மன்னார் நிருபர்
(26-04-2022)
மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் தொடர்பான மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றத்தில் மூன்று வார கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியை மேற்கொள்ள தேவையான காலம் தொடர்பிலும், ஏற்கனவே மீட்கப்பட்ட எச்சங்களை பிரித்தெடுத்து அறிக்கை தயார் செய்வதற்கான காலம் தொடர்பிலும் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கமைய, இந்த விடயம் தொடர்பான மேலதிக அறிக்கைகளை தயார் செய்ய மூன்று வாரங்கள் அவசியம் என மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைக்கு அமைய, மனிதப் புதைகுழி வழக்கை எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி வரை மன்னார் நீதவான் ஒத்திவைத்துள்ளார்.
இதனிடையே, மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை தொடர்பான முன்னேற்ற அறிக்கை வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய , வவுனியா மேல் நீதிமன்றத்தில், மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படவுள்ளது.