யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்.
இலங்கைக்குக் கேட்ட போதும், கேட்காமல் இருந்த போதும் பல்லாயிரக் கணக்கான டொலர்களை தொடர்ச்சியாக வழங்கி உற்ற நண்பனாக இருந்த ஜப்பான், நாட்டில் தற்போது நிலவும் சூழலில் தங்களால் உடனடியாக உதவி செய்ய முடியாது என்று கைவிரித்துவிட்டது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீள்வதற்கு வழி தெரியாமல் நடுச்சந்தியில் நிற்கும் இலங்கைக்கு இதுவொரு மிகப்பெரிய அடியாகும். நாளுக்கு நாள் அரசிற்கு எதிரான போராட்டங்களும் அதிருப்தியும் வலுத்துவரும் நிலையில், கோத்தா-ரணில் கூட்டணி பிச்சைப் பாத்திரத்துடன் உலகெங்கும் உதவி கேட்டு அலைகின்றனர். இதுவரை இந்தியா மட்டுமே பெருமளவிலான உதவியைச் செய்து வருகிறது. அமெரிக்கா கணிசமான உதவியை அறிவித்துள்ளது. அதேநேரம் இஸ்லாமிய நாடுகள் எவையும் இதுவரை உதவி குறித்து வாய் திறக்கவில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய விடயம்.
சீனா இலங்கை மாணவர்களுக்கென்று ஒரு தொகுதி அரசி அனுப்புவதாக கூறியுள்ளது. அதுவும் எப்போது வரும் என்பது தெரியாது, வந்தாலும் எப்படிப் பகிர்ந்தளிக்கப்படும் என்பது கேள்விக்குறியே. எரிபொருள் தட்டுப்படு குறித்து இதுவரை சீனா மற்றும் அரபு நாடுகளிடமிருந்து எவ்விதமான உத்தரவாதங்களும் வரவில்லை.
இதேவேளை கத்தார் நாட்டி நிதியமைப்பு ஒன்றிற்கு இலங்கை விதித்திருந்த தடை நீக்கிக்கொள்ளப்படும் என்று அங்கு சென்றுள்ள இலங்கைக் குழு தெரிவித்துள்ளது. கத்தார், சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் போன்ற பல மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலை செய்யும் பணிப் பெண்களாக ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் சென்றுள்ளனர். அந்நாட்டின் சமூக வளர்ச்சியில் இவர்கள் கணிசமான பங்காற்றியிருந்தாலும், எந்த இஸ்லாமிய நாடும் இதுவரை இலங்கைக்கு நெருக்கடியான காலகட்டத்தில் உதவ போதியளவில் முன்வரவில்லை என்பது கசப்பான உண்மை.
எனினும் போர் மற்றும் சமாதான காலம் இரண்டிலும் நம்பக் கூடிய ஒரு நாடாக இருந்த ஜப்பான் தற்போது உடனடியாக உதவிகளைச் செய்ய முடியாது என்று கூறியுள்ளது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முயல்வதாக அரசு கூறும் நடவடிக்கைகளுக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பது மிகவும் யதார்த்தமானது. இந்த வாரம் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்த பிறகு இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேக்கி இதை தெளிவாகக் கூறிவிட்டார்.
”இலங்கைக்கு அளிக்கப்படும் எந்த நிதியுதவியும் மோசமாக நிர்வகிக்கப்பட கூடும் என்கிற அபாயம் இருப்பதால், இப்போது எம்மால் எந்த நிதியுதவியும் அளிக்க முடியாது, எனினும் அது பின்னால் பரிசீலிக்கப்படலாம்”.
மிகவும் நேசமாக இருந்து எவ்வித பிரதியுபகாரமும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து இலங்கைக்கு உதவி செய்துவந்த ஜப்பானின் இந்த நிலைப்பாடு ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதற்கு அப்பால் நம்பகத்தன்மை மீதான கேள்விக்குறியும் எழுந்துள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் வடக்கு கிழக்கிற்கு 5 ஆயிரம் துவிச்சக்கர வண்டிகளையேனும் தாருங்கள் என ஜப்பானிடம் கோரிக்கை விடுக்கும் நிலைமையில் உதவவே முடியாது என்கின்றார் தூதுவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அப்படியே ஜப்பான் தனது முடிவை மறுபரிசீலனை செய்து அதை வழங்க முன்வந்தாலும் பெட்ரோல், டீசல் கிடைக்குமா என்பது யாருக்கும் தெரியாது.
இந்த வாரம் இரண்டு நாட்கள் பயணமாக ஜப்பானியத் தூதுவர் யாழ்ப்பாணம் வந்தார். இவர் பல தரப்பட்டோரையும் சந்தித்ததோடு ஊடகப் பிரதானிகளையும் சந்தித்தார். இச்சந்திப்புகளில்இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளினால் தமிழர்களின் தீர்வு என்பது மறக்கப்படுகின்றது. ஆனால் தமிழர்களின் தீர்வில் ஜப்பானிற்கும் பெரும் பங்கு உண்டு ஏனெனில் போர்க் காலத்தில் அபிவிருத்திகளிற்கு ஜப்பான் உதவியதனால் அரசு போரிற்கு நிதியைச் செலவு செய்தமையே வரலாறு.
இந்தியா, சீனா, அமெரிக்காதான் போரிற்கு உதவியது ஜப்பான் உதவவில்லை எனக் கூறமுடியாது. இதேநேரம் சமாதான காலத்திலும் யசுசி அகாசிபோன்ற பிரதிநிதியை நியமித்துச் செயல்பட்ட ஜப்பான் அதன் பின்பு பேசாமல் இருக்க முடியாது எனவும் அவர் சுட்டிக் காட்டினர்.
இதன்போது ஜப்பானியத் தூதுவர் ” நான் புதியவர் பழைய விடயம் எனக்குத் தெரியாது” எனக் கூறித் தப்ப முயன்றபோது இது பழைய விடயமானாலும் உலகமறிந்த உண்மை அதனால் நீங்கள் மறுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டதோடு உடனடியாக வடக்கு கிழக்கிற்கு தலா 5 ஆயிரம் துவிச்சக்கர வண்டிகளை தாருங்கள் என்ற சமயம் துவிச்சக்கர வண்டி தொடர்பில் கவனம் செலுத்துவதாகப் பதிலளித்துள்ளார்.
இதேநேரம் ஜப்பானியத் தூதுவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்தார் இச்சந்திப்பில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அதுபற்றி கனடா உதயனிடம் பகிர்ந்து கொண்டார்.
”இலங்கையின் தற்போதைய நெருக்கடிக் காலத்தில் ஜப்பான் உச்சபட்சமாக உதவ வேண்டிய தேவை உள்ளதனால் இதனை மேற்கொள்ள வேண்டும் எனபதே எமது பிரதான கோரிக்கையாக இருந்தபோதும்,ஜப்பான் தற்போதும் ஒரளவு உதவி புரிவதாகவும் பெரிய அளவிலான உதவிகளிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அறிக்கை கிடைத்த பின்பு தீர்மானிப்பதாகப் பதிலளித்தார்” எனக் குறிப்பிட்டார்.
ஜப்பான் கூறியதிலும் ஒரு அர்த்தமுள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறது. இலங்கையின் நிதிநிலை மிகவும் கவலைக்குரியதாக இருப்பதால், பன்னாட்டு அமைப்பு என்ற வகையில் இலங்கைக்கு அது உதவ முன்வந்தாலும், அதில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பியளிக்க முடியவில்லை என்று அண்மையில் இலங்கை கைவிருத்துவிட்டது. அடுத்த தவணை கடனையும் செலுத்த முடியாத சூழலில் தான் இலங்கை உள்ளது என்பது உண்மை. நாட்டிற்கென்று ஒரு பொருளாதார கொள்கை இல்லாதது கடன் கொடுக்கும் நாடுகள் மற்றும் அமைப்புகளைச் சிந்திக்க வைத்துள்ளது.
அது மட்டுமின்றி கடும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கென்று நிதியமைச்சர் என்று யாருமில்லை. தார்மீக நெறிகளிற்கு அப்பாற்பட்டு நாடாளுமன்றத்தில் ஒரேயொரு ஆசனத்தை தேசியப் பட்டியலின் மூலம் பெற்றுக் கொண்டு “ஒரு நபர் கட்சியின் தலைவர்” என்று விமர்சிக்கப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்விடமே நிதியமைச்சர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முழு நேரமாக நிதியமைச்சர் ஒருவர் தேவைப்படும் நேரத்தில் அதைக் கூட மக்களின் எதிர்ப்பை பெற்றுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச செய்யவில்லை என்று பல நாடுகளின் தூதர்கள் மறைமுகமாகத் தெரிவித்துள்ளனர். இதன் பின்புலத்திலேயே ஜப்பானியத் தூதரின் கருத்துக்கள் வந்திருக்கலாம் என்றும் அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
இது ஏனைய நாடுகளிற்கும் ஓர் முன் உதாரணமாக மாற முன்பு இலங்கை அரசு தனது நிலைப்பாட்டைச் சீர் செய்யாதுவிட்டால் இலங்கையின் பொருளாதாரம் மேலும் சீர் கெடும் என்பது மட்டும் திண்ணம்.