தமிழருக்கான நீதி கிடைப்பதற்கு அணுகுமுறையினை சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் என்கிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தமிழருக்கான நீதிகிடைப்பதற்கும், தமிழர்கள் மீதான சிங்கள பௌத்த அரசின் கொடுங்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்கும் பல்முனைப்பட்ட காத்திரமான அணுகுமுறையொன்றினை சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் பாஷேலே அம்மையாரின் அறிக்கை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது
‘இராணுவ மயமாக்கல் மற்றும் இன-மதவாதத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகள் சனநாயக அமைப்புக்களை சிதைக்கின்றன’ என்ற ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையளரின் கூற்றினை சுட்டிக்காட்டியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், ‘தண்டனைப் பயமின்மையானது சிறிலங்காவின் கலாச்சாரத்தில் ஊறிப்போன ஒன்று என்பதோடு அதனது அரசியலில் சிங்கள பௌத்தமத இனவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளது’ என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களது அவதானிப்பினையும் இவ்விடயத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. ‘கொடுங்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு தடையென்பது அரசியல் திடமின்மை அல்லது செயல் திறனின்மையோ காரணமல்ல என்பதற்கு அப்பால், சிங்கள பௌத்த மத அடிப்படைவாதமே காரணமென்பது தெளிவாகின்றது என இடித்துரைத்துள்ளது.
இவ்வகையிலேயே சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கையின் முன்வைத்ததுபோல், பன்னாட்டு சமூகம் சர்வதேச நீதிக்கான நோக்கினை கொள்ளவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.
மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
ஆணையாளர் தனது அறிக்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக அதனை உபயோகிப்பதற்கு ஒரு தற்காலிக தடையும் அதன் மீதான அடிப்படை மாற்றங்கள் செய்யப்படவேண்டும் எனவும் கேட்டுள்ளார். (மார்ச் 7ம்-2022) மனித உரிமைகள் கண்காணிப்பகம், (மார்ச் 4-2022) சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியனவற்றின் வாய்மொழி அறிக்கையிலும், பயங்கரவாத தடைச் சட்டமானது சித்திரவதைகளை ஏதுவாக்கும் வகையில் திரும்ப திரும்ப உபயோகிக்கப்பட்டு வருவதாகவும், அது காணாமல் ஆக்கப்படுவோரை அதிகப்படுத்தும் அபாயத்திற்கு இட்டுச்செல்வதாக கூறியுள்ளது. ‘பயங்கரவாத தடைச் சட்டம் தமிழரையே அதிகமாக பாதிப்பதாக’ மனித உரிமைகள், மற்றும் பயங்கரவாதம் தொடர்பான ஐ.நா. வின் விசேட அறிக்கையாளர் பென் எமர்சன் கூறியுள்ளார்.
1979இல் பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு சட்டமாக நிலைக்கொண்தில் இருந்து பல மனித உரிமைகள் அமைப்புக்களினாலும் அதனை இரத்துச் செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியான அதனுடைய இருப்பு, சிறிலங்கா அரசால் உத்தேசிக்கப்பட்டவாறான திருத்தங்களோடு கூட, சிறிலங்காவின் அரசியல்-இராணுவ கட்டமைப்புக்கள் மீதான சிங்கள பௌத்தமத அடிப்படைவாதத்தின் கிடுக்கிப் பிடியினை நிலைப்படுத்தவே செய்யும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகியதற்கு காரணமே தமிழர்கள் மீதான இனவழிப்பும், சிங்கள- தமிழ் அரசியல் தலைமைகள் இன முரண்பாடுகளுக்கான தீர்வினை எட்டுமுகமாக எடுக்கப்பட்ட ஒப்பந்தங்களை சிங்கள தலைவர்கள் தொடர்ச்சியாக மீறியதும் தான் என இரா.சம்பந்தன தனது அறிக்கையில்கூறியுள்ளார். சிங்கள பௌத்த இனவாதமே அதன் வேராக இருப்பதே காரணமாகும்.
வழமைபோலவே, ஐ.நா மனித உரிiமைச்சபை ஆணையாளரது அறிக்கைக்கு சிறிலங்கா பௌத்த இனவாத அரசு பதிலளிக்கையில், சர்வதேச அமைப்புகளை, குறிப்பாக மனித உரிமைச்சபை, தமது ‘நாட்டு இறையாண்மை’ என்ற கோட்பாட்டின் பின்னின்று தாக்கியும் பயமுறுத்தியும் உள்ளது என தெரிவித்துள்ளது. இது சிறிலங்காவின் சந்தர்ப்பவாதப் போக்கையே காட்டுகிறது, அதாவது, பொருளாதார மேம்பாட்டிற்கு நிதியுதவி, பேரிடர்காலத்தில் தனது மக்களுக்கு தடுப்பூசி போடுதல் என தனக்கு தேவை என வரும்போது, சர்வதேச அமைப்புக்களிடம் செல்வதும், ஆனால் தான் இழைத்த கொடுங்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் என வரும்போது நாட்டின் இறையாண்மை என்ற கேடயத்தினை பாவிப்பதுமாக இருக்கின்றது.
சர்வதேச குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபடும் போது, சிறிலங்கா அரசு இறையாண்மை என்ற அடிப்படையிலான தற்காப்பை இழக்கிறது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இங்கே குறிப்பிட விரும்புவது என்னவெனில், சிறிலங்காவின் 1972 இல் உருவாக்கப்பட்ட அதன முதலாவது குடியரசுக்கான அரசியலமைப்பு, அல்லது 1978இல் உருவாக்கப்பட்ட அதன் இரண்டாவது அரசியல் அமைப்பிலோ தமிழர்கள் எவ்வகையிலும் பங்குபற்றவோ அல்லது அதனை ஆதரிக்கவோ இல்லை. அவை தமிழர்களின் பெரும் ஆட்சேபணைகளுக்கிடையே தமிழர்கள் மீது சுமத்தப்பட்டவையாகும். ஆகவே, சிறிலங்கா அரசின் இந்த ‘நாட்டின் இறையாண்மை’ என்ற கோட்பாட்டின் பின்னே தமது கொடூர குற்றங்களை மறைக்கப்பார்ப்பது என்பது ஒரு தார்மீக கபடநாடகம் ஆகும்.
தற்போது இலங்கை அரசானது, இலங்கைத்தீவின் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பகுதிகளான வடக்கு கிழக்கில், தமிழ் பேசும் மக்களை ‘சிறுபான்மையினராக’ ஆக்கும் விதத்தில் குடிப்பரம்பலை மாற்றி அமைக்கும் காரியங்களில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவை தளமாக கொண்டுள்ள ஓக்லண்ட் அமைப்பு 2021 மார்சில் வெளியிட்ட ‘முடிவற்ற யுத்தம்’ என்ற தமது ஆய்வுக்கட்டுரையில் ‘தமிழர் பெரும்பான்மையாக செறிந்து வாழும் பிரதேசங்களில் வலிந்து மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள், இராணுவ வெற்றிச்சின்னங்கள், அகழ்வாராய்வு ஒதுக்கிடங்கள், வனவிலங்கு காப்பகங்கள், வன ஒதுக்கிடங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார பிரதேசங்கள் அமைக்கப்படுகின்றன. இவை யாவுமே, தமிழர்களது பிரதிநிதிகளிடம் சம்மதமோ அல்லது எந்த விதமான ஆலோசனைகளும் தமிழர் தரப்பிடம் பெறப்படாமலே, தமிழர்களது நிலங்களை அபகரிக்கும விதமாகவும், அவர்களது அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் விதமாகவும், மற்றும் அவர்களது அடையாளத்தினையே துடைத்து அழிக்கும் வகையிலும் தெளிவான ஒரு நோக்கில் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் சிறிலங்கா அரசாங்கம் சிங்கள மக்களது விகிதாசாரத்தினை அதிகரிக்கும் விதமாக சிங்கள கிராமங்களை தமிழ் மாவட்டங்களோடு இணைக்கும் வகையில் எல்லைகளை மறுசீரமைக்கிறார்கள். இது சிறிலங்காவின் அதிகமாக சிங்களவரைக் கொண்ட இராணுவம் தமிழர் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ளமையால் சாத்தியப்படுகிறது. இந்த தமிழர் தாயகத்தின் நிலம் அபகரித்தலால் தமிழ் மக்களது தனித்துவமான அடையாளம் அற்றுப் போய்விடும்.
தமிழரின் அரசியல் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் வகையில் பொதுவாக்கெடுப்புக்கான கோரிக்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளருக்கு ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளால் அனுப்ப்பட்ட கடிதத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கவனத்தில் கொள்கின்றது. ஆயினும், நாட்டில் நிலவும் சரித்திர பூர்வமான சிங்கள பௌத்தமத அடிப்படைவாதம், அத்துடன் சிங்கள தலைவர்கள் அவர்கள் இழைக்கும் கொடூர குற்றங்களுக்கு தண்டனைப் பயமின்மை மற்றும் தமிழர்களை பரவலாக துன்புறுத்துதல், தமிழரது அடையாளங்களை அழித்தல் என்பவற்றை மனதில் கொண்டு, தமிழர்தாம் இங்கே பாதிக்கப்பட்டவர்கள் என்ற நிலையில் அவர்களது அரசியல் எதிகாலத்தை தீர்மானிப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.
ஆகையினால், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் பாஷேலே அம்மையாரின் அறிக்கைக்கு சர்வதேச சமூகம் கவனம் கொடுத்து சிறிலங்கா அரசு பொறுப்புக்கூறும் வண்ணம் ஒரு மாறுபாடான ஏற்பாட்டை எடுப்பதன் பேரில் இலங்கைத்தீவில் தமிழருக்கான அரசியல் தீர்வு, நீதி, மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை சாத்தியமாக்க பல்முனைப்பட்ட காத்திரமான அணுகுமுறையொன்றினை சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும்என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.