திருமதி. வசந்தா நடராசன் B.A.,
416- 332-0269
vasantha@rogers.com
“ ஆகமத்தின் உட்பொருள் அகண்டமூலம் ஆதலால்
தாகபோக மின்றியே தரித்ததற் பரமும்நீ
ஏகபாதம் வைத்தனை உணர்த்தும் அஞ்செழுத்துளே
ஏகபோகம் ஆகியே இருந்ததே சிவாயமே”
புராணங்களிலே கூறப்பட்டுள்ள திருவுருவங்களின் பெயர்களை அடிப்படையாக வைத்தும், கோவில்களை எழுப்புவோரின் பெயர்களைக் கொண்டும், நாட்டிற்கு நன்மை புரிந்து மக்களால் போற்றப்பட்டோரின் பெயர்களிலும், சித்தர் பெருமக்களின் பெயர்களிலும் ஆலயங்கள் காணப்படுகின்றன. ஈழத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து, சித்தத்தைச் சிவன்பால் வைத்து, சீவனே சிவனெனக் கண்ட, நான்கு சித்தர்களுடைய சமாதிக்கோயில்கள் ஈழத்தின் நான்கு பகுதிகளிலும் காவல் அரண்கள்போல அமைக்கப்பட்டுள்ளன.
வடக்கே, யாழ்ப்பாணத்தில் நீராவியடியில் கடையிற்சுவாமிகள் சமாதி, தெற்கே நாவலப்பிட்டி, குயின்ஸ்பரியில், நவநாதச் சித்தரின் சமாதி, மேற்கே கொழும்பு, முகத்துவாரத்தில், பெரியானைக்குட்டி சுவாமிகள் சமாதி, கிழக்கில் காரைதீவில் சித்தானைக்குட்டி சுவாமிகள் சமாதி என, ஈழத்தின் நாற்புறமும் சித்தர் சமாதிகள் அமைந்து, அருள்ஒளி ஊட்டுவதாகக் காணப்படுகின்றன.
சித்தர்கள் உலகெங்கும் உள்ளனர். எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் இருக்கின்றனர். சித்தர்கள், உலகமக்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள். சாதிமத வேறுபாடு அற்றவாகள். நாடு, மொழி, இனம் ஆகிய குறுகிய எல்லையைக் கடந்தவர்கள். சித்தர்கள் எங்கும், எப்போதும் தோன்றி, மக்கள் இன்புற்று வாழ வழிகாட்டுகின்றனா. சித்தர்கள், ஆன்மநேய ஒருமைப்பாட்டை, எம்மதமும் சம்மதம் என்ற சமரச சன்மார்க்கத்தை வளர்க்கின்றனர். “யான்பெற்ற இன்பம் பெறுக இ;வ்வையகம்” என்பதே சித்தர்களின் குறிக்கோள். “ ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதே சித்தர்களின் சமயக் கோட்பாடு. “எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்” என்பதன்றி வேறொன்றும் அறியாதவர்கள் சித்தர்கள் சித்தர்கள் சிலர் தமது இயற்பெயரை இழந்து, வாழ்ந்த இடத்தின் பெயரால், தோற்றத்தால், மக்கள் மனதில் நிலைத்துள்ளனர். ஈழத்தில் ஏறக்குறைய நாமறிந்த சித்தர்களாக, பதினேழு சித்தர்களின் பெயரைக் குறிப்பிடலாம். கடயிற்சுவாமிகள், பரமகுரு சுவாமிகள், குழந்தைவேற் சுவாமிகள், அருளம்பல சுவாமிகள், நவநாதசித்தர், பெரியானைக்குட்டி சுவாமிகள், சித்தானைக்குட்டி சுவாமிகள், சடைவரத சுவாமிகள், ஆனந்த சடாட்சர குரு சுவாமிகள், செல்லாச்சிஅம்மையார், தாளையான் சுவாமிகள், மகாதேவசுவாமிகள், சடையம்மா அம்மையார், நாகநாத சித்தர், நயினாதீவுச் சுவாமிகள், சிவ.சண்முகவடிவேல் சுவாமிகள் என்போரைக் குறிப்பிடலாம்.
இவ்வாறே தமிழகத்திலும் சித்தர்கள் பதினெண்மர் வாழ்ந்ததாகக் கூறுவர். இவ்வழக்கு மிகப் பழமையானது. தற்காலத்திலும் பலர் சித்தர்களாகி, மக்களை நெறிப்படுத்தி வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான சித்தர் மரபு, காலத்திற்குக் காலம் வேறுபட்டுக் காணப்படுகின்றது. திருமூலர், தமிழ்ச்சித்தர் பரம்பரையின் தலைவராகப் போற்றப்படுகின்றார். மற்றும், கருவூர்த்தேவர், நக்கீரதேவர், கபிலதேவர், பட்டினத்தார், இடைக்காடர், கொங்கணவர், அகப்பேய்ச்சித்தர், குதம்பைச் சித்தர், அழுகணிச்சித்தர் ஆகியோரும் சித்தர்களே.
சித்தர்கள் மனித சமுதாயத்திற்குப் பெரும்பணியாற்றியுள்ளனர். மக்களின் மனஇருளைப் போக்கி, ஞானஒளிபரப்பி, சிந்தனைச் செல்வத்தை வாரி வழங்கினர். உடல் நோய்களைத் தீர்க்கும் மூலிகைகளைக் கண்டறிந்து, மருந்து செய்யும் முறைகளைத் தரிவித்து, நூல்களை இயற்றியுள்ளனர். கோள்களின் நிலை, காலமாறுபாடு, சுடர்களின் இயக்கம், ஆகியவற்றை விளக்கி, சோதிடநூல்கள் எழுதியுள்ளனர். நிறைமொழி மாந்தர்களாக விளங்கிய சித்தர்கள், மறைமொழிகளை மந்திரம் என்ற பெயரால் வழங்கினர். மனித ஆற்றலை ஒருமைப்படுத்தவும், கூர்மையாக்கவும், வெளிப்படுத்தவும், மாந்திரீகங்களை வெளியிட்டனர். தெய்வங்களுக்கு முறைப்படி பூசை செய்ய, பூசைவிதிபற்றிய பாடல்களைப் பாடியுள்ளனர். ஆத்மசக்தி, யோகநிலை ஆகியவற்றைவிளக்கி இலக்கியம் படைத்தனர்.
ஆயினும் மாயையில் உழலும் மாந்தர்களால், சித்தர்களின் போக்கை முற்றாக உணர்ந்து, பயன்பெற முடியாத கர்மநிலை எக்காலத்திலும் காணப்பட்டுள்ளது. சித்தனை பித்தனாகக் கருதி, கல்லாலும், சொல்லாலும் அடித்துத் துன்புறுத்திய சம்பவங்களும், சித்தர் வரலாறுகளில் மாறாத கறையாகக் காணப்படுகின்றது. ஆயினும், சித்தர் வாழ்வும், அவர்கள் மனித குலத்தின்மீது கொண்ட நேயமும், படிப்படியாக காலவரலாற்றிலே உணரப்பட்டுள்ளது.
இவ்வாறான சித்தர் பரம்பரையினர் ஈழத்திலும் இலைமறை காயாக வாழ்ந்து, பாமரமக்களிடமும், மற்றோரிடமும் பக்திமார்க்கத்தைப் பரப்பி, நல்வழிகாட்டியுள்ளனர். ஈழத்திலே வாழ்ந்த சித்தர்களால்; ஈழத்தமிழ் மக்களுடைய அகவாழ்விலே மாற்றம் ஏற்பட்டது. சித்தர்கள் “உட்சுவர் இருக்க புறச்சுவர் தீட்டுவதில் பயனேது” என்பதற்கமைய, புறச்சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்காது அகச் சீர்திருத்தம்பற்றியே சிந்தித்துள்ளனர். ஈழத்திலே வாழ்ந்த சித்தர்களுள் ஆதிக்கடைநாதன் எனப்போற்றப்படும், யாழ்ப்பாணம் கடையிற்சுவாமிகள் ஈழத்தின் சித்தர் பரம்பரைக்கு வித்திட்ட, மூலகுருவாகப் போற்றப்படுகின்றார். இச்சித்தர்பெயரால் அமைந்த கடையிற்சுவாமிகள் சமாதிச் சிவாலயம், யாழ்ப்பாணத்திலுள்ள நீராவியடியில் அமைந்துள்ளது.
வளரும்….