வாழ்த்துச் செய்தி
என் இனிய நண்பர் பத்திரிகையாளர் கவிஞர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களின் அறிமுகம் என் மணிவிழாவுக்குப்பின் வாய்த்த மணியான பேறு. இளமையிலேயே இருவரும் சந்தித்திருக்கலாமே என்று அந்த தாமத்தை நிந்திக்க வாய்ப்பில்லாமல் நூறாண்டு பழகிய நிறைவை கவிதையிலும் உறவிலும் அவர் ஏற்படுத்தியிருப்பது அவரது பேராற்றலும் பண்பு நலன்களும் தான்.
தேனீயைப் போல எப்போதும் அவர் சுறுசுறுப்பாக இருப்பது மட்டுமல்ல அதன் பயனைச் சமூகத்துக்கும் கொண்டு செல்வதில் அவர் தனித்திருக்கிறார். என்னை அவருக்குப் பிடிக்கும் என்பதைப்போல அவரையும் எனக்குப் பிடிக்கும். அதன் காரணமாகவே நான் ‘கவிதை உறவு’ மாத இதழில் எழுதி வரும் மனத்தில் பதிந்தவர்கள் தொடரில் அவர் குறித்தும் எழுதி அகம் மகிழ்ந்திருக்கிறேன். மிக அபூர்வமானவர்களே இத்தொடரில் இடம்பிடிக்க முடியும் என்பதை
என் நட்பு வட்டம் அறியும்.
கவிஞர் லோகேந்திரலிங்கம் அவர்களின் படைப்பாற்றல் என்னை பிரமிக்க வைத்திருப்பதில் வியப்பில்லை. எளிமையான சொற்கள், இதமான நடை, எடுத்துக்கொண்ட செய்தியை இதயம் தொடக் கொண்டு செல்லும் லாவகம் யாவும் அவரது திறன்கள் எனலாம். சமூகத்தைப் படம் பிடிக்கிற பாட்டுத் திறனும் மனித நெஞ்சங்களில் இடம்பிடிக்கிற பண்பு நலன்களும் பொதிந்த கவிஞர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் எழுத்துப் பொன்விழா காண்பதோடு இலங்கைச் சிறப்பிதழையும் கொணர்கிறார் என்றறிய மகிழ்ச்சிடைகிறேன். பொன்விழா வளர்ந்து நூறாண்டு நிறைய வாழ்த்தி மகிழ்கிறேன். நலத்தோடு அவர் நீடுவாழும் காலம் தமிழுக்கும், தமிழ்ச் சமுதாயத்துக்குமான கொடை. இக்கொடையை அவர் தந்து மகிழ
இறையருள் வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன்,
(ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்)