கறிற்ராஸ்- வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார்
-மன்னார் நிருபர்-
(07-07-2022)
எமது நாட்டு மக்கள் அனைவரும் நாளுக்குநாள் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் இக்காலத்தில் படிப்படியாக தமது பழைய கால முறைமைகளை மீண்டும் தானாகவே பழக்கப்படுத்தி வருவதை காண்கிறோம்.எனவே சமகால பொருளாதார நெருக்கடியான சூழலில் இருப்பதை கொண்டு வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என மன்னார் கறிற்ராஸ்- வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தெரிவித்தார்.
கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் ஒருங்கிணைந்த முழு மனித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் (IHD-Civic Dialogue Project) இளைஞர் கழகம் சிறுவர் கழகங்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(7) மாலை மன்னார் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மன்னார் கறிற்ராஸ்-வாழ்வுத இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
எமது நாட்டு மக்கள் அனைவரும் நாளுக்குநாள் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் இக்காலத்தில் படிப்படியாக தமது பழைய கால முறைமைகளை மீண்டும் தானாகவே பழக்கப்படுத்தி வருவதை காண்கிறோம்.
குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாட்டினால் இன்று மக்கள் சொல்லணா துன்பத்தை அனுபவிப்பது மட்டுமல்லாமல் உயிர் காக்கும் அவசர தேவைக்கு பல துன்பங்களை அனுபவிக்கின்றார்கள் என்பதை யாவரும் அறிவோம்.
இருப்பினும் நாம் யாரையும் எதிர்பார்க்காமல் நாமே நம்மை பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
எனவே நாம் இருப்பதைக் கொண்டு வாழப் பழகுவோம்.
குறிப்பாக எமது இயற்கை வழத்தினைக்கொண்டும் இணைந்த விவசாய முறைமைகளை பயன்படுத்தியும் குறிப்பாக வீட்டுத் தோட்டங்கள், கால்நடை வளர்ப்பு, துவிச்சக்கர வண்டி பாவனை, எமது வளத்தை கொண்ட இயற்கை பசளை யிலான உணவு உற்பத்திகளை கொண்டு வாழ பழகுவோம்.
இத்திட்டத்தின் ஊடாகவும் கடந்த மூன்று ஆண்டுகளில் மிக முக்கியமாக இவ்வாறான கருத்துக்களை மையமாக வைத்து பெண்கள், வளர்ந்தோர், இளைஞர்கள் சிறுவர்கள் என்கின்ற அடிப்படையில் பயிற்சிகள் கருத்தமர்வு கள், மற்றும் வாழ்வாதார ரீதியாக சுய தொழில் வழிகாட்டல்கள் போன்றவைகள் தரப்பட்டுள்ள தோடு இத்திட்டத்தின் இலக்கு கிராமங்களுக்கும் சுழற்சிமுறை நிதிகளும் தரப்பட்டுள்ளது.
எனவே இக்காலத்தில் இதனை சரியாக பயன்படுத்துங்கள். இத்திட்டத்திற்கு கடந்த மூன்று வருடங்களாக நிதியுதவியை தந்த கறிற்ராஸ்-கொறியாவிற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.என தெரிவித்தார்.
-இதன் போது இலக்கு கிராம மட்ட ரீதியாக சிறுவர்கழகங்கள் ஊடாக நடாத்தப்பட்ட சித்திரப்போட்டியில் பங்குபற்றிய சிறுவர்களை ஊக்குவித்து அவர்கள் அனைவருக்கும் பெறுமதியான சான்றிதழ்களையும் வழங்கி சிறுவர்களின் கல்வி ஊக்குவிப்பிற்காக
சித்திரப்போட்டியில் முதல் மூன்று இடங்களை வெற்றி கொண்டவர்களுக்கான மாணவர்களுக்கு பணப்பரிசில்களையும் ஏனையவர்களிற்கு ஆறுதல் பரிசில்களும் வழங்கி வைத்தார்.
அத்தோடு இத்திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகளையும் சமூக விழிப்புணர்வு குறும் படங்களை தயாரித்த இளைஞர் கழக உறுப்பினர்களுக்கமான பெறுமதியான சான்றிதழ்களும் இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளாரினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.