(21-03-2022)
யாழில் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த நிலையில் தாக்கப்பட்டதாக கூறப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க முல்லைத்தீவு மாவட்ட தலைவி ஈஸ்வரி மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் ஜெனிட்டா ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (20) மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைத்திருந்தார்.
எனினும் குறித்த நிகழ்வுக்கு பிரதமர் வருவதை எதிர்த்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்டோர் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க முயன்றனர்.
நிகழ்வு நடைபெறும் இடத்தில் போராட்டத்தை முன்னெடுக்க முல்லைத்தீவில் இருந்து, வந்திருந்தவர்களை மட்டுவில் அம்மன் ஆலயத்திற்கு அருகில் பொலிஸார் வாகனத்தில் இருந்து இறங்காதவாறு தடுத்து நிறுத்தினர்.
இதேவேளை பொலிஸாரின் காவலையும் மீறி பேருந்திலிருந்து இறங்கிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதியில் அழுது புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலின் போதே குறித்த இருவரும் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.