பிள்ளையினார் நடராஜன் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும். 1939 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி பிறந்த இவர், 2022 மே மாதம் 12 ஆம் திகதி எம்மைவிட்டுப் பிரிந்தார். இவர் யாழ்ப்பாணத்தில் கீரிமலைக்கு அருகே உள்ள மயிலங்கூடல் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பிள்ளையினார் தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனாவார். திருமணமானபின் நாயன்மார்காட்டில் வசித்து வந்தார். ஆரம்ப கல்வியை மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் பெற்றார். மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவனாகவும், அதன்பின் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிந்தாலும், இவர் எல்லோராலும் அறியப்பட்ட சிறந்த இலக்கிய ஆளுமை கொண்டவராக இருந்தார். காங்கேசன் என்ற புனைப் பெயரில் பல ஆக்கங்களை வெளியிட்டிருக்கின்றார். நான் தமிழ் மன்றச் செயலாளராக இருந்த போது மகாஜனன் இதழின் தொகுப்பாசிரியராக இவர் இருந்தார். கல்லூரியில் சின்னப்பா இல்லத்தின் பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றினார். அதன்பின் யாழ். இந்துக் கல்லூரிக்கு மாற்றலாகிச் சென்றிருந்தார்.
இலக்கியத் தொடர்பு காரணமாக இவர் நன்கு அறிமுகமானவராக இருந்தார். ‘ஈழத்தமிழர்’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை 2012 ஆம் ஆண்டு யூன் மாதம் மைலங்கூடல் பி. நடராஜன் என்ற பெயரில் இவர் வெளியிட்ட போது எனக்கும் அழைப்பிதழ் அனுப்பி இருந்தார். இந்த நூலுக்காகப் பழைய ஆவணங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து மிகவும் பெறுமதி மிக்க நூலாக உருவாக்கி இருந்தார். யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர் சிவலிங்கராஜா இந்த நூலை வெளியிட்டு வைத்தார். அடுத்த தலைமுறையினருக்கான பல அரிய விடயங்கள் இந்த நூலில் அடங்கி இருக்கின்றன. பரணி பதிப்பகம் இந்த நூலைப் பதிப்பித்திருந்தது. பல்லாயிரம் மைல்கள் கடந்து போகமுடியாவிட்டாலும் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தேன்.
அதன் பின் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களின் சிறுவர் கவிதைகள் அடங்கிய ‘குழந்தைக் கவிதைகள்’ என்ற கவிதைத் தொகுப்பு ஒன்றையும் மகாஜனக் கல்லூரியின் சார்பில் தொகுத்து வெளியிட்டிருந்தார். அப்பொழுதும் என்னோடு தொடர்பு கொண்டு எனது சிறுவர் கவிதைகளைக் கேட்டு வாங்கி, அந்த நூலில் தொகுத்துப் பிரசுரித்திருந்தார். எனது 4 பாடல்களை அத்தொகுப்பில் இடம்பெறச் செய்தார். இவர் சிறுவர் பாடல்கள் அடங்கிய தனது இரண்டு நூல்களையும் வெளியிட்டிருக்கின்றார். பாவலர் துரையப்பாபிள்ளையின் சிந்தனைச் சோலையை மீள்பதிவு செய்தது மட்டுமல்ல, ‘பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு மலர்’ சிறப்பாக வெளிவருவதற்கும் இவர் முக்கிய காரணமாக இருந்து செயற்பட்டார்.
சமீபத்தில் திருமதி கோகிலா மகேந்திரனைப் பற்றிக் கனடா உதயன் வெள்ளிவிழா மலரில் எழுதிய கட்டுரையில் இவரது இலக்கிய ஆளுமை பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். மகாஜனக்கல்லூரி முன்னாள் அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் குறிப்பிட்ட ‘மகாஜனாவின் நவரத்தினங்களில்’ இவரும் ஒருவராக மகாஜனாவின் நூற்றாண்டு மலரில் இடம் பெற்றிருந்தார். மகாஜனாவின் இலக்கிய ஆளுமை கொண்ட அந்த ஒன்பது பேரில் இவரும் ஒருவராக இடம் பெற்றிருக்கும் பதாதையைக் கல்லூரியிலும் காட்சிப்படுத்தி இருந்தார்கள். அதில் எனது படமும் இடம் பெற்றிருந்தது எனக்குப் பெருமையாக இருந்தது.
யாழ்ப்பாணம் வரும்போது, மகாஜனக்கல்லுரி உயர்வகுப்பு மாணவர்களுக்கு ‘சிறுகதை நாவல் பற்றி பயிற்சிப்பட்டறை’ ஒன்றை எடுக்க வேண்டும் என்று அவர் என்னிடம் ஆர்வத்தோடு கேட்டிருந்தார். 2019 ஆண்டு நிறுவுனர் பேருரை ஆற்ற அங்கு சென்ற போது அதற்கான ஏற்பாடுகளைக் கல்லூரி அதிபர் திரு. மணிசேகரன் அவர்கள் செய்திருந்தாலும், பயிற்சிப் பட்டறையை நடத்த எனக்கு நேரம் கிடைக்கவில்லை, மாணவர்கள் மத்தியில் உரையாற்ற மட்டுமே முடிந்தது. கல்லூரி மாணவர்களை இலக்கியம் சார்ந்த முயற்சிகளில் ஈடுபாடு கொள்ள வைப்பதில் ஆசிரியர் நடராஜன் பல வழிகளிலும் முன்னின்று செயற்பட்டார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அவருடைய குடும்பத்தினருடன் சேர்ந்து, மகாஜக்கல்லூரி கனடா பழைய மாணவர்கள் சார்பாகவும், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பாகவும் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி!
குரு அரவிந்தன்,
தலைவர், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்.