சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் தினமும் எந்தப் பொருளிற்கான வரிசைக்கு செல்வது என்பதே மக்களின் முன் உள்ள மிகப்பெரும் கேள்வியாகவுள்ளது.
இதில் யாழ்ப்பாணத்தில் நீண்டநாள் இடைவெளியின் பின்னர் எரிவாயு இன்று -வியாழன்(10) காலை அன்று கொண்டு வரப்பட்டதனால் அதனைப் பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
வைத்தியசாலை வீதி கொட்டடியில் அமைந்துள்ள எரிவாயுக் களஞ்சியத்திற்கு நேற்று மாலை எரிவாயு எடுத்து வரப்பட்டதனை அவதானித்த மக்கள் இன்று அதிகாலை முதலே தவமிருந்தனர்.
இந்த நிலமையில் எடுத்து வரப்பட்ட எரிவாயு சிலிண்டரினை விற்பனை முகவர் குடாநாட்டின் எந்தப் பாகத்தில் உள்ள வர்த்தக நிலையத்திற்கும் கொண்டு செல்ல முடியாது. ஏனெனில் நகரின் மத்தியில் களஞ்சியம் இருப்பதனால் நகரின் மத்தியில் உள்ள மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கான எரிவாயுகூட கிடைக்காத நிலமையில் எவ்வாறு மாவட்டத்தின் ஏனைய பகுதிக்கு கொண்டு செல்வது என்று கேள்வி எழுப்புகிறார்.
இதேநேரம் களஞ்சியத்திற்கு கொண்டு வரப்பட்ட எரிவாயுவின் எண்ணிக்கையை விட வரிசையில் வெற்று சிலிண்டருடன் காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதும் விநியோகிப்பதற்கு விநியோக நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகினர்.
இந்த நிலைமை தொடர்பில் யாழ்ப்பாண குடாநாட்டின் எரிவாயு விநியோகஸ்தருடன் தொடர்பு கொண்டு உதயன் சார்பில் கேட்ட கேட்டபோது,
”ஒரு பார ஊர்தியில் 600 சிலிண்டரை மட்டுமே எடுத்துவர முடியும். இவ்வாறு 600 சிலிண்டரை ஏற்றிய 7 பார ஊர்திகளில் சிலிண்டர்கள் எடுத்து வரப்பட்டாலே குடாநாட்டிற்கு போதிய விநியோகத்தை மேற்கொள்ளலாம். ஆனால் கடந்த மூன்று மாதமாக 3 அல்லது 4 பார ஊர்தி எரிவாயுவே கிடைத்தபோதும் கடந்த 8 தினங்களாக ஒரு லோட்கூட கிடைக்கவில்லை. இன்று 3 பார ஊர்தி மட்டும் கிடைக்கும் நிலமையில் எவ்வாறு விநியோகிப்பது என்பதே பெரும் நெருக்கடியை எதிர்நோக்கவேண்டியுள்ளது”.
இதனால் வைத்தியசாலைகள், சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், உணவகங்களிற்கான எரிவாயுவைக்கூட எம்மால் விநியோகம் செய்ய முடியாத நிலமையிலேயே காணப்படுகின்றது என அவர் மேலும் பதிலளித்தனர்.
குடாநாட்டிற்கான எரிவாயு தேவையோ மலையளவில் இருக்க எடுத்து வரப்பட்டதோ கடுகளவு என்ற நிலமையில் எரிவாயுவினைப் பெற மக்கள் கிலோ மீட்டர் நீளத்தில் முண்டியடிக்கின்றனர்.
வைத்தியசாலை வீதி கொட்டடியில் அமைந்துள்ள எரிவாயுக் களஞ்சியத்திற்கு நேற்றுமாலை எரிவாயு எடுத்து வரப்பட்டதனை அவதானித்த மக்கள் இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவ்வாறு காத்திருந்த ஆணைக்கோட்டையை சேர்ந்த 39 வயதான கி.ஞானதேவி உதயனிடம் கருத்து தெரிவிக்கையில்,
”எமது வீட்டில் எரிவாயு தீர்ந்து இன்று 5 நாட்கள் ஆகிவிட்டன. இருந்தபோதும் கிடைத்த விறகினைக் கொண்டு மதிய உணவும் இரவில் பாணும. உணவாக கொண்டபோதும் சிறுவர்களை சமாளிக்க முடியவில்லை. இதனால் எரிவாயு வந்துள்ளதாக அறிந்து முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தி வந்து வரிசையில் காத்திருக்கின்றேன்” என்றார்.
இதேபோன்று யாழ்ப்பாணம் நல்லூரடியை சேர்ந்த 57 வயதான த.பாலராசன் ”எரிவாயு தீர்ந்த நான்கு நாட்களும் அடுப்பு மூட்டமுடியவில்லை வீடும் ஒரு பரப்புக் காணியில்தான் உள்ளது அதனால் விறகும் இல்லை. கடையில் உணவு வாங்கச் சென்றால் பல கடைகள் மூடியுள்ளது. இந்த நாட்டில் என்ன நடக்கின்றது என்பதனை அரச கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மேல் மட்டங்களிற்கு கொண்டு செல்வதில்லையா என்ற சந்தேகமும் உள்ளது” என்றார்.
யாழ் நகரின் மத்தியில் களஞ்சியம் இருப்பதனால் நகரின் மத்தியில் உள்ள மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கான எரிவாயுகூட கிடைக்காத நிலமையில் எவ்வாறு மாவட்டத்தின் ஏனைய பகுதிக்கு கொண்டு செல்ல முடியும் என்பதனால் குடாநாட்டின் புறநகர்ப் பகுதி மக்கள் செய்வதறியாது தின்றுகின்றனர்.
இவ்வாறு மக்களும. விநியோகஸ்தர்களிற்கும் இடையில் இழுபறி நீடித்தாலும் இந்த விநியோகமும் எத்தனை நாட்களிற்கு நீடிக்கும் அல்லது எப்போது தடைப்படும், அடுத்த கப்பல் வருமா என்பதும் தெரியாமல் நிற்கும. மக்கள் முன்பாக உரிய பதிலை வழங்க எவரும் இல்லை. ஏனெனில் அடுத்த கப்பலிற்கு கட்டுவதற்கான டொலர் எப்போது கிடைக்கும் என்பதில்தான் இதற்கான பதில் உள்ளது.
இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே குடாநாட்டின் அவலம் நீடிக்கும்போது ஏற்கனவே பல லட்சம் ரூபாவிற்கு வெற்று எரிவாயு சிலிண்டர்களை முற்பணம் செலுத்தி கொள்வனவு செய்து காத்திருக்கும் நிலமையில் அதற்கான முதல் முடங்கி உள்ளது. ஆனால் எமக்கான விற்பனைக்கான பொருள் கிட்டாது விநியோகஸ்தர் ஊடாகவே நுகர்வோருக்கு வழங்கப்படுகின்றது என்கின்றனர் வர்த்தகர்கள்.