மன்னார் நிருபர்
22-06-2022
இளைஞர் யுவதிகளுக்கு இடையே சமூக ஒத்திசைவை பலப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் ரஹமா நிறுவனத்தின் அனுசரணையில் வாழ்வுக்கான தன்னார்வ தொண்டர் அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட விசேட விளையாட்டு விழா, முசலி விளையாட்டு அதிகாரி ஜெரமி ஜேசுராஜா அவர்களின் நெறிப்படுத்தலில், ஓய்வு பெற்ற ஆசிரியர் றெஜினா ராமலிங்கம் தலைமையில் நேற்று (21) மன்னார் விளையாட்டரங்கில் இடம் பெற்றது.
விளையாட்டின் ஊடாக இன,மத,மொழி ரீதியான நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் முகமாகவும் இன்றைய சிக்கலான காலகட்டத்தில் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு அதிலிருந்து விடுபட மாற்றீடாக வும், மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளை உள்ளடக்கி விளையாட்டு நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் உதவி பிரதேச செயலாளர் திருமதி.கனகாம்பிகை சிவசம்பு ,சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.சுகந்தி செபஸ்டியன் , விசேட விருந்தினராக மாவட்ட விளையாட்டு அதிகாரி பிரின்ஸ் லம்பேர்ட் , மத தலைவர்களும் , ரகமா நிறுவன அதிகாரிகள், வாழ்வுக்கான தன்னார்வ தொண்டர்கள், லியோ இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் கிராம ரீதியிலான இளைஞர்கழக அங்கத்தவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
வலைப்பந்து, சினேகபூர்வ கிரிக்கெட், 100 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் றிலே , கயிறு இழுத்தல், பலூன் விளையாட்டு உட்பட தெரிவு செய்யப்பட்ட பல போட்டிகளில் இளைஞர் யுவதிகள் இன,மத,மொழி பிரிவினை இன்றி ஆர்வத்தோடு பங்குபற்றியிருந்தனர்.
குறித்த விளையாட்டு நிகழ்வில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கிண்ணங்கள் விருத்தினர்களால் வழங்கப்பட்டதுடன் ரஹாமா நிறுவனத்தினால் குறித்த விளையாட்டு நிகழ்வின் போது மன்னார் பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக சத்திரசிகிச்சை , என்பு முறிவு சிகிச்சைகளுக்கு பாவிக்கப்படும் ஒரு தொகுதி பஞ்சுகள் மாவட்டப் பொது வைத்தியசாலை மன்னாருக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது