17-06-2022
கிராமிய ரீதியாக உள்ள மீன்பிடி சங்கங்களை மீள் அமைப்பதன் ஊடாக நாட்டின் பொருளாதார மேம்பாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் முகமாகவும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராயும் முகமாகவும் மன்னார் மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகளுடன் விசேட சந்திப்பு மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(17) காலை 10 மணியளவில் மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர்,மாவட்ட மீனவ சம்மேள பிரதிநிதிகள் மற்றும் கிராம ரீதியான மீனவ சங்க பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இவ் சந்திப்பில் மன்னார் மீனவர்கள் பெரும்பாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் எரிபொருள் பிரச்சனை தொடர்பாகவும் மீனவர்களுக்கும் மீனவர் சங்கங்களுக்கும் விசேட அடிப்படையில் மண்ணென்னை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதே நேரம் கச்சதீவை இந்தியாவிற்கு வழங்க கூடாது எனவும் இந்திய மீனவர்களின் வருகை அண்மைய நாட்களாக அதிகரித்துள்ளதாகவும் அதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.
குறித்த மீனவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரைவில் காத்திரமான முடிவுகளை பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை மேற் கொள்வதாகவும் அதே நேரம் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் விரைவில் இந்தியாவில் இருந்து கப்பல் சேவை ஊடாக யாழ் காங்கேசன்துறை ஊடாக அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதே நேரம் குறித்த விசேட சந்திப்பில் மீனவ காப்புறுதி திட்ட பயனாளர்களுக்கு காப்புறுதி பணத்தினையும் அமைச்சர் கை அளித்ததுடன் ஆழ்கடல் மீன்பிடி தொடர்பான விசேட பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதல் களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது