யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்.
சரித்திரகாலம் தொட்டே இந்திய இலங்கை கடற்பரப்பில் பாக்(கு) நீரிணை வழியாக கடத்தல் என்பது சர்வசாதாரணமாக இருந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பொருட்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று அப்போதிருந்த சென்னை மாகாண ஆளுநர், இந்தியாவின் பிரிட்டிஷ் அரசின் கவர்னர் ஜெனரலுக்கு கடிதம் எழுதிய வரலாறெல்லாம் உண்டு. இதற்கான ஆவணங்களை லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் காணலாம். இரு நாடுகளுக்கும் இடையேயான தூரம் மிகவும் குறைவு, நாட்டுப் படகுகளின் போக்குவரத்து அதிகம், மீனவர்கள் அன்றாடம் கடலுக்குச் செல்கிறார்கள், இரு நாட்டு மீனவர்களும் கடத்தலுக்கு முகவர்களாக இருந்து நடுக்கடலில் பண்டமாற்று செய்கின்றனர் என்றெல்லாம் அந்த ஆவணத்தில் விவரமாகக் கூறப்பட்டுள்ளது.
அந்த ஆவணங்களின்படி இந்தியாவிலிருந்து நறுமணப் பொருட்கள், மிளகு, மஞ்சள், நூல், துணி வகைகள், முத்து போன்றவையும், இலங்கையிலிருந்து மரகதம் மற்றும் மாணிக்க கற்கள், சினமன் எனப்படும் கருவாப்பட்டை போன்றவையும் பெருமளவில் கடத்தப்பட்டதை அறிய முடிகிறது. பின்னர் காலத்திற்கேற்ற வகையில் தங்கம், போதைப் பொருட்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள், இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது மருந்துகள், டீசல், வாகனங்கள் மற்றும் வாகனங்களின் உதிரிப் பாகங்கள் போன்றவை கடத்தப்பட்டன. அண்மைக்காலமாக இந்தியாவின் மேற்கே அரபிக் கடல் பகுதியில் தொடங்கி இந்து மகா சமுத்திரத்தின் தென் முனை வரை சர்வதேச அளவில் போதைப் பொருட்கள் கடத்தலுக்கான முக்கியப் பாதையாக இருக்கிறது என்று ஐ நாவின் போதை தடுப்பு அலுவலகமும் சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போலும் கவலையும் எச்சரிக்கையும் விடுத்துள்ளன. இதில் முக்கியமாக ஆட்கடத்தல் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல் குறித்த கவலைகளே அதிகமாகவுள்ளன.
ஆனால் இந்த வாரத்தில் கடத்தலில் பிடிபட்ட பொருட்கள் சற்று துணுக்குறச் செய்து பல கேள்விகளை எழுப்புகிறது. இலங்கையில் நெருக்கடிகள் அதிகரித்து வரும் வேளையில், இலங்கையில் இருந்து இந்தியா வழியாக ஆட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிற சூழலில் மறுமார்க்கமாக இந்த கிழமை இலங்கை கடற்படையின் கண்களின் பட்டு பறிமுதல் செய்யப்பட்டவை ஆடுகளும் கோழிகளும். இந்த ஆடுகளும், கோழிகளும் எல்லை தாண்டும் தீவிரவாதிகளாகவே பார்க்கப்படுகின்றன.
இலங்கை அரசின் திட்டமிடப்படாத பொருளாதார கொள்கையின் காரணமாக நாடே அழிவுப் பாதையில் செல்வதனால் வாழ்வியலிற்காக கடல்கடந்து தப்பிச் செல்லும் நிலைமையில் மக்களின் மனநிலை காணப்படுகின்றது. இதற்காக பண வசதி ஏற்படுத்த முடிந்தோர் பெரிய நாடுகளிற்கும் முடியாதவர்கள் தமிழ் நாட்டிற்கும் தப்பிச் செல்கின்றனர். அதாவது தமது வசதிக்கேற்ற வாழ்வைத் தேடுகின்றனர்.
இதற்காக மக்கள் தமிழ் நாடு நோக்கிப் படையெடுக்கும் சூழலில் எஞ்சியிருப்போரின் வாழ்வாதார மேம்பாடு என்பதற்காக தற்போது ஆடு, மாடு, கோழிகளும் தமிழ் நாட்டில் இருந்து சட்ட விரோதமாக எடுத்து வரப்படுகின்றன. ஏற்கனவே மஞ்சள், பசளை, கிருமிநாசினிகள் என எடுத்து வரப்பட்டன. போர்க் காலத்தில் எரிபொருட்களும் எடுத்து வரப்பட்டன.தற்போது விலங்குகள், பறவைகளும் எடுத்து வரப்படுகின்றது.
கடந்த ஆண்டில் எறும்புத்திண்ணி முதல் பந்தயப் புறா வரைக்கும் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கும் கடத்தப்பட்டன. தற்போது வாழ்வியலிற்கான வாழ்வாதார மேம்பாடு கருதிய பொருட்கள் என்ற பட்டியல் பொருட்கள் கடத்தப்பட்டு தினமும் மன்னாரில் கடற்படையினரிடம் சிக்குகின்றன. அவற்றில் கடற்படையினர் தமது தேவைக்காக எடுத்துக்கொண்டது போக மற்றவை பிடிபட்டதாகக் காட்டப்பட்டு நீதிமன்றங்களுக்குச் செல்கின்றன.
சட்டத்திற்கு அப்பால் வயிற்றுப் பசிக்காகவும் வாழ்வாதார மேம்பாடு, அரிய வகை இனம் என்ற ரீதியில் ஆடுகள், கோழிகள் கடத்தப்பட்டாலும் இவற்றின் மூலம் பாரிய ஆபத்து இருப்பதாக தொழில்சார் வல்லுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்ப பீட உயிர் முறைமைகள் தொழில் நுட்பத் துறையின் துறைத் தலைவரான கார்த்திகேசு ஜெயவாணன் உதயனிடம்கருத்து தெரிவிக்கையில், ”1987 ஆம் ஆண்டு ஈழத்தில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்தபோது அதிலிருந்த சுமார் ஒரு லட்சம் படைகளின் உணவிற்காக இந்தியாவில் இருந்து பெருந்தொகை ஆடுகள் கப்பல்கள் மூலம் ஏற்றி வரப்பட்டன. அவ்வாறு ஏற்றி வரப்பட்ட ஆடுகளின் தாக்கம் 35 ஆண்டுகள் கடந்து இன்றும் போக்க முடியவில்லை. அதாவது விஷச்செடியான பாதீனியம் இந்திய ஆடுகளின் மூலமே எமது பகுதியில் பரவியது” என்றார்.
இதேநேரம் அந்த ஆடுகளினால் தமது மக்களின்வாழ்வாதாரமும் அழிக்கப்பட்டது என்றும் ஜெயவாணன் கூறுகிறார். ”அதாவது 1987ஆம் ஆண்டுவரை இலங்கையின் விலங்குகளில் இல்லாத கோமாரி என்னும் நோய் வடக்கு கிழக்கில் உள்ள கால்நடைகளிற்குப் பரவி 45 ஆயிரம் வரையிலான ஆடுகளும் இறக்கக் காரணமாக இருந்தன. எனவே இவற்றையும் ஞாபகம் வைத்து எவ்வாறான அரிய வகை விலங்குகள் எடுத்து வரப்பட்டாலும் ஒரு மாத காலம் எமது நாட்டு விலங்குகள் அருகில் வராமல் தனிமைப்படுத்தி விலங்கு வைத்திய நிபுணர்களின் ஆலோசனையின் பின்பே கிரமங்களில் நடமாட விட வேண்டும். ஏனெனில் சட்டபூர்வமாக கொண்டு வந்தால் அவை விலங்கு தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு உட்பட்டு சோதனையின் பின்பே உள்ளே அனுமதிக்கப்படுவது வழமையாகும்” என்று தெரிவித்தார்.
அனைத்தையும் ஒப்பு நோக்குகின்றபோது சட்டத்திற்கும் அப்பால் உரிய முறைமையில் கொண்டு வரும் விலங்குகள், பறவைகள்தான் பாதுகாப்பானது ஏனையவையில் அதாவது இவ்வாறு திருட்டுத்தனமாகக் கொண்டு வரப்படுபவற்றில் ஆபத்துக்களே அதிகம் என்றும் அவர் மேலும் கருத்து வெளியிட்டார்.
இலங்கையில் நிலவும் கொடிய பொருளாதார நெருக்கடி நிலைமையின் காரணமாகப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காகவும் இலங்கையில் தட்டுப்பாடான பொருட்கள் என்னும் பெயரில் தமிழ்நாட்டில் இருந்து எடுத்துவரப்படும் பொருட்களிலும் ஆபத்து சூழ்ந்திருப்பதாகவே துறை சார் வல்லுநர்கள் சுட்டுக் காட்டுகின்றனர்
இதேநேரம் இவ்வாறான உயிரினங்கள், பொருட்கள் அகப்படுகின்றபோதும் நூற்றுக் கணக்கான கிலோ கஞ்சா மட்டும் எவ்வாறு உள்ளே எடுத்து வரப்பட்டு இளம் சந்ததிகள் சீரழிக்கப்படுகின்றனர் என்பதற்கு எவரிடமும் பதில் கிடையாது.
இலங்கையின் பொருளாதார நிலவரம் தொடர்பாகப் பிரதமரே கட்டியம் கூறிவிட்ட காரணத்தால் உண்மையில் இவ்வாறான கடத்தல்கள் மேலும் அதிகரிக்கவே செய்யுமே அன்றி குறைவடையாதபோதிலும் கடற்படையினரின் கண்காணிப்பினால் ஓரளவு குறைக்க முடியும் என ஆட்சியாளர்கள் நம்புகின்றனர்.
இதேநேரம் ஆடுகளை ஏற்றிவந்தனர் என மன்னாரில் ஓர் படகோட்டியும் இவற்றைக் கடத்தினர் என்ற பெயரில் ராமேஸ்வரத்தில் ஒருவரும் இனம் காணப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கடத்தல் விஷயங்கள் இவ்வாறு இருக்க, எடுத்து வரப்பட்ட ஆடுகளும் கோழிகளும் பாரம்பரிய சண்டைக்களிற்கு பயன்படுத்தும் இனங்களாகவே காணப்படுவதோடு எடுத்து வரப்பட்ட ஆடுகள் சுமார் 3 லட்சம் ரூபாவும் கோழிகள் 20 ஆயிரம் ரூபாவும் உள்ளூர் சந்தை நிலவரமாகக் காணப்படுவதாக இந்த துறையில் நாட்டமுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் மன்னரில் பிடிபட்ட ஆடிகளின் உடல்நிலை, நோய் நிலை தொடர்பில் ஆராய்ந்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்னார் நீதிமன்ற கட்டளையிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பன்னாட்டுச் சட்டங்களின்படி இரு நாடுகளுக்கு இடையே உயிர் பொருட்கள் கடத்தப்படுவது குற்றமாகும். இதில் செடி கொடிகள், கால்நடை, அரிய விலங்குகள், இரசாயன உயிரிகள் போன்றவை அடங்கும். இவை கடத்தப்படுவது முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தாலும், ஏதாவது காரணங்களுக்காக ஒரு நாட்டிற்குள் எடுத்துவர வேண்டுமென்றால், உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, பரிசோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படும்.
உதாரணமாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு விமானத்தினுள் வழங்கப்படும் உணவான ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றைக் கூட எடுத்துச் செல்ல முடியாது. அரை டொலர் மதிப்பில்லாத ஆப்பிள் பழத்தை எடுத்துச் சென்றவர்களுக்கு ஆஸ்திரேலிய சுங்கத்துறையினர் விமான நிலையத்தில் நூறு டொலர்கள் வரை அபராதம் விதித்ததும், வீட்டுத்தயாரிப்பு என்று கூறி எடுத்துவரப்பட்ட கருவாட்டில் சில கிருமிகள் இருந்தன என்று கூறி அதை எடுத்துவந்த வியட்நாம் பெண்ணொருவருக்கு ஆஸ்திரேலியாவில் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டத்தையெல்லாம். ஆனால் கடவுச் சீட்டோ அல்லது உரிய விசாவோ இன்றி படகில் எல்லை தாண்டி இலங்கையினுள் நுழைந்துள்ள இந்த ஆடு மற்றும் கோழிகளை என்ன செய்வது என்பதே இப்போதுள்ள பெரிய கேள்வி!