தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவன் கே.எபிஸ்டனி.
(15-03-2022)
ஒரு வைத்தியராக வந்து மக்களுக்கு சேவை செய்வதே எனது எதிர்கால இலட்சியம் என தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் 188 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலை வகிக்கும் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் கேதீஸ்வர லிங்கம் எபிஸ்டனி தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் 188 புள்ளிகளைப் பெற்று மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி ( தேசிய பாடசாலை) மாணவன் கேதீஸ்வர லிங்கம் எபிஸ்டனி மாவட்டத்தின் முதல் நிலையைப் பெற்றுள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளை செல்வன் கே.எபிஸ்டனி பெற்றுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,,,
நான் மன்னார் மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொள்வதற்கு என்னை தினமும் ஊக்கப்படுத்தி எனக்கு பெரிதும் உதவியாக இருந்த பெற்றோருக்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்தோடு எனது கற்றல் செயற்பாடுகளில் முற்று முழுதாக எனக்கு கற்பித்து எனக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி வழிப்படுத்திய எனது வகுப்பாசிரியர் இ.ராகுலன் ஆசிரியர் அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்தோடு எனக்கும் ஏனைய மாணவர்களுக்கும் நல்ல ஊக்கத்தையும் ஆலோசனைகளையும் வழங்கிய எனது பாடசாலை அதிபர் அருட்சகோதரர் எஸ்.இ. றெஜினோல்ட் மற்றும் பிரதி அதிபர், பகுதித்தலைவர் மற்றும் ஏனைய அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர் காலத்தில் நல்ல மருத்துவராக வந்து சேவையாற்ற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
அந்த வகையில் நான் தொடர்ந்து சிறப்பாக கல்வி கற்று எனது பெற்றோருக்கும் பாடசாலைக்கும் புகழைத் தேடித் தருவேன்.என மாணவன் எபிஸ்டனி தெரிவித்தார்.
இதேவேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் முஹமட் அமர் 185 புள்ளிகளை பெற்று மன்னார் மாவட்டத்தில் 2 வது இடத்தை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.