யா/சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மு.ப. 09:30 மணியளவில் நான்காவது நவீன திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் திரு. பா.பாலசுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில், இப்பாடசாலையின் பழையமாணவரும் லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தின் பிரதம குருவுமாகிய சிவஸ்ரீ ச.லம்போதரகுமாராசாமி குருக்கள் அவர்களின் நிதிப் பங்களிப்பில் தனது பாட்டன், பாட்டியாகிய சிவஸ்ரீ மு.குமாரசாமிக்குருக்கள், கு.வல்லவாம்பிகை தம்பதியினர் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட நான்காவது நவீன திறன் வகுப்பறையானது (Smart Panel) பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு.தி.ஜோன்குயின்ரஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இத்திறன் வகுப்பறையின் நினைவுப் பலகையை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வலிகாமம் வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.சி.முரளிதரன் அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்ததோடு கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட வித்தியாலயத்தின் பழைய மாணவரும் லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தின் பிரதம குருவும் இத்திறன் வகுப்பறையை அமைத்துத் கொடுத்தவருமாகிய சிவஸ்ரீ ச.லம்போதரகுமாராசாமி குருக்கள் அவர்கள் திறன் பலகையையும் திரைநீக்கம் செய்து வைத்ததோடு வைபவ ரீதியாக இயக்கியும் வைத்தார்.
அத்துடன் இத்திறன் வகுப்பறைக்குரிய உள்ளக வசதிகளையும் அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார். இங்கு கருத்துத் தெரிவித்த பிரதம விருந்தினர், மாணவர்கள் முதலில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கின்ற போது கல்வி தானாகவே அவர்களிடம் சேர்ந்துவிடும் என்றும் அதனால் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கம் சார்ந்த கல்வியை மாணவர்களுக்கு போதிக்க வேண்டும் எனவும் கூறினார். அத்துடன் வடமாகாணத்தில் உள்ள SLPS 3 ஐச் சேர்ந்த அனைத்து அதிபர்களும் தமக்கே உரிய தனித்துவத்துடன் பாடசாலைகளை அபிவிருத்தி செய்து நிர்வகித்து வருகின்றனர் எனவும் கூறினார்.
வித்தியாலய அதிபர் தனது தலைமையுரையில், உலகில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் மாணவர்களுக்குத் தேவையான நவீன தெழிநுட்பத்துடன் கூடிய கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அப்பொழுதுதான் எதிர்கால உலகிற்கு ஏற்ற மாணவர்களை உருவாக்க முடியும் எனவும் கூறினார். இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், அயல் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.