(20-04-2022)
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும், அமைதியான வழியில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு பொலிஸார் மேற்கொண்டு வரும் குறுக்கு நடவடிக்கைகளுக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
“மக்கள் பசியாலும் பட்டினியாலும் துன்பப்படுவதனால்தான் வீதிகளில் இறங்கி தமது மனக்கவலைகளை ஆர்ப்பாட்டங்களாகவும் கோஷங்களாகவும் வெளிப்படுத்துகின்றனர்.
காய்ந்த வயிற்றில் புரட்சி பிறக்கிறது என்பார்கள். அந்த வகையில், இன்று நாட்டு மக்கள் சமைப்பதற்கு எரிவாயு இல்லாமலும், தமது அன்றாடத் தொழில்களை மேற்கொள்வதற்கு எரிபொருள் இல்லாமலும் கஷ்டப்படுகின்றனர்.
நாளுக்கு நாள் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் விண்ணைத் தொடுகின்றது. குறைந்தபட்சம் பான், மா, பேக்கரி பண்டங்களுக்குக் கூட பாரிய விலை ஏற்றப்படுகின்றது. உழைப்பதற்கு வழியின்றி வீடுகளிலே முடங்கிக் கிடைக்கும் இந்த மக்கள், அரசை எப்படியாவது விரட்ட வேண்டும் என வீதிகளிலே இறங்கி போராடி வருகின்றனர்.
அப்பாவி மக்களின் இந்த உணர்வுகளை புரிந்துகொள்ளாமல், காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தும் பொலிஸாரின் செயற்பாடுகள் உடன்நிறுத்தப்பட வேண்டும்.
முப்படைகளும் மக்களின் உணர்வுகளை மதித்து, தமது கடமைகள் மேற்கொள்ள வேண்டும்.
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களுக்கும் எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.