மஸ்தானுக்கு சொந்தமான எரிபொருள் நிலையங்களில் இரவோடு இரவாக விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்
மன்னார் நிருபர்
08-07-2022
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக எரிபொருள் பிரச்சனை நீடித்து வருகின்ற நிலையில் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் இடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தான் இதுவரை எந்தவித நடவடிக்கையும் அல்லது அவசர கலந்துரையாடல்களை மேற்கொண்டு எரிபொருள் பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஏனைய மாவட்டங்களில் எரிபொருள் பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கான மற்றும் எரிபொருள் பங்கீடு தொடர்பான பல முன்னேற்ற நடவடிக்கைகள் இடம் பெற்றாலும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவர் அவற்றில் அக்கறையின்றி செயற்படுவதாகவும் அவர் எரிபொருள் பிரச்சனை தொடங்கிய காலத்தில் இருந்து மன்னார் வருவதை தவிர்த்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரம் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானுக்கு சொந்தமான பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படுகின்ற போது அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூட மக்களுக்கு ஒழுங்கான எரிபொருள் வழங்கப்படுவதில்லை எனவும் நள்ளிரவில் வரும் எரிபொருள் இரவோடு இரவாக விற்பனை செய்யப்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.