-மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ்
(மன்னார் நிருபர்)
(18-03-2022)
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசாங்கத்தின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் என்றால் இந்த அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பாக என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது என்பது தொடர்பாக தொழிவாக சர்வதேசம் புரிந்து கொண்டுள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும்,மன்னார் நகர சபை உறுப்பினருமான எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை (18) குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
எமது நாட்டில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அந்த உறவுகளை தேடிக் கொண்டு இருக்கின்ற உறவுகள் இன்று வரை காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என்பது குறித்து தமது போராட்டங்கள் ஊடாக அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
இன்று இந்த அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அவர்களுக்கான இறப்புச் சான்றிதழ் மற்றும் நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாக சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக சில அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சன நெரிசல் கூட்டத்தில் அல்லது கோவில் திருவிழாக்களில் காணாமல் போனவர்கள் இல்லை.
அவர்கள் இறுதி யுத்தத்தின் போது தமது உறவினர்களால் அரசிடம் கை அளிக்கப்பட்டவர்கள்.
இந்த அரசினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது மக்கள் முன்னிலையில் அழைத்துச் செல்லப்பட்டவர்கள்.
ஏனையவர்கள் வீடுகளில் இருந்த போது விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டவர் களுமே இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட மற்றும் அழைத்துச் செல்லப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கே இருக்கின்றார்கள்?? என்பதை கேட்டே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் தமிழ் மக்கள் இன்று வரை போராடி வருகின்றனர்.
தமது உறவுகளுக்காக வீதியில் இறங்கி போராடிய பல உறவுகள் இன்று உயிரிழந்துள்ளார்கள்.
இவ்வாறான நிலையில் இன்று இந்த அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அறிவித்துள்ள ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு என்பது இந்த நாட்டில் ஆடு மாடுகளின் விலை இன்று ஒன்றரை லட்சத்தை தாண்டி விலை போகிறது.
ஆனால் இன்று காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் அரசாங்கத்தின் மதிப்பு ஒரு இலட்சம் ரூபாய் என்றால் இந்த அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பாக என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது என்பது தொடர்பாக தொழிவாக சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும்.அதற்காகவே இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் தமிழ் மக்கள் சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்பதை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறார்கள்.
சர்வதேச விசாரணையின் ஊடாகத்தான் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று நீதியான விசாரணை மூலம் நீதி கிடைக்கும் என்று திடமான நம்பிக்கையுடன் உள்ளனர்.
உண்மையில் இந்த உறவுகள் இல்லை என்றால் சர்வதேச சட்ட விதிகளுக்கு அமைய அவர்களுக்கு எப்படியான நஸ்டஈடுகளை சர்வதேச சட்டங்கள் மூலம் கிடைக்கப் பெறுமோ அதனூடாக கிடைக்கின்ற நஸ்டஈடே சரியானதாக இருக்கும்.
அதை விடுத்து தற்போது அரசாங்கம் விடுத்திருக்கும் ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு என்பது ஆடு,மாடு என்பவற்றிற்கு விலை கொடுப்பது போல் இந்த அரசாங்கம் செயல்படுகிறது.
இதனை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும்,தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இல்லை என்பதை இந்த அரசாங்கம் புரிந்து கொண்டு சர்வதேச விசாரணை மூலமே அதற்கான தீர்வு எட்டும்.என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
மேலும் இன்று இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடியை நாங்கள் அனைவரும் எதிர்நோக்கி உள்ளோம்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு விதமான பொருளாதார நெருக்கடியில் நாங்கள் உள்ளோம்.
சாதாரண உணவுப் பொருட்கள் முதல் ஏனைய அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி கடந்த புதன்கிழமை மக்களுக்கு ஆற்றிய உரையில் அனைத்து பொருட்களின் தட்டுப்பாட்டினை தான் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் பொருட்களின் தட்டுப்பாட்டை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது குறித்து அவரிடம் எந்த பதிலும் இல்லை.
-ஆகவே இந்த ஜனாதிபதி தன்னால் அதை செய்ய முடியாது விட்டால் வேறு ஒருவரிடம் கையளித்து விட்டு அவர் வீடு செல்ல வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.