ஜனாதிபதிக்கு எதிராக காலி முகத்திடலில் சுமார் இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் வடக்கில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை உள்ளடக்குவதாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற தென்னிலங்கை தலைவர்கள் குழு உறுதியளித்துள்ளது.
கொழும்பில் இருந்து தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் தலைவர்களும் வடக்கில் உள்ள தொழிற்சங்க தலைவர்களும் மே 29 ஞாயிற்றுக்கிழமை யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்க அலுவலகத்தில் சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடினர்.
யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கை வங்கி ஊழியர் சங்கம், சம உரிமைகள் இயக்கம், பொது நிர்வாக அதிகாரிகள் சங்கம், மீன்பிடி கூட்டுறவு இயக்கம், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அலுவலர்கள் சங்கம்,
மின்சார அதிகாரசபை அதிகாரிகள் சங்கம் உட்பட சுமார் 20 தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இதில் கலந்துகொண்டதாக யாழ்ப்பாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீடு திரும்புமாறு கோரி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு வடக்கு மக்களின் ஆதரவின்மைக்கான காரணங்கள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
பல தசாப்தங்களாக தம்மைப் பீடித்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் காலிமுகத்திடல் போராட்டத்தில் போதியளவு குரல் கொடுக்காமையே இதற்குக் காரணம் என வடக்கின் பிரதிநிதிகள் கொழும்பில் இருந்து வந்த பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குதல், பாதுகாப்புப் படையினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை விடுவித்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயம் மற்றும் வடக்கின் இராணுவமயமாக்கல் போன்ற விடயங்களை வலியுறுத்தி காலி முகத்திடலில் குரல் எழுப்பப்பட வேண்டும் என வடக்கின் தொழிற்சங்க தலைவர்கள் தெற்கில் உள்ள தொழிற்சங்க தலைவர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வடக்கில் தொழிற்சங்கத் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் தெற்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி, காலி முகத்திடலில் நடைபெறும் போராட்டத்தில் அந்தக் கோரிக்கைகளை இணைக்க நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண தொழிற்சங்கத் தலைவர்களுக்கு தானும் தனது குழுவினரும் உறுதியளித்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பு ஊடகமொன்றுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.
தேசியப் பிரச்சினை மற்றும் சுயநிர்ணய உரிமை தொடர்பில் தெற்கில் உரையாடல்களை விரிவுபடுத்த வேண்டுமென வடக்கின் தொழிற்சங்கத் தலைவர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.