யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே காலப்பகுதியில் அதாவது மார்ச் மாதம் 19ஆம் திகதி 1988ஆம் ஆண்டு அன்னை பூபதி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை தொடங்கினார். ஈழப்போர் வரலாற்றில் அவருக்கென்று தனித்துவமான ஓர் இடம் உண்டு. அவர் ஒரு ஆயுதப் போராளி இல்லை. எனினும் தன் உயிரைத் துறக்கத் தயாராகி சாகும் வரையிலும் உண்ணாவிரதம் இருந்த முதல் ஈழத்தமிழ் பெண் என்ற முக்கியத்துவம் அவருக்கு உண்டு. அவர் ஓர் அரசியற் செயற்பாட்டாளர். போராட்டத்தின் பாதிப்பை தெரிந்தவர். இரண்டு ஆண் பிள்ளைகளைப் பறி கொடுத்தவர். அவர் அங்கம் வகித்த மட்டு அம்பாறை அன்னையர் முன்னணி இந்திய அமைதி காக்கும் படையிடம் நீதிகேட்டு ஆரம்பித்த சாகும் வரையிலுமான உண்ணாவிரதப் போராட்டம் இடையில் குழப்பப்பட்டது. எனினும் தானாக முன்வந்து அன்னை பூபதி போராட்டத்தை உயிர் துறக்கும் வரை தொடர்ந்தார்.
திலீபனின் உண்ணாவிரதத்தோடு ஒப்பிடுகையில் அவருடையது வித்தியாசமானது. திலீபன் ஒரு ஆயுதப் போராளி. எனவே சாகத் தயாரான ஒரு வாழ்க்கைமுறையை கொண்டிருந்தவர். அவருடைய போராட்ட முறை அகிம்சை அல்ல. ஆனால் அகிம்சைப் போராட்டத்தில் அவர் உயிரை தியாகம் செய்தார்.
அன்னை பூபதி ஒரு ஆயுதப் போராளி அல்ல. ஆனால் ஒரு குடும்பப் பெண் அரசியலில் எப்படிப்பட்ட துணிச்சலான முடிவை எடுக்கலாம் என்பதற்கு நவீன அரசியலில் அவர் ஒரு நிகரற்ற முன்னுதாரணம். திலீபன் உணவருந்தாமல் நீர் அருந்தாமல் 12 நாட்கள் போராடினார். பூபதி உணவை நீக்கி, நீரை மட்டும் அருந்தி முப்பத்தொரு நாட்கள் போராடினார்.
தமிழ் அரசியலில் ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய மிதவாத அரசியலிலும் மிகச்சில பெண்களே மேலெழுந்தார்கள். ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான மிதவாத அரசியலிலும் கடந்த 12 ஆண்டுகளாக மிகச் சில பெண்கள்தான் மேடைகளில் தோன்றுகிறார்கள். போராட்டங்களில் முன்னே நிற்கிறார்கள். இடைப்பட்ட ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் அனேக பெண் ஆளுமைகள் மேலெழுந்தன. போராளிகளாக, தளபதிகளாக, பொறுப்பாளர்களாக, பேச்சாளர்களாக, பேச்சுவார்த்தைக் குழுவில் முக்கியஸ்தர்களாக, அனேக பெண்கள் மேலெழுந்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் இயக்கங்களில் போராளிகளாக இருந்தவர்கள்.
போராளிகளைத் தவிர இன்னொரு தொகுதி பெண் ஆளுமைகள் அமைதியாக போராட்டத்தை அடைகாத்தார்கள். அவர்கள்தான் அடைக்கலம் தந்த வீடுகளின் இல்லத்தரசிகள் ஆவர். இந்த அடைக்கலம் தந்த வீடுகள் இல்லை என்றால் தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டமே வளர்ந்திருக்காது. இவ்வாறு அடைக்கலம் தந்த வீடுகளில் தலைவிகளாக இருந்தவர்களை வரலாற்றுக் குறிப்புகளிலும் கண்டுபிடிப்பது கடினம். ரஞ்சகுமார் போன்றோரின் தாய் குறித்த சிறுகதைகளில் ஓரளவுக்கு இந்த அன்னையர்களின் தியாகமும் விரதமும் இலக்கியமாகின. தமது பிள்ளைகளுக்காக ஒருவேளை உணவை அல்லது இருவேளை உணவைத் துறந்து உண்ணாவிரதம் இருந்த பெண்களை நாம் பார்த்திருக்கிறோம். காணாமல் போன தனது பிள்ளை திரும்பி வரும் என்ற நம்பிக்கையோடு இன்றுவரையிலும் பாண் மட்டும் சாப்பிடுகின்ற தாய்மாரை நாங்கள் பார்க்கிறோம். காணாமலாக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காக கடந்த 12 ஆண்டுகளாக வீதியோரங்களில் போராடிக் கொண்டிருக்கும் அன்னையரை நாங்கள் பார்க்கிறோம்.
ஈழத்தமிழர்களின் அரசியல் எனப்படுவது வெளித்தெரியாத அன்னையர்களின் விரதம் உண்ணாநோன்பு அர்ப்பணிப்பு போன்றவற்றினால் கட்டி எழுப்பப்பட்ட ஒன்றுதான். இவ்வாறான ஒரு போராட்ட பாரம்பரியத்தின் பின்னணியில்தான் அன்னை பூபதியும் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார்.அவரும் அடைக்கலம் தந்த ஒரு வீட்டின் அன்னைதான்.
ஒரு போராளி அவ்வாறு சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பது வேறு. ஒரு குடும்பப்பெண் அவ்வாறு சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பது வேறு. இரண்டுக்குமிடையில் இருக்கக்கூடிய அர்ப்பணிப்பு திடசித்தம் போன்றவற்றை வித்தியாசப்படுத்தி பார்க்க வேண்டும். இந்த இடத்தில்தான் அன்னை பூபதியின் முக்கியத்துவம் அதிகமாகிறது. தவிர அவர் கிழக்கு மையத்தில் இருந்து வருகிறார். தனது பசியினாலும் தாக்கத்தினாலும் வடக்கையும் கிழக்கையும் இணைத்தவர்.
தமிழ் மக்களின் நவீன அரசியலில் அவருக்கு முன்னும் பின்னும் அவரைப்போல சாகும் வரையிலும் உண்ணாவிரதம் இருந்த ஒரு பெண்ணை இன்றுவரையிலும் காட்ட முடியாது.
பூபதிக்கு பின் கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் அரசியலில் அதிகமாக போராடுவது அன்னையர்கள்தான். கேப்பாபுலவிலும் இரணைதீவிலும் தமது காணிகளை மீட்க முன்சென்றது அம்மாக்கள்தான். கடந்த 12 ஆண்டுகளாக நடந்துவரும் பெரும்பாலான எல்லா போராட்டங்களும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடிப்போராடும் தமிழ் அம்மாக்களின் கண்ணீரால் நனைந்திருக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தபோது அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தது மேற்படி அம்மாக்கள்தான். அவமதிக்கப்பட்டதும் அம்மாக்கள்தான். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக வீதியோரங்களில் போராடிக்கொண்டிருக்கும் அம்மாக்கள்தான். அவர்களில் கிட்டத்தட்ட 80 க்கும் அதிகமானவர்கள் இந்த உலகம் நீதியற்றது என்ற ஏமாற்றத்தோடு இறந்து போய்விட்டார்கள். மிஞ்சி இருப்பவர்கள் விடாது தொடர்ந்து போராடுகிறார்கள். கடந்த 12 ஆண்டு கால தமிழர் அரசியலில் அவர்கள்தான் ரெடிமேட் போராளிகள். கட்சிகளுக்கும் அவர்கள்தான் முன்னரங்க போராளிகள். ஐ.என்.ஜியோக்களுக்கும் அவர்கள்தான் முன்னரங்க போராளிகள். சில தூதரகங்களுக்கும் அவர்கள்தான் முன்னரங்கப் போராளிகள். புலம்பெயர்ந்த தமிழ் தரப்புகளில் இருப்பவர்கள் தாயகத்தின் மீது செல்வாக்குச் செலுத்த எத்தனிக்கும் பொழுது அவர்களுடைய பார்வையில் முதலில்படுவது மேற்படி முதிய அம்மாக்கள்தான். எல்லாப் போராட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவரின் ஒளிப்படங்களோடும் கண்ணீரோடும் முன்னே வருவது அவர்கள்தான். எல்லாப் போராட்டங்களிலும் தரையில் விழுந்து அழுது ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பது அவர்கள்தான். கட்சிகளாலும் நிதி வழங்கும் புலம்பெயர் தரப்புக்களினாலும் பிரிக்கப்பட்டு இருந்தாலும்கூட,தொடர்ச்சியாக விடாது போராடிக்கொண்டிருப்பது மேற்படி அம்மாக்கள்தான்.
கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாள் எழுக தமிழ்கள், ஒருநாள் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், பிரகடனங்கள் இவற்றுக்கும் அப்பால் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருப்பவர்கள் அம்மாக்கள்தான். புதுடில்லியில் வேளாண் மசோதாவுக்கு எதிராக போராடிய விவசாயிகளை போன்று அவர்கள் தொடர்ச்சியாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளுக்கு தீர்வு கிடைத்து விட்டது. ஆனால் இந்த அம்மாக்களுக்கு கிடைத்திருப்பது ஒரு லட்சம் ரூபாய். அதாவது காணாமல் ஆக்கப்பட்ட உயிர் ஒன்றின் பெறுமதி ஒரு லட்சம் ரூபா.
அண்மையில் ஊடகவியலாளரும் ஒரு இலத்திரனியல் ஊடகத்தின் உரிமையாளருமான நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார், இந்த அம்மாக்களின் போராட்டத்தை ஏன் மக்கள் மயப்படுத்த முடியவில்லை? என்று. நான் அவருக்குச் சொன்னேன் இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. முதலாவது அவர்களுடைய போராட்டம் பாதிக்கப்பட்டவர்களின் மையத்திலிருந்து உருவெடுத்தது. பாதிக்கப்பட்டவர்கள் எல்லாருமே அரசியல் தெளிவோடு தலைமை தாங்கலாம் என்றில்லை. இப்பொழுது சில தலைவிகள் அங்கே வந்துவிட்டார்கள். ஆனாலும் இந்த அம்மாக்களை ஒன்றுதிரட்டி ஒரு தொடரான போராட்டத்தை முன்னெடுக்கத்தக்க குடிமக்கள் சமூகங்களோ அல்லது கட்சிகளோ அமைப்புக்களோ தமிழ் மக்கள் மத்தியில் கிடையாது. இது முதலாவது காரணம்.
இரண்டாவது காரணம் இந்த அம்மாக்களின் போராட்டத்தை பின்னிருந்து ஊக்குவிக்கும் புலம்பெயர் தரப்புக்களும் கட்சிகளும் தமது நிதி உதவிகளால் இவர்களை பிரித்து வைத்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.
இந்த அம்மாக்களின் போராட்டம் மட்டுமல்ல, காணிக்கான போராட்டம், அரசியல் கைதிகளுக்கான போராட்டம்,பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான போராட்டம், போன்ற எல்லா போராட்டங்களும் ஒரு மையத்திலிருந்து திட்டமிடப்பட வேண்டும். ஒரு தெளிவான வழி வரைபடத்தோடு ஒரு மையத்திலிருந்து முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு ஒரு மையமாக செய்யப்படும் மக்கள் அமைப்பும் இல்லை, தெளிவான வழிவரை படமும் இல்லை.இதுதான் பிரச்சினை.
இவ்வாறான தோல்விகரமான ஓர் அரசியல் சூழலில், அன்னை பூபதியை நினைவு கூர்வது என்பது ஒரு சடங்கு ஆகிவிட்டது. ஆனால் மெய்யான பொருளில் பூபதியை நினைவுகூர்வது என்பது, அவரைப் போன்று போராடத் தயாராகக் காணப்படும் அம்மாக்களை ஒரு மையத்தில் ஒருங்கிணைப்பதுதான். யார் அதைச் செய்வது?