இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் யூலி சங் தெரிவிப்பு
இலங்கையில் என்னை வரவேற்ற அனைவருக்கும் எனது நன்றி. நான் பத்து வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளேன். அந்த நினைவுகளோடு எனது பணிக்காலத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் இலங்கையில் பணியாற்ற விரும்புகின்றேன். அத்துடன் கிரிக்கெட் விளையாட்டு பற்றி அறிந்து கொண்டு இலங்கையின் தேசிய அணியை மேலும் ஊக்குவிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளேன்.
இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார் இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் யூலி சங் அவர்கள். தனது ஐந்து வயதில் கொரியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் குடியேறிய யூலி சங் அவர்கள் தற்போது அமெரிக்காவின் வெளியுறவுத் திணைக்களத்தின் முக்கிய பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள யூலி சங் நேற்று சனிக்கிழமை கொழும்பை சென்றடைந்தார். அங்கு டுவிட்டர் காணொளியில் தனது பதிவை வெளியிட்டுள்ளார்
அதில் அவர் கூறியிருப்பதாவது
என்னைப்பொறுத்தமட்டில் இலங்கைக்கு மீண்டும் வருகைதருவது கனவொன்று நனவானதைப்போன்ற விடயமாகும்.
நான் பத்து வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகைதந்திருந்தேன். அந்த நினைவுகள் இப்போதும் தெளிவாகவும் புதிதாகவும் என்னுள் பதிந்திருக்கின்றன.
ஆச்சரியம் மிகுந்த இயற்கை அழகு, சுவையான உணவுப்பொருட்கள் மற்றும் வாசனைத்திரவியங்கள் புகையிரம் மற்றும் முச்சக்கரவண்டிகள், அவையனைத்திற்கும் மேலாக அப்போது நான் சந்தித்த இலங்கை மக்கள் காண்பித்த அன்பு உள்ளிட்ட அனைத்தும் நினைவிருக்கின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது இலங்கைக்கான தூதுவராகப் பதவியேற்பது எனக்குக் கிடைத்த கௌரவமாகும்.
அதனூடாக இலங்கையின் கலாசாரம், பாரம்பரியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மேலும் அறிந்துகொள்வதற்கு எதிர்பார்க்கின்றேன்.
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குடியேறிய மக்களின் முயற்சியினால் கடந்த இரு நூற்றாண்டு காலமாக நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் புத்தாக்கங்களை உள்வாங்கி அமெரிக்கா முன்னேற்றம் கண்டிருப்பதுடன் அதன் பொருளாதார வளர்ச்சிக்குப் பலரும் பங்களிப்புச்செய்திருக்கின்றார்கள்.
அந்த முயற்சி இலங்கைக்கான தூதுவர் என்ற ரீதியில் நான் ஆற்றவிருக்கும் பணியிலும் பிரதிபலிக்கும். அதன்படி இலங்கையிலுள்ள சிவில் சமூக அமைப்புக்கள், வர்த்தகத்துறையினர் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட தரப்புக்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதன் ஊடாக மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.
இவற்றுக்கு முன்னர் என்னைப் பற்றிய சில விடயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு விரும்புகின்றேன்.
அமெரிக்கப்பிரஜை என்ற ரீதியில் நான் முதலாவது தலைமுறையைச் சேர்ந்தவளாவேன். எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது எனது குடும்பம் கொரியாவிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தது.
ஆகவே பல்லினத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை என்பன எனக்கு மிகமுக்கியமான விடயங்களாக இருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
எனது குடும்பம் இலங்கை – அமெரிக்க சமூகத்தினர் பெருமளவிற்கு செறிந்துவாழும் பகுதியான கலிபோர்னியாவில் குடியேறியது.
இந்நிலையில் எமது செல்லநாய் மார்த்தாவுடன் எனது கணவர் மற்றும் மகனும் என்னுடன் இலங்கைக்கு வருகின்றார்கள்.
அதேபோன்று மலையேறல், நீச்சல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுக்களையும் பார்வையிடுவது எனக்குப் பிடித்த விடயமாகும்.
எனவே குறிப்பாக கிரிக்கெட் பற்றி அறிந்துகொள்வதற்கும் இலங்கையின் தேசிய அணியை ஊக்குவிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளேன்.
என்னை இலங்கைக்கு வரவேற்றமைக்கு நன்றி கூறுவதுடன் இயலுமானவரை உங்களில் பலரைச் சந்திப்பதற்கு ஆர்வத்துடன் இருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.