ஆயர் தலைமையில் பல்வேறு தீர்மானங்கள் முன்வைப்பு.
(மன்னார் நிருபர்)
(10-06-2022)
எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி நடைபெறவுள்ள மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திரு விழாவிற்கான முன் ஆயத்த கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (10) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலின் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் ,பிரதேச செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள்,பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கடந்த இரண்டு வருடங்கள் கொரோனா தொற்று காரணமாக அதிகமான மக்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தரவில்லை.
இம்முறை ஆடி திருவிழாவிற்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர் பார்க்கப் பட்டுள்ள நிலையில் முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
-குறிப்பாக சுகாதாரம்,போக்குவரத்து,குடிநீர்,மின்சாரம்,பாதுகாப்பு தொடர்பாக உரிய தரப்புடன் கலந்துரையாடப்பட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இம்முறை மடுத்திருத்தல பகுதிகளில் அதிக எண்ணிக்கையான உணவகங்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நியாயமான விலையிலும்,சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக உணவு பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
,சுகாதார துறையினர் மற்றும் நுகர்வோர் அதிகார சபையினர் முழுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
-பிரதேச சபையின் அறிக்கையின் படி இம்முறை வியாபார நிலையங்களுக்கு வரி அறவிடப்படாது விட்டாலும்,ஆவணி திருவிழாவிற்கு அமைக்கப்படும் கடைகளுக்கு வரி அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு உணவகம் மற்றும் ஏனைய வியாபார நிலையங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
-மேலும் சோதனை கெடுபிடிகளை குறைத்துக்கொள்ள மன்னார் மாவட்டத்தில் இருந்து மடு திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள் தமது பயண பொதிகளை கொண்டு வருவதை தவிர்த்துக்கொள்ள கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
-எதிர் வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆடி மாதம் 2ஆம் திகதி திருவிழா நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.