மன்னார் நிருபர்
02-05-2022
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை(1) ஓய்வை கழிப்பதற்காக தலை மன்னார் கடலுக்கு சென்ற 10 சிறுவர்கள் உட்பட 13 நபர்களை தலை மன்னார் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை(1) தொழிலாளர் தின விடுமுறையை முன்னிட்டு மன்னாரில் கரையோர பகுதிகளை சேர்ந்த பல குடும்பங்கள் பொழுதை கழிப்பதற்கு கடற்கரை பகுதிக்கு சென்ற நிலையில் சிறுவர் குழு ஒன்றும் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சிறுவர்கள் இந்தியா செல்ல முயற்சிப்பதாக தெரிவித்து தலை மன்னார் கடற்படையினரால் 13 நபர்களும் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று திங்கட்கிழமை(02) மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட நபர்கள் சார்பாக சட்டத்தரணி S.டினேசன் ஆஜராகிய நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் கடற்கரையை பார்வையிட சென்றதாகவும் கடற்படையினர் வேண்டும் என்று அவர்களை கைது செய்ததாகவும் சமர்பணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் வழக்கை விசாரித்த மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி 13 நபர்களையும் சட்ட வைத்திய அதிகாரியிடன் ஒப்படைத்து அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து அறிக்கையை பார்வையிட்ட பின்னர் குறித்த 10 சிறுவர்களும் பெற்றோர்களுடன் செல்ல அனுமதிக்கப்பட்ட தோடு 3 நபர்களையும் பிணையில் செல்ல அனுமதி அளித்தார்.
கடந்த மாதமும் மன்னார் மாவட்டத்திற்கு சுற்றுலாவிற்கு என வருகை தந்து விடுதி ஒன்றில் தங்கியிருந்த குடும்பம் ஒன்றையும் பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து விசாரணை மேற் கொண்டமை குறிப்பிடத்தக்கது.