களத்திலிருந்து நேரடியாக – பகுதி 1
நடராசா லோகதயாளன் & சிவா பரமேஸ்வரன்
சமைத்து உண்ணவும் வழியின்றி வாங்கி உண்ணவும் வசதியில்லை என்பது தான் இன்று இலங்கையின் தமிழர் தாயக பகுதியில் வறுமைக் கோட்டிற்கு கீழேயுள்ள மக்களின் யதார்த்தமான நிலைமையாகவுள்ளது.
இதில் போரினால் பாதிக்கப்பட்டு தமது சொந்தங்களை இழந்து குடும்பத்தலைவர் என்று யாருமின்றி, நீண்டகாலமாக சொல்லொணா துன்பத்தை எதிர்கொண்டு வரும் பெண்களின் நிலை இன்னும் மோசமாகவுள்ளது.
இலங்கை இருளில் மூழ்கியுள்ளது. ஆண்டி முதல் அரசன் வரை காலை எழுந்ததும் எரிபொருட்கள் வாங்க வரிசையில் இடம்பிடிப்பதே முதல் வேலையாகவுள்ளது. வாங்கிய கடனை திருப்பி வழங்க இயலாத அரசு, மேலும் கடன் கொடுக்க தயங்கும் நிறுவனங்கள், நாட்டின் தேவை மற்றும் அளவுக்கு கூடுதலான இராணுவம், வெற்றிலை, பித்தளை, உள்கட்டுமானம், வெளிக்கட்டுமானம், இல்லாத விஷயங்களுக்கு அமைச்சர்கள், குடும்ப ஆட்சி, அந்த ஆட்சியை எதிர்க்கத் துணிவில்லாத எதிர்க்கட்சிகள், என்று அடுக்கிக் கொண்டே போகக் கூடிய காரணங்களால் இன்று நாடு அனைத்து தரப்பிலிருந்தும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
பொருளாதார நெருக்கடியும், மனித உரிமைகள் தொடர்பில் ஐ நாவின் கிடுக்கிப் பிடியும் ஆட்சியாளர்களின் கழுத்தைப் பிடித்துள்ளது. பிரச்சனைகளுக்குத் தீர்வைத் தேடாமல், மேலும் மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதிலேயே அரசு முனைப்பாகவுள்ளது. ஏற்கெனவே மஞ்சள்தூள் தொடக்கம் மிளகாய்த்தூள் வரை அனைத்திற்கும் இறக்குமதி தடை. உள்ளூர் விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் ஏதுமின்றி உர இறக்குமதிக்கு தடை.
”இலங்கை இன்று குரங்கு கையில் கொடுத்த பூமாலை போன்றுள்ளது” என்று சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அன்றாடம் காலையில் உள்ளூர் பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் மின்வெட்டு குறித்த பட்டியல் வெளியாகிறது. முதல் நாளே இணையத்தில் அது வருகிறது. இந்நிலையில் `இளவரசு பட்டம் சூட்டப்பட்டுள்ள` நாமல் ராஜபக்ச நாட்டில் மின்சார நெருக்கடி ஏதுமில்லை அது ஒரு சிலரால் திட்டமிட்டு செய்யப்படும்ச் சதி என்று திருவாய் மலர்ந்துள்ளார். தந்தை பிரதமர், சித்தப்பா ஜனாதிபதி, பெரியப்பா மூத்த அமைச்சர், மற்றொரு சித்தப்பா நிதியமைச்சர் என்று சர்வ வல்லமை கொண்ட குடும்பத்து `இளவரசரால்` அப்படி `சதி செய்பவர்களை` அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியாதா?
முடியும்….ஆனால் முடியாது…..அதுதான் பதில்! ஏனென்றால் உண்மை சுடும்.
தலைநகர் கொழும்பு மற்றும் பெரும்பான்மையின மக்கள் வாழும் பகுதியிலேயே நிலைமை இப்படியென்றால், சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் நிலை எப்படியிருக்கும் என்பதை சுலபமாக கற்பனை செய்ய முடியும்.
இதற்கு சிறந்த உதாரணம் கடந்த புதன்கிழமை (9) அன்று யாழ். நகரின் காங்கேசந்துறை வீதியில் மட்டும் இயங்கும் 10ற்கும் மேற்பட்ட உணவகங்களில் 5 உணவகங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. இவ்வாறு உணவகங்கள் திடீரென மூடப்பட்டதனால் நகரில் உணவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் எரிவாயுத் தட்டுப்பாடு காரணமாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள 50 வீதமான உணவகங்கள் புதன்கிழமை இழுத்து மூடப்பட்டுள்ளது. நகரத்திலுள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர் தனது வேதனையை `உதயனிடம்` இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.
”நாள் ஒன்றிற்கு 500ற்கும் மேற்பட்டவர்களிற்கு உணவும் மேலும் 500ற்கும் மேற்பட்டோருக்குச் சிற்றுண்டி விற்பனையும் இடம்பெறும் எமது உணவகத்தில் என்னுடன் 11 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 8 பேர் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். எரிவாயு இன்மையால் உணவகம் மூடியதால் எப்போது எரிவாயு வரும் எப்போது திறக்கலாம் என்பது தெரியாது. அதனால் பணியாளர்களை ஊருக்கு அனுப்பவும் முடியவில்லை”.
இவை அனைத்தையும்விட கடையில் வேலை செய்யும் 10 பேருக்கும் தேநீர் ஊற்றக்கூட எரிவாயு இன்மையால் ஓர் மின்சார கெட்டிலை வாங்கினோம். சாப்பாட்டுக் கடை நடத்தும் எமக்கான உணவினை தேடி ஒவ்வொரு கடை கடையாக அலைந்து வேண்டி வருகின்றோம். பணம் இருந்தாலும் பொருள் இல்லை என்கின்ற அவலத்தை தற்போதுதான் சந்திக்கின்றோம் என்று கண் கலங்கினார் அந்த கடையின் உரிமையாளர்.
அன்றாட தினக் கூலியாக தோட்ட வேலைக்குச் சென்றால் நாள் ஒன்றிற்கு பெண்களிற்கு ஆயிரம் ரூபா வழங்கினால் 2 றாத்தல் பாணும், ஒரு கிலோ அரிசியுடன் மரக்கறி வாங்கவே பணம் போதாத நிலைமையே இன்று இலங்கையில் காணப்படுவதாக குப்பிளான், புன்னாலைக்கட்டுவன், ஏழாலை போன்ற பகுதிகளில் இருந்து தினமும் தோட்டவேலைக்குச் செல்லும் நூற்றுக் கணக்கான பெண்கள் `உதயனிடம்` கூறுகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்ற போரின் கொடுமையால் குடும்பத் தலைவர்களை இழந்த 40 ஆயிரம் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுடன் ஏனைய காரணங்களாலும் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட 25 ஆயிரம் குடும்பங்களுமாக 65 ஆயிரம் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அன்றாட பாவனைப் பொருட்களின் கடுமையான விலை ஏற்றத்தின் காரணமாக திணறுவதாகக் குமுறுகின்றனர். ஆயிரம் ரூபாயில் அரை வயிற்றைக் கூட நிரப்ப முடியாத நிலையில் அந்தப் பெண்கள் சொல்லொணா துன்பத்தை எதிர்கொண்டுள்ளனர்.
”2020 ஆம் ஆண்டுவரையில் `நல்லாட்சி அரசின்` காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விற்ற விலையில் ஓரளவேனும் வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்தினோம் ஆனால் தற்போது சகல பொருட்களுமே 100 மடங்கு அல்லது 150 மடங்கு விலை அதிகரிக்கப்பட்டு விற்பனையாகும் நிலைமையில் வாழ்வா-சாவா என்ற நிலையில் இருக்கிறோம்” என்று பல பெண்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
நாள் ஒன்றிற்கு கூலி வேலை செய்யும் பெணகளுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைப்பதே பெரியபாடு. இந்த நிலமையில் ஒரு றாத்தல் பாண் 50 ரூபாவிற்கு விற்பனை செய்த நிலமையில் தற்போது ஒரு றாத்தல் பாணின் விலை 90 ரூபாவிற்கு விற்கிறது அதுவும் எதிர்வரும் நாட்களில் 110 ரூபாவாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது.
இதைவிட ஒரு கிலோ செத்தல் மிளகாய் 400 ரூபாவாக இருந்து தற்போது ஆயிரம் ரூபாவும், ஒரு லிட்டர் தேங்காய் எண்ணை 350 ரூபாவில் இருந்து 700 ரூபாவும், ஒரு லிட்டர் பெட்ரோல் 117 ரூபாவில் இருந்து 177 ரூபாவாகவும், ஒரு லிட்டர் டீசல் 97 ரூபாவில் இருந்து 117 ரூபாவாகவும் தற்போதைய அரசு உயர்த்தியுள்ளது. “இந்த நிலையில் ஐந்து பேர் கொண்ட குடும்பத்தை எம்மால் வாழவைக்க முடியவில்லைஎன்று யாழ்ப்பாணத்தில் உணவகம் ஒன்றில் இடியப்பம் அவிக்கும் பணியிலுள்ள 56 வயதான விசுவமடுவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரான சு. இரத்தினேஸ்வரி தெரிவிக்கின்றார்.
தமது வேதனைகளை வெளிப்படுத்தும் இரத்தினேஸ்வரி, இந்திராணி போன்றவர்கள் தனியானவர்கள் அல்ல, அவர்களைப் போன்ற அதே நெருக்கடியைத்தான் ஆயிரக்கணக்கான பெண்கள் நாட்டின் வடக்கு கிழக்குப் பகுதியில் எதிர்கொண்டு வருகிறார்கள்.
”கணவரை இழந்த நிலையில் கடைகளிற்கு பலகாரம் செய்து விற்பதன் மூலம் வரும் வருமானத்திலேயே நானும் எனது 3 பிள்ளைகளும் வயது முதிர்ந்த தாயாரும் வாழ்கின்கின்றோம். இந்த நிலமையில் கடந்த ஆண்டு 1,260 ரூபாய் விற்ற எரிவாயு ஒரே தடவையில் 2,800 ரூபாய் ஆனபோதும் அந்த விலைக்குக்கூட இன்று எரிவாயுவை எங்குமே பெறமுடியவில்லை. கள்ளச் சந்தையில் 4,000 ரூபாய் கேட்கின்றனர். விறகிலாவது அடுப்பு எரிப்போம் என்றால் ஆயிரம் ரூபா விற்ற ஒரு தூக்கு விறகு 2,400 ரூபாய் விற்கிறது. இந்த விலைக்கேனும் விறகை வேண்டி அடுப்பெரித்தால் தற்போதைய மழையில் நனைந்த விறகு எரிவதாக இல்லை”. இப்படியான எண்ணக் குமுறல்களை யாழ்ப்பாணம் முழுவதிலும் கேட்க முடிகிறது.
இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைப் பட்டியலிட ஆரம்பித்தால் அதற்கு முடிவே இருக்காது. அது இன்றொரு விலை நாளையொரு விலை என்கிற வகையில் உள்ளது. இந்த கள ஆய்விற்காக கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் சுற்றி திரிந்த போது, இறக்குமதி தடை காரணமாகப் பொருட்களின் விலை 50 % உயர்ந்துள்ளதை அவதானிக்க முடிந்தது. உதாரணமாக கோதுமை மாவு 85 ரூபாயிலிருந்து 130 ஆகவும், சீனி 105 ரூபாயிலிருந்து 155 ஆகவும், 365 ரூபாய் விற்ற பால்மாவு 550 ரூபாய் கொடுத்தாலும் வாங்க முடியாத நிலையுள்ளது.
தமிழ் மக்களின் முக்கியமான அடிப்படை உணவான அரசி மற்றும் பருப்பின் விலை இருமடங்காகியுள்ளது. ஒரு கிலோ அரசி 85 ரூபாயிலிருந்து 170 ரூபாயாகவும், பருப்பு 180 ரூபாயிலிருந்து 350 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இதனிடையே ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் தொடரும் நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு அநேகமாக திவாலான நிலையில், உயர்ந்துவரும் விலைக்கு ஏற்ப, சர்வதேச சந்தையில் எண்ணெய் வாங்க இலங்கையிடம் டொலர் இல்லை. அமெரிக்க உட்பட பல நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கத் தடை விதித்துள்ள நிலையில், இலங்கை உதவி கோரி ரஷ்யாவை அணுகினால் மேற்குலக நாடுகளின் கோபத்தை மேலும் எதிர்கொள்ள நேரிடும்.
இதேவேளை, புதன்கிழமை இரவு தகவலின்படி, யாழ்ப்பாண நகரிலுள்ள அனைத்து பகுதிகளிலும் தெரு விளக்குகள் வட மாகான ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் உத்தரவின் பெயரில், மாநகர சபையால் துண்டிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக குற்றச்செயல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மக்கள் அஞ்சுகின்றனர்.
இலங்கை ஆட்சியாளர்களின் கவனத்திற்காக:
திருக்குறள் பொருட்பால்-அரசியல்-கொடுங்கோன்மை அதிகாரம்- குறள் எண்: 553
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
நாள்தோறும் நாட்டில் நடக்கும் நன்மை தீமைகளை ஆராய்ந்து நீதிசெலுத்தாத மன்னன், நாள்தோறும் தனது நாட்டை இழந்து கொண்டே வருவான்.