யாழ்ப்பாணம், மணற்காடு சவுக்கு மரக்காட்டினை மக்கள் பயன்பாட்டுக்குரிய மக்கள் மயப்படுத்தப்பட்ட சவுக்கு மரக்காடாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்க வாக்குறுதி வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களங்களின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் மக்களின் வாழ்வாதார தேவைக்குரிய காணிகளை விடுவிப்பது தொடர்பாக மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை 5 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மக்களினால் அமைக்கப்பட்ட மணற்காடு சவுக்கு மரக் காட்டினை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்கிற மக்களின் கோரிக்கையை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் , அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றதையடுத்து இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் மயப்படுத்தப்பட்ட வன வள கிராமமாக பிரகடனம் செய்வதனூடாக, அங்குள்ள சவுக்கு மரக்காட்டினை மக்கள் பராமரிக்க முடிவதுடன், வாழ்வாதார செயற்பாடுகளையும் மேற்கொள்ளக் கூடியதாக அமையும்.
அதேவேளை மணல் அகழ்வு இடம்பெறாத வகையில் மக்கள் இக்காட்டினை பராமரிக்க வேண்டியதும் பாதுகாக்க வேண்டியதும் அவசியம் எனத் தெரிவித்த அவர், இவ்விடயத்தில் அமைச்சின் ஒத்துழைப்பு இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.