இலங்கையில் பல வாரங்களாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மக்கள் போராட்டமாக வெடித்தது. பொதுமக்களின் கோபத்துக்கு அடிபணிந்த மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனால் அதிருப்தியடைந்த மஹிந்த ஆதரவாளர்கள் அமைதி வழியில் போராடிக்கொண்டிருந்த மக்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினார். ஆனால் போராட்டக்காரர்களும் பதில் தாக்குதல் நடத்தியதால் இலங்கை போர்க்களமாக மாறியது.
மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்ட ஆளும் கட்சி தலைவர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளின் வீடுகள் தீக்கரையாகின. மேலும், மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர்களை போராட்டக்காரர்கள் தேடித்தேடி தாக்க தொடங்கியதால் பெரும் பதற்றம் உருவானது. கலவரம் காரணமாக எம்.பி ஒருவர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனால் உயிரை காப்பாற்றிக்கொள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில் தப்பிய மஹிந்த ராகபக்ச திருகோணமலை பகுதியில் உள்ள இலங்கை கடற்படை தளத்தில் தஞ்சமடைந்தார். அங்கு கடற்படை தளபதியின் இல்லத்தில் பலத்த ராணுவ பாதுகாப்புடன் மஹிந்த குடும்பத்தினர் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கையில் ஏற்பட்ட கலவரத்திற்கு காரணமான மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய வலியுறுத்தி கொழும்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அவரது மகன் நமல் ராஜபக்ச, ஜான்சன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாரச்சி, ரத்னாயக், சனத் நிஷாந்தா, சஞ்சீவா எதிரிமன்னே உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இலங்கை கலவரத்திற்கு காரணம் எனும் குற்றச்சாட்டில் மஹிந்த ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, இந்த வழக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் மஹிந்த ராஜபக்ச கைது செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.