(மன்னார் நிருபர்)
(16-03-2022)
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொன்னையன் குடியிருப்பு தெற்கு கடற்கரை கரையோர பகுதியில் அதி நவீன தொழில் நுட்பத்தில் இறால் வளர்ப்பு பண்ணை அமைக்கும் பணியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று புதன்கிழமை மதியம் 1.30 மணி அளவில் நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டார்.
ஏற்றுமதி தொழில் அபிவிருத்தியை ஊக்குவிக்கும் நோக்கோடு தேசிய நீரியல் வளர்ப்பு அதிகார சபையின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கு அமைவாக பெருந்தோட்ட அமைச்சின் வேளாண்மைத் துறை, நவீனமயமாக்கல் திட்டம், மதிப்பு சங்கிலி வளர்ச்சி மானியம் மற்றும் வங்கி கடன் உதவிகள் இன் ஊடாக தனியார் ஒருவரினால் கொன்னையன் குடியிருப்பு பகுதியில் அதி நவீன தொழில் நுட்பத்தில் இறால் வளர்ப்பு பண்ணை அமைக்கப்பட்டு வருகின்றது.
வட மாகாணத்தில் முதல் தடவையாக குறித்த திட்டம் வெளிநாட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மன்னாரில் உருவாக்கப்பட்டு வரும் குறித்த இறால் பண்ணை சுமார் 28 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் குறித்த பண்ணையை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் நவீனமயப்படுத்த உடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு மேலதிக நடவடிக்கைகள் குறித்து திட்டம் தொடர்பாகவும் பண்ணை உரிமையாளரிடம் கேட்டு அறிந்து கொண்டார்.