விமான நிலையத்தில் விமான இயக்கங்கள் நடைபெறுவது இல்லை. அதுதானியக் களஞ்சியமாகப் பயன்படுத்தப்படும் நிலை உருவாகி பெரும் நகைப்பிற்கிடமளித்தது. அது மட்டுமின்றி பெரியளவில் பேசப்பட்ட தாமரை கோபுரம் இயக்கமின்றிக் கிடக்கிறது. ஆனால் இவை போன்ற திட்டங்களுக்கு பெறப்பட்ட கடன்கள் நீண்டகால ரீதியில் செலுத்தப்பட வேண்டியுள்ளன. இவற்றிற்கும் மேலாக இலங்கையரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட நிதிப்படுத்தலுக்காகவே ஏராளமான சர்வதேச இறைமைக் கடன் முறிகள் (Sovereign bonds – அரச கடன் பத்திரங்கள்) ஊடாகக் கடன்கள் பெறப்பட்டன. இவை எதிர்வரும் காலங்களில் வருடாந்தம் சுமார் 4- 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மீளச் செலுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளன. கடந்த காலங்களிலே இவ்வாறு கடன் தவணைகள் முதிர்ச்சியடையும் போது அவற்றை இலங்கை இன்னொரு புதிய கடனைப்பெற்று மீளச் செலுத்தியிருக்கிறது.
மறுபுறம் ஏற்றுமதிகள் ஊடாகவும் இலங்கையர்கள் வெளிநாடுகளிலிருந்து டொலர்களாக உழைத்தனுப்பம் பணம் மூலமாகவும், சுற்றுலாப் பயணிகள் வருகை காரணமாகவம் இலங்கைக்குள் அந்நியச் செலாவணி வந்துகொண்டிருந்தது. இலங்கையின் பணச்சந்தையிலும் கணிசமான குறுங்கால வெளிநாட்டு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கொரோனாவுக்கு முன்பிருந்தே இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மந்தமாகஇருந்துவந்த நிலையில் இலங்கை அரசாங்கம் தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி வளர்த்தெடுக்கும் கனவுத்திட்டத்தில் ஏற்றுமதிகளின் ஊக்குவிப்புக்கு அக்கறை காட்டாத நிலையில் இறக்குமதிகளைக்கட்டுப்படுத்தி டொலர்களின் வெளிச் செல்கையை தடுக்க முனைந்தது.
இறக்குமதி செய்ய இயலாதநிலை
இலங்கையின் ஏற்றுமதிகளில் விவசாய விளைபொருள்கள் தவிர்ந்த ஏனையவற்றின் இறக்குமதி உள்ளடக்கம் மிக அதிகமாகும் அதாவது கைத்தொழில் உற்பத்திக்கு அவசியமான மூலப்பொருள்கள், இடைநிலைப் பொருள்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்பட வேண்டும் இதனால் இறக்குமதிகள் இல்லாமல் ஏற்றுமதி செய்ய இயலாது. இது மிகவும் முக்கியமானது. இதை அரசு ஏன்கவனத்தில் எடுக்கவில்லை அல்லது `அனைத்தும்யாம் அறிவோம்` என்கிற எண்ணத்தில் உள்ளதா என்பது தெரியவில்லை.
இலங்கை ரூபாயின் பெறுமதி ஊசலாடஆரம்பித்த உடன் இலங்கையின் பணச்சந்தையில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டவர்கள் தமது முதலீடுகளை பெருமளவில் மீளப்பெற்றுக் கொண்டனர். பங்குச் சந்தையிலும் அதே போக்கு அவதானிக்கப்பட்டது. நாணயமாற்றுவீத வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த மத்தியவங்கி அதனை நிலையான ஒரு பெறுமதியில் (198 ரூபாய்) நிறுத்தி அந்த நிலையான வீதத்தில் கொடுக்கல்-வாங்கல்களை செய்ய வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் நிர்ப்பந்தித்தது. ஆனால் மத்தியவங்கி அந்த வீதத்தில் வணிகவங்கிகளுக்கு டொலரை வழங்குவதையும் நிறுத்திக்கொண்டது. இதனால் நாட்டின் இறக்குமதியாளர்கள் மிகப்பெரிய நெருக்கடிளை எதிர்கொள்ள நேர்ந்தது. இதுவும் இறக்குமதிப் பொருள்களின் விலைகள் நாட்டில் துரிதமாக அதிகரிக்கவும் பாரிய தட்டுப்பாடுகள் ஏற்படவும் காரணமாகியது.
வெளிச் சந்தையில் 240 ரூபாய்க்கு டொலர் விற்பனை செய்யும் நிலையில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கொள்வனவு வீதமாகிய 198 ரூபாய்க்கு வங்கிகளூடாக தங்களது உழைப்பை நாட்டுக்குள் கொண்டுவர எவரும் விரும்பவில்லை. இதனால் நாட்டில் முறைசாராத வழிகள் ஊடாக டொலர் வரவுகள்ஏற்பட்டன. இதனைத்தடுக்க அரசாங்கம் சட்டங்களைக் கொண்டுவந்த போதிலும் நாட்டுக்குள் வரும் டொலர்களைஅதிகரிக்க அவற்றால் இயலவில்லை.
சத்திர சிகிச்சைக் குகளிம்பு பூசும் வேலை
இப்போதைய உடனடி டொலர் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவசியமான உள்வருகையை அதிகரிக்க வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் உதவியை நாடுவது குறித்தும் அவ்வாறு கொண்டுவருபவர்களுக்கு சலுகைகளை வழங்கி ஊக்குவிப்பது குறித்தும் நாட்டின் நகர்ப்புறங்களில் உள்ள முக்கிய நிலப்பகுதிகளில் மாடிமனைத்திட்டங்களை உருவாக்கி விற்பதன் மூலம் நாட்டுக்குள் டொலரை வரவழைப்பது பற்றியும் இப்போது பேசப்பட்டு வருகிறது.
இவை அனைத்தும்சத்திரசிகிச்சை தேவைப்படும் ஒரு நாட்பட்ட நோயை களிம்புதடவி சரிசெய்ய முடியும் ஒரு முயற்சியாகவே அமையும். நாட்டின் பொருளாதாரத்தைமேம்படுத்த அத்தியாவசியமாகத் தேவைப்படும் கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்ளாமலும் ஏற்றுமதியை நோக்கிய பொருளாதாரக் கொள்கையொன்றை முன்னெடுக்காமலும் இலங்கையினால் இப்போதைய நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடியாது.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் அவசியமான நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு துறைசார்ந்த நிபுணர்களும் கூறுகின்ற போதிலும் அது`செவிடன் காதில் ஊதிய சங்காகவே` உள்ளது. அதுமட்டுமன்றி நாட்டில் எடுக்கப்பட்டுள்ள வேறுசில நடவடிக்கைகளும் பொருளாதாரத்தை கணிசமாகப் பாதித்துள்ளன.
அண்மைக்காலங்களில் இலங்கை மத்திய வங்கி பெருந்தொகைப் பணத்தை அச்சிட்டு வெளியிடுவதன் மூலம் அரசாங்கத்தின் நிதித்தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது அதனால் நாட்டின் பணவீக்கம் அண்மைய மாதங்களில் அதிகரித்தது மேலும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட தட்டுப்பாடுகள் காரணமாக அனைத்துபொருள்களின் விலைகளும் சடுதியாக உயர்வடைந்துள்ளன. இறக்குமதி உணவுப் பொருள்களின் விலைகள் மாத்திரமன்றி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விலைகளும் அதிகரித்துள்ளன. இரசாயன உரங்களின்பயன்பாடு தடைசெய்யப்பட்டமை விவசாயத்துறை பற்றிய கேள்வியறிவுபடைத்த சாதாரண மனிதராலும் சரியென ஏற்றுக்கொள்ள முடியாது.
மக்களின் உணவுத்தேவைக்கான உற்பத்தியில் வீழ்ச்சி, அதனால் ஏற்படக் கூடிய அரசியல் பொருளாதார விளைவுகள் பற்றிய கரிசனை சிறிதளவுமின்றி தான் தோன்றித்தனமான எடுக்கப்பட்ட அந்த முடிவின் தீவிரத்தன்மை வெளிப்பட ஆரம்பித்தபோது அரசுவாலைச் சுருட்டிக்கொண்டு பின்னோக்கி நகர நேரிட்டது. இடைப்பட்ட அந்த சமயத்தில் உணவு உற்பத்தித்துறையில் கணிசமானளவு பாதிப்புகள் ஏற்பட்டுவிட்டன. அப்போது அதிகரித்த உணவுப் பொருட்களின் விலைகள் இன்னமும் குறையவில்லை. இத்தனை பிரச்சினைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ள நிலையிலும் பொதுமக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்த கரிசனைகள் பெரிதாக உரிய தரப்பினரால் வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் சில எதிர்க்கட்சி தலைவர்கள் தமது தரப்பிலிருந்து அரசிற்கு சில கருத்துக்களை முன் வைத்துள்ளனர். அதில் முக்கியமானதாக அரசு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் கோருவதாகும். இதன் மூலம் அரசிற்கு சுவாசிக்க சிறிது இடைவெளி கிடைக்கலாம், ஆனால் இதற்கு கடன் வழங்கிய நாடுகளும் நிறுவனங்களும் ஒருமித்து ஒப்புக் கொள்ள வேண்டும் அது கடினம் ஆனால் இயலாதது அல்ல.
பலவீனமானவர்கள் விளிம்பு நிலையிலுள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்கிறஎண்ணம் அரசிடம்இருப்பதாகத் தெரியவில்லை. இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது என்பதை அரசு உணர வேண்டும். அதேவேளை இறக்குமதிகளுக்கு தேவையான டாலர்கள் கையிருப்பு இல்லை. இருந்த டாலர்களை சவரின் பாண்டுகளுக்கு திருப்பியளிக்க அரசுபயன்படுத்தியது.
தற்போது மருந்துகளைக் கூட இறக்குமதி செய்ய முடியாத நிலையில் நாடு உள்ளது.
சீனாவை மட்டுமே நம்பிகாலத்தை ஓட்டிவிடலாம் என்று அரசு நினைத்தால், ஆப்ரிக்கநாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மற்றும் அரபுவசந்தம் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவை இலங்கையிலும் எதிரொலிக்கலாம்.
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி- மூத்த விரிவுரையாளர், பொருளாதார பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்