சிவா பரமேஸ்வரன் முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி
இலங்கையில் இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ்க் கட்சிகள் தனித்தும் கூட்டாகவும் போட்டியிட்டாலும் தமிழர் விடுதலைக் கூட்டணி(உதயசூரியன்), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு(வீடு) ஆகிய கட்சிகளுக்கே தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.
கடந்த ஏழு தேர்தல்களில் 2000ஆம் ஆண்டு தவிர ஏனையத் தேர்தல்களில் கிடைத்த 8 ஆசனங்களுக்கு 11 பேர் வரை நியமனம் பெற்றிருந்தனர். இந்த நியமனம் பெற்றவர்களில் மறைந்த தலைவர் எம்.சிவசிதம்பரம் தவிர மற்ற அனைவரும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
உதயசூரியன் தொடக்கம் வீடு வரை பங்காளிக் கட்சிகளுக்குத் தேசியப் பட்டியல் ஆசனம் என்பது எட்டக்கனியாகவே தொடருகிறது. அவர்கள் அவலக் குரல் எழுப்பினாலும் அது உதாசீனம் செய்யப்படுகிறது.
நடைபெறவுள்ள தேர்தலில் வீடு, வீணை, மீன் ஆகியக் கட்சிகள் தேசியப் பட்டியலுக்கான வேட்பாளர்களைத் தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்துள்ள போதிலும் கூட்டமைப்புக்கு மட்டுமே அதற்கான வாய்ப்பு உள்ளது.
1989 தேர்தல்:
த.வி.கூ பொதுச் செயலர் அ.அமிர்தலிங்கம் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்வார் என்று ஏற்கனவே கட்சி முடிவு செய்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் விடயத்தில், த.வி.கூவிற்கும் பங்காளிக் கட்சிகளுக்கும் (EPRLF, TELO, ENDLF) இழுபறி நிலை ஏற்பட இறுதி நேரத்தில் அவர் மட்டக்களப்பில் போட்டியிட முடிவு செய்தார். மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளராகப் பெயரிடப்பட்டிருந்த சீ.சம்பந்தமூர்த்திக்கு தேசியப் பட்டியலில் முதலிடம் வழங்கப்பட்டிருந்தது. தேர்தலில் அமிர்தலிங்கம் தோல்வியடைந்தார். எனினும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார். சம்பந்தமூர்த்தி ஏமாற்றப்பட்டார் எனும் குற்றச்சாட்டு இப்போதும் உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்று 5 மாதங்கள் கடந்த நிலையில் அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். அந்த வெற்றிடத்துக்குக் கூட தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்ட எவரும் நியமிக்கப்படவில்லை. மாறாக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த மாவை சேனாதிராஜா நியமிக்கப்பட்டார்.
1994 தேர்தல்:
தேர்தலுக்கு முன் கையளிக்கப்பட்ட பட்டியலில் எவ்வித மாற்றமுமின்றி சட்ட வல்லுநர் நீலன் திருச்செல்வம் நியமனம் பெற்றார். அவர் ஜூலை 1999ல் படுகொலை செய்யப்பட்டதையடுத்து அந்த வெற்றிடத்துக்கு அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த மாவை சேனாதிராஜா மீண்டும் நியமிக்கப்பட்டார். வழமைபோல் பட்டியலிலிருந்தவர்கள் புறக்கணிக்கப்பட இருமுறை தேர்தலில் தோல்வியடைந்த மாவைக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
2000 தேர்தல்:
மறைந்த த.வி.கூ தலைவர் எம்.சிவசிதம்பரம் தேசியப் பட்டியலுக்கு முன்மொழியப்பட்டிருந்தாலும் அந்தத் தேர்தலில் தேசியப் பட்டியல் ஆசனம் உதயசூரியனுக்குக் கிடைக்கவில்லை.
2001 தேர்தல்:
இந்தத் தேர்தலில் மூத்த தலைவர் சிவசிதம்பரத்துக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அவர் ஆறு மாதங்களுக்குக் குறைவாகவே பதவி வகித்தார். 2002 ஜூன் மாதம் மரணமடைந்த நிலையில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த கே.துரைரட்ணசிங்கம் விடுதலைப் புலிகளின் பின்புலத்தில் நாடாளுமன்றம் சென்றார்.
யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய முத்துலிங்கத்திற்கு ஓரிரு மாதங்களாவது கௌரவத்தின் நிமித்தம் இந்த ஆசனம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென்று த.வி.கூ தலைவர் வீ.ஆனந்தசங்கரி உறுதியான நிலைப்பாட்டை எடுத்தாலும் அது சாத்தியமாகவில்லை. இச்சம்பவம் த.வி.கூட்டணிக்குள் உட்பூசலை ஏற்படுத்தி அவருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கசப்புணர்வு ஏற்பட ஒரு காரணமாக அமைந்தது.
2004 தேர்தல்:
இத்தேர்தலில் உதயசூரியன் மறைய 34 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு மீளக் கட்டியெழுப்பப்படுகிறது
இதுவரை த.வி.கூட்டணியாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி உட்பட நான்கு கட்சிகள் த.தே. கூட்டமைப்பாக வீடு சின்னத்துக்கு மாறியது.
கூட்டமைப்புக்கு இரு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்தன. ஏற்கனவே பெயரிடப்பட்டிருந்த ஈழவேந்தன் எனப்படும் எம்.கே.கனகேந்திரன் அதில் ஒருவராக நியமனம் பெற்றார். மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்விகண்ட ஜோசப் பரராஜசிங்கத்துக்கு அடுத்த இடம் வழங்கப்பட்டது.
ஜோசப் பரராஜசிங்கம் அதே ஆண்டு நத்தார் தினத்தன்று கொல்லப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பட்டியலில் இல்லாத சந்திரகாந்தன் சந்திரநேரு லண்டனிலிருந்து வரவழைக்கப்பட்டு நியமிக்கப்பட்டார்.
கனடா சென்றிருந்த ஈழவேந்தன் உரிய முறையில் விடுப்பு பெறாமல் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்குச் செல்லாத நிலையில் பதவி இழந்தார். அந்த இடம் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஆர்.எம். இமாமுக்கு கிடைத்தது. முஸ்லிம் ஒருவர் தமிழ்க் கட்சி ஒன்றால் நியமிக்கப்பட்டது அதுவே முதலும் கடைசியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகப் போட்டியிட்ட முதலாவது தேர்தல் என்பதால் வேட்பாளர்கள் தேர்வு, தேசியப் பட்டியலுக்கு நியமனம் ஆகியவற்றில் விடுதலைப் புலிகளின் கருத்துக்களும் ஆலோசனைகளும் பின்புலமாக அமைந்திருந்தன.
2010 தேர்தல்:
முதலாவது இடத்தில் பெயரிடப்பட்டிருந்த அ.ம.சுமந்திரன் நியமனம் பெற்று நாடாளுமன்றம் சென்றார். தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.சிற்றம்பலம் ஏமாற்றப்பட்டார்.
2015 தேர்தல்:
ஒரு தசாப்த காலத்துக்குப் பின்னர் வீடு சின்னத்துக்கு இரு ஆசனங்கள் கிடைத்தன. பட்டியலில் பெயரிடப்பட்டிருந்த பேராசிரியர் சிற்றம்பலம், தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலர் சேவியர் குலநாயகம் போன்றோருக்கு இம்முறையும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த கே.துரைரட்ணசிங்கத்துக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பளிக்கப்பட்டது. வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றுமொருவராக நியமனம் பெற்றார்.
தேர்தலுக்கு முன் கூட்டமைப்புக்கு இரு ஆசனங்கள் கிடைக்குமானால் தமிழரசுக் கட்சியும் பங்காளிக் கட்சிகளும் அதனைப் பகிர்ந்து கொள்ள கொள்கையளவில் இணக்கப்பாடு காணப்பட்டிருந்தது. யாழ் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு தோல்விகண்ட பங்காளிக் கட்சி ஒன்றின் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு அந்த வாய்ப்பு கிட்டும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் உள் குத்துவெட்டு காரணமாக அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தனிப்பட்ட ரீதியில் அவரை சுரேஷ் பிரேமச்சந்திரன் என்று பார்க்காமல், பங்காளிக் கட்சியின் தலைவர் ஒருவர் என்கிற வகையில் அவருக்கு அந்த ஆசனம் அளிக்கப்பட்டிருந்தால் அது தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவப் பண்பை வெளிப்படுத்தியிருக்கும். அந்தப் பெருந்தன்மையைக் காட்டத் தவறியதால் தான் சுரேஷ் வீட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.
இரண்டு வருடங்கள் கழிந்த பிறகு தேசியப் பட்டியலில் மாற்றம் தேவையென மற்றுமொரு பங்காளிக் கட்சியான டெலோ தமிழரசுக் கட்சித் தலைமையிடம் அழுத்தம் கொடுத்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்விகண்ட கோ.கருணாகரம் நியமிக்கப்பட வேண்டும் எனும் டெலோவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.
2020 தேர்தல்:
த.தே. கூட்டமைப்பு 12 பேர் கொண்ட பட்டியலைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. சட்டத்தரணிகள் அம்பிகா சற்குருநாதன், கே.வி.தவராசா, முன்னாள் மாகாண அமைச்சர் கே.குருகுலராஜா, தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலர் சேவியர் குலநாயகம், இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் எனப் பட்டியல் தொடருகிறது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் குலநாயகம், ஹென்ரி மகேந்திரன், அன்னம்மா சௌந்திரராசா, த.மகாசிவம் உட்பட பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்தல்களில் விளையாட்டில் ரிசர்வ் பிளேயர்கள் போல் பெயரளவில் மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டு ஒரு போட்டியில் கூட ஆடுவதற்கு வாய்ப்பளிக்காதது போன்று உள்ளனர்.
சேவியர் குலநாயகம் பேராசிரியர் சிற்றம்பலம் போன்று தேசியப் பட்டியலில் தானும் தொடர்ந்து ஏமாற்றப்படுவதாக தமது அதிருப்தியை வெளிப்படுத்தி கட்சித் தலைமைக்கு அவ்வப்போது எழுத்து மூலம் தெரியப்படுத்தினார். கட்சித் தலைமையின் மௌனமே அவருக்குக் கிடைத்த பதில். பேராசிரியர் சிற்றம்பலம் தற்போது கட்சி அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்.
இம்முறை டெலோ சார்பில் வழமையாக இடம்பெறும் ஹென்ரி மகேந்திரனின் பெயரைத் தவிர ஏனையப் பெயர்கள் அனைத்தும் தமிழரசுக் கட்சியினர். ஏமாற்றப்படுவது உறுதி என்று தெரிவதால் பங்காளிக் கட்சிகள் இம்முறை இதில் ஆர்வம் காட்டுவதில்லை.
யாழ் மாவட்டத்தில் சட்டத்தரணி அம்பிகா சற்குருநாதனை வேட்பாளராகக் களமிறக்க சுமந்திரன் விரும்பினார்.
தேர்தலுக்காக மனித உரிமைகள் ஆணைக் குழுவின் உறுப்பினர் பதவியைத் துறந்து அம்பிகா யாழ்ப்பாணம் திரும்பினார். ஆனால் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு மற்றும் அதிருப்தி காரணமாக அவருக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆனாலும் அவரை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் கொண்டு செல்ல வேண்டுமென்று சுமந்திரன் ஒற்றைக் காலில் நிற்கிறார்.
சுமந்திரனின் அழுத்தம் காரணமாக அம்பிகாவின் பெயர் தேசியப் பட்டியலில் முதலிடத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
அதேவேளை மாவை சேனாதிராஜா சட்டத்தரணி கே.வி. தவராசாவை தீவிரமாக ஆதரிக்கிறார். கொழும்பில் நிலவும் சட்டத்தரணிப் போட்டி யாழ்ப்பாணத்திலும் எதிரொலிக்கிறது.
கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தர் ஏற்கனவே தேசியப் பட்டியலில் இடம்பெறவிருந்தார். திருகோணமலை மாவட்டத்தில் தலைமை வேட்பாளராக எஸ்.குகதாசன் போட்டியிடவிருந்தார். எனினும் திருகோணமலையில் தமிழர் பிரதிநிதித்துவம் வெல்லப்பட வேண்டுமாயின் சம்பந்தர் போட்டியிட்டால் மட்டுமே சாத்தியம் என்று உட்கட்சியில் கூறப்பட அவர் இப்போது களத்திலுள்ளார். ஆனால் தான் வெற்றி பெற்றால் தேசியப் பட்டியல் நியமனம் குகதாசனுக்கு வழங்கப்பட வேண்டுமெனும் நிபந்தனையின் பெயரிலேயே அவர் இப்போது போட்டியிடுகிறார்.
இப்போது களநிலையைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாகத் தேசியப் பட்டியலில் ஒரு ஆசனமே கிடைக்கும் வாய்ப்புள்ளதால் முக்கோண காதல் போட்டியில் ஈடுபட்டுள்ள சம்பந்தர், மாவை, சுமந்திரன் (SMS) ஆகியோரில் யார் கையோங்கும் என்பது தேர்தலின் பின் தெரியவரும்.
இருந்தாலும் தேர்தலில் “மின்னாமல் முழங்காமல் இடித்த இடி“ போல் தேர்தலில் விருப்பு வாக்கு முடிவு அமையுமானால் பட்டியல் தலைகீழாக மாறக் கூடும். அம்பிகா, தவராசா அல்லது குகதாசன் ஆகிய மூவரில் ஒருவர் தேசியப் பட்டியல் நியமனம் பெறலாம் என்று கருதப்பட்டாலும், `வழமையான தில்லாலங்கடி` வேலையாகத் தேர்தலில் தோல்வியடைந்த வேறொருவருக்கு அந்த இடம் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தேர்தலில் தோல்வி கண்டவர்களுக்கு இம்முறை தேசியப் பட்டியலில், இடமளிக்கக் கூடாது என்று முக்கூட்டுக் கட்சிகளிடையே கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் எழுத்துமூலம் உடன்பாடு எதுவும் இல்லாத நிலையில் இந்த இணக்கப்பாடு நிலைத்திருக்குமா அல்லது ‘வேதாளம் முறுங்கை மரம் ஏறிய’ கதையாகுமா?
எனவே தேசியப் பட்டியல் என்பது ஏமாற்றமும் எதிர்பாரா திருப்பங்களையும் கொண்டது என்பது மீண்டும் நிரூபிக்கப்படும். மேலும் தேர்தல் முடிவும் தேசியப் பட்டியல் நியமனமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைவிடத் தமிழரசுக் கட்சிக்குள் குழப்பத்தையும் உட்பூசலையும் மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.