சிவா பரமேஸ்வரன் & நடராசா லோகதயாளன்
ராஜபக்சக்களை வீட்டிற்கு அனுப்பும் போராட்டம் மேலும் மேலும் தீவிரமடைந்து வருகிறது. வயது சமூக, பொருளாதார, கல்வி மற்றும் வசிப்பிடம், ஜாதி, மதம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு `ஆட்சி மாற்றத்தை` கோரி காலிமுகத்திடலில் மக்களின் போராட்டம் தொடருகிறது. இந்தப் போராட்டம் இப்போது மலையகப் பகுதிகளுக்கும் பரவி அங்கும் சூடுபிடித்து வருகிறது.
இதனிடையே எதிர்க்கட்சிகள் கண்டி முதல் கொழும்பு வரையிலான யாத்திரைக்கும் மக்கள் ஆதரவு பெருகுவதைக் காணக்கூடியதாக உள்ளது. அதேநேரம் ஆட்சியிலிருந்து விலகும் எண்ணம் ஏதும் தங்களுக்கு இல்லை என்று ராஜபக்ச சகோதரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ”என்னை ஜனாதிபதி பதவி விலகும்படி கோரவில்லை; மேலும் நாங்கள் எம்மை பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் எம்மை பதவி விலகும்படி கோரவில்லை, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையென்றால் பதவி விலகுவதற்குத் தயார்” என்று மஹிந்த ராஜபக்ச திருவாய் மலந்துர்ள்ளார்.
ஆனால் இந்தப் போராட்டங்களில் முக்கியமானதொரு ஒரு விஷயத்தையும் அவதானிக்க முடிந்தது. தலைநகர் கொழும்பு, சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பல மாவட்டங்கள், மலையகப்பகுதி ஆகிய இடங்களில் போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், தமிழர் தாயகப் பகுதியில், இந்த போராட்டங்களுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்கிற மனநிலை காணப்படுகிறது. எரிவாயு, மண்ணெண்ணெய், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு ஆகியவை நாடு முழுவதும் நிலவுகின்ற நிலையில், வடக்கு கிழக்கு மக்களின் நிலைப்பாடு சற்று துணுக்குறச் செய்கிறது.
இந்நிலையில், நாட்டில் நிலவும் நெருக்கடி காரணமாக தமிழர் தாயகத்தில் இருந்து தமிழ் மக்கள் தமிழகத்திற்குப் படையெடுக்கும் அவலம் அதிகரிக்கின்றது.
1983ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்திற்கு சென்ற 2 லட்சம் தமிழ் மக்கள் இன்றும் தமிழ் நாட்டில் தமக்கான தேவைகள், வேலை வாய்ப்புக்கள் மற்றும். சுதந்திரமான நடமாட்டங்கள் இன்றி அதற்காகக் குரல் எழுப்பும் நிலைமையில் தற்போது மீண்டும் தமிழ் மக்கள் தமிழகத்திற்குச் செல்கின்றனர். ஆனால் இலங்கையில் இடம்பெற்ற இனப் பிரச்சனை காரணமாகத் தமிழ் நாட்டிற்கு தப்பிச் சென்ற 2 லட்சம் மக்களையும் தாயகம் திரும்புமாறு போர் முடிவுற்றபின்னர் வந்த மகிந்த மற்றும் மைத்திரி ஆட்சியில் பல தடவை அழைப்பு விடுத்ததோடு சகல வசதி வாய்ப்பும் ஏற்படுத்தித் தருவதாகவும் வாக்குறுதி வழங்கப்பட்டது. இதன் பெயரில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் மக்கள் நாடு திரும்பினர்.
இவ்வாறு 2016ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பியவர்களிற்கு ஒரு வீட்டு வசதியேனும் வழங்கப்படாத நிலைமையில் இனியும் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமலேயே இரண்டாவது தடவையும் தமிழகம் சென்றோம் என நீர்வேலியில் இருந்து கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி தமிழகம் சென்றவர்கள் கூறுகின்றனர்.
இறுதி யுத்த காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்து 2016ஆம் ஆண்டு நாடு திரும்பி வவுனியாவில் இருந்தபோதும்அவர்களுக்கு வீடு வழங்கப்படவில்லை. கோப்பாய் வந்தபோதும் வீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. 2020ஆம் ஆண்டு வரையில் அவர்களிற்கென ஓர் நிரந்தரக் காணியும் இருந்திருக்கவில்லை. இதனால் காணியை ஏற்படுத்தி வீட்டுத்திட்டத்தை கோரியபோது அரசு வழங்கியது ஓர் கழிப்பறை வசதி மட்டும்தான் அதுவும் 2022ஆம் ஆண்டு இவர்கள் தமிழகத்திற்கு புலம்பெயரும் வரையில் கழுப்பறையின் கட்டுவேலையும் நிறைவுபெறவில்லை. இந்தக் காலத்தில் நாட்டில மீண்டும் உச்சபட்ச பொருளாதார நெருக்கடி இத்தனை நெருக்கடிகளிற்கும் முகம்கொடுப்பதனைவிட ஒருநாள் உயிரைப் பணயம் வைப்பது சுலபமாகக் கண்டு படகுபயணத்தின் மூலம் மீண்டும் தமிழ்நாட்டை அடைந்துள்ளனர்.
இதேநேரம் மன்னாரில் இருந்து பயணித்த 4 மாத கர்ப்பவதியின் கணவர் கருத்துரைக்கும்போது ”நாட்டில் பல வைத்தியசாலைகளில் மருந்து இன்மையால் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்படுகின்றன. சிறுவர் வைத்தியசாலை பகிரங்க உதவிகோருகின்றது. இந்த சூழலில் குழந்தைகளிற்கான பால்மா கடந்த ஆண்டு 400 ரூபா இந்த ஆண்டு ஆயிரம் ரூபாவாகிவிட்டது இன்னும் ஆறு மாதம் கழித்து என்ன விலையை எட்டுமோ என்ற ஏக்கத்துடன் அப்போது மருந்துகள் கிடைக்குமா என ஐயம்கொள்வதிலும் நியாயம் உண்டு ஏனெனில் இன்று அரச மருத்துவமனைகளில் மட்டுமல்ல தனியார் மருத்துவமனைகளில்கூட பல மருந்துகள் இல்லை. இதன் உச்ச வெளிப்பாடாக பனடோலே இல்லை என்பதே உண்மையாகும். மறுபுறத்தில்1260 ரூபா விறபனை செய்த எரிவாயு சிலிண்டர் இனி 5,170 ரூபா என கட்டியம் கூறப்படுகின்றது. 65 ரூபா விற்பனை செய்த பாண் 160 ரூபாவாகிவிட்டது” என்று உதயனிடம் தெரிவித்தார்.
இவை இவ்வாறிருக்க சாதாரண கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய கூலியாட்கள் மட்டுமல்ல அரச வருமானம் பெறுபவர்கள்கூட இலங்கையில் வாழமுடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது என்பதனையும் இந்த தமிழ் நாட்டிற்கான படையெடுப்பு எடுத்தியம்பியுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதற்கு உதாரணமாகவே மாதம் 60 ஆயிரம் ரூபா சம்பளம் பெறும் ஓர் பொலிஸ் உத்தியோகத்தர் அந்த வேலையினை விட்டு குடும்பத்துடன் தமிழ்நாட்டிறகு புலம்பெயர்ந்தமை நிரூபணம் செய்கின்றது.
இவை தொடர்பில் வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராயா நிரேசைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “மீள்குடியேற்ற கொள்கை இன்மையால் வீட்டுத்திட்டம் பலருக்கு கிடைக்கவில்லை, விவசாய கிராமங்களில் இருந்தும் தற்போது மக்கள் இந்தியா செல்கின்றனர் என்றால் அரசின் திட்டமில்லாத விவசாயக் கொள்கையும் இந்த பாதிப்புக்கு காரணம். அதாவது விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். உரத்தை தடைசெய்தமையால் ஏற்பட்ட விளைவு. இதேபோன்று சீரான எரிபொருள் விநியோகம் இன்மையால் மீனவர்கள் தொழிலிற்குச் செல்ல முடியவில்லை. இதனால் 500 ரூபாவிற்கு வாங்கிய மீன் ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. மறுபுறத்தில் பொருட்களின் விலை 100 வீதம் 150 வீதம் அதிகரித்துள்ளது. இவையே நெருக்கடியின் உச்சமாக மாறி நாட்டை விட்டு தப்பிச் செல்வதனை தவிர வேறு வழியில்லை என்ற மனோநிலையை உருவாக்குகின்றது” என்று மக்களின் நெருக்கடியை எடுத்துரைத்தார்.
தெற்கில் இருக்கும் கொதி நிலைமை வடக்கு கிழக்கில் இல்லை என்ற கருத்தும் கூறினாலும் தமிழ் மக்கள் வறுமை, விலையேற்றம், ஏன் மரணம் வரை கண்ட மக்கள் இதனை பாரிய விடயமாக கருதாமல் இயல் அளவை கொண்டு செயல்படுகின்றனர். கடலிலே ஒரு வாரம் கடற்படை நிற்காது என அறிவித்தால் வடக்கு கிழக்கு மக்களை தமிழ்நாட்டில் தேடும் நிலைமை ஏற்பட்டாலும் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்று நாம் பேசிய பலர் ஒரே குரலில் கூறினர்.
இவை அனைத்திற்கும் போர், எமக்கு இடம்பெற்ற அநீதி, எதற்குமே நீதி இன்மை போன்றவையே இந்த சலிப்பிற்கு காரணம் என்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பகிர்ந்துகொள்கின்றனர். இதேநேரம் இவ்வாறு தமிழ் மக்கள் மீண்டும் அகதிகளாகச் செல்வது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தனை உதயன் சாரில் தொடர்பு கொண்டு கேட்டோம்.
”இன்று இலங்கையின் பொருளாதாரம் முழுமையாக பாதாளத்தை நோக்கிச் செல்வதனால் இலங்கையில் வாழ முடியுமா என்ற அச்சம அனைத்து தரப்பு மக்களிடமும் எழுந்துள்ளது. இதன் காரணமாக தம்மை அரவணைக்க உள்ள ஒரே இடமாக தமிழகத்தை கருதுகின்றனர். ஏனெனில் 1983ஆம் ஆண்டு முதல் பல கட்டங்களில் அவலம் ஏற்பட்டபோது எமது மக்களை தமிழகமே பாதுகாத்த அனுபவம் எமது மக்களிடம் உண்டு”.
இதற்கும் அப்பால கடல் மூலம் பயணித்து விமானம் மூலம் அல்லது கடல் வழியாக தாயகம் திரும்பியவர்களிற்கு பாதைகள் தொடர்பிலும் பரிச்சயம் உள்ளவர்கள் முதல் கட்டமாகச் செல்கின்றனர். இலங்கையின் பொருளாதாரம் ஓர் சீரான நிலைமைக்கு வருவதற்கான அறிகுறிகளும் காணப்படவில்லை இதனால் மக்களிற்கும் மாற்றுவழி தெரியவில்லை என்று சித்தார்த்தன் கூறுகிறார்.
”தாயக வாழ்வைவிட்டு அகதி வாழ்விற்கு மக்கள் செல்லும் அவல நிலை இன்று நாட்டில் காணப்படுகிறது. நாட்டில் நிலை மேலும் நெருக்கடியானால் தமிழர்கள் மட்டுமின்றி தென்னிலங்கை மக்களும் தமிழ்நாட்டிற்கு படையெடுக்கும் அகதிகளாக செல்லும் அவலம் ஏற்படும்” என்றார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்.
சித்தார்த்தனின் அதே கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன் பகிர்ந்து கொண்டார். ”இலங்கையில் தமிழரகளிற்கு உயிர்வாழ உத்தரவாதம் இல்லை என்ற நம்பிக்கையீனம் ,பஞ்சம் போன பின்பு சிங்களம் மீண்டும் மகா வம்சக் கொள்கைக்குள் மூழ்கும் என்ற ஐயம் , தமிழர்களிற்கு என்ற தனித்துவம் இல்லை போன்ற காரணங்களால் உயிரையாவது பாதுகாப்போம் என்ற எண்ணம், முன்பு போனது துப்பாக்கிகளிற்கும் குண்டுக்கும் அஞ்சி ஓடினார்கள் ஆனால் தற்போது ஒரு மாறுபட்ட சூழலிலும் தொப்புள்கொடி உறவுகளை நம்பி பயணிக்கின்றனர்” என்றார்.
தமிழ் மக்கள் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கையிழந்து வருவதையும் பலருடன் உரையடியபோது காண முடிந்தது. தமிழ் மக்களின் இருப்பில் இன்றுவரை நிரந்தர தீர்வை எட்ட எந்த தமிழ் தரப்பும் ஆக்கபூரவமாக செயல்படவில்லை எனவும் இனிமேலும் எந்தவொரு தரப்பும் அவ்வாறு செய்யப்டும் என்ற நம்பிக்கையீனமே நாட்டை விட்டு வெளியேறும் மன நிலைக்கு முக்கிய காரணம் என்கிற குரல் ஓங்கி ஒலிக்கிறது. இதையே கடந்தவாரம் தமிழ்நாடு செல்ல முற்பட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 39 வயதுப் பெண்மணி தெரிவித்தார்.
இலங்கையில் உள்ளவர்கள் இவ்வாறு கூறினாலும் இம்மாதம் முல்லைத்தீவில் இருந்து குடும்பமாக தமிழகம் சென்று மண்டபம் அகதி முகாமில் வசிக்கும் சுப்பிரமணியம் கோணேஸ்வரனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, தமிழகம் வந்த நாள் முதல் எந்தப் பொருளும் எந்த விலை என்பதே எமக்குத் தெரியாது. ஏனெனில் மூன்று நேரமும் தயார் செய்யப்பட்ட உணவே வழங்கப்படுகின்றது. தேநீராக இருப்பினும் அந்த நேரத்திற்கு கிடைக்கும் மருந்து வகைகளும் கிடைக்கின்றன. இனி மாணவர்களின் கலவி தொடர்பிலேயே சிந்திக்க வேண்டும் என்கின்றார்.
எனினும் தொப்புள்கொடி உறவுகள், தாய்த் தமிழகம் என்றெல்லாம் கூறினாலும் இந்தியாவிற்குச் சென்றவர்களால் இன்றுவரை எந்த நாட்டிற்கும் செல்லும் அனுமதியோ , உயர் கல்வி வாய்ப்புக்களோ, மருத்துவமோ அல்லது அரச தொழில் வாய்ப்போ இன்றி இரண்டாந்தர பிரஜைகளாகவே நடாத்தப்படுகின்றனர் என்ற யதார்த்த நிலையும் உள்ளது. இதேநேரம் ஈழத் தமிழர்கள் என்பதற்கு அப்பால் அகதிகள் என்னும் அடைமொழியில் ஓர் காட்சிப் பொருளாகவே அவர்கள் பார்க்கப்படுகின்றனர் என்பது முகாம்வாசிகளுடன் உரையாடிய போது தெரிய வந்தது.
தமிழ் மக்களின் பார்வையில் தென்னிலங்கை போராட்டம் சிங்கள மக்களின் பிரச்சனைக்காக அவர்கள் போராடுகின்றனர் என்கிற எண்ணப்பாடே உள்ளது. இலங்கையில் இன ரீதியான இன்னும் மக்கள் பிளவுபட்டே நிற்கின்றனர் என்பதே யதார்த்தம்.