மன்னார் நிருபர்
(22-06-2022)
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் ஒன்று இன்று புதன்கிழமை (22) காலை சிக்கியது.
மத்திய கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் சூரிய மீனை ஆய்வு செய்தனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை, டால்பின், அணில் மீன், புள்ளி திருக்கை, சூரிய மீன் போன்ற அரிய வகை உயிரினங்கள் உள்ளன. அரிய வகை மீனான சூரிய மீன் பெரும்பாலும் மீனவர்கள் வலையில் சிக்குவது இல்லை.
இந்நிலையில் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவர்கள் வலையில் சூரிய மீன் சிக்கியது.
இந்த சூரிய மீன் சிறிய வாய், துடுப்பு போன்ற உடலமைப்பு வால்பகுதி இல்லாமல் காணப்படும்.
பாம்பன் துறைமுகத்திற்கு வந்த இந்த அரிய வகை சூரிய மீனை மண்டபம் மத்திய கடல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து மீனின் நீளம் அகலம், எடை உள்ளிட்டவைகளை குறித்து கொண்டனர்.
இந்த மீன் அரிய வகை சூரிய மீன் ஆகும். இது அதிகபட்சமாக 4 அரை அடி நீளமும், 2 ஆயிரத்து 300 கிலோ எடை வரையிலும் வளரும் தன்மை உடையது.
இந்த வகை மீன்கள் இறால், நண்டு, சிப்பிகள், ஆமைகள், ஜெல்லி மீன்கள் ஆகியவற்றை உட்கொள்ளும். இதன் வால் துடுப்பு பகுதி மட்டும் உருமாறிக் காணப்படும்.
இந்த வகை மீன்கள் கனடா, கொலம்பியா, கிழக்கு பசிபிக் கடல், தென் ஆப்பிரிக்கா, அர்ஜென்டினா, சிலி, பெரு ஆகிய நாடுகளின் கடல் பகுதியில் அதிகமாக காணப்படும். புhதம்பன் கடல் பகுதியில் காணப்படுவது மிகவும் அரிதாகும்.
200 மீட்டர் முதல் 600 மீட்டர் ஆழத்தில் வாழக்கூடிய இந்த வகை மீன்கள் நாளைக்கு 26 கிலோ மீட்டர் தூரம் நீந்தக் கூடியவை.
ஒரு மணி நேரத்தில் 3.2 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தும். இந்த மீன்கள் ஒரு நேரத்தில் 30 கோடி முட்டைகள் இடும். பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய சூரிய மீன் 55 கிலோ எடை கொண்டது, நான்கு ஆண்டுகளுக்கு பின் பாம்பன் மீனவர்கள் வலையில் சூரிய மீன் சிக்கியுள்ளதாக மத்திய கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பாம்பன் விசைப்படகு மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீனை பொதுமக்கள் மற்றும் மீன் வியாபாரிகள் ஆர்வத்துடன் பார்த்தனர்