வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
– தென்னிலங்கையும் தமிழ் மக்களும் சுட்ட மண்ணும் பச்சைமண்ணுமாகவே உள்ளனர்
வடக்கும் கிழக்கும் மலையகமும் தென்னிலங்கையுடன் சுட்ட மண்ணும் பச்சைமண்ணுமாகவே இன்றும் உள்ளது. இன்று இலங்கை எதிர் கொள்கின்ற பாரிய அரசியல் பொருளாதார நெருக்கடிக்குள்ளும் இணைந்து பயணிப்பதென்பது கானல் நீராகவே இருக்கின்றது. இனங்களுக்கிடையிலான அச்ச நிலை நம்பிக்கையீனம் புரிந்துணர்வு இன்மை என்பன இலகுவில் துடைத்து எறியப்படக் கூடியதொன்றல்ல என்பதை இன்றைய யதார்த்தமும் உணர்த்துகின்றது.
இன்றைய நெருக்கடிக்கு மத்தியில் துணைக்கு தமிழ் மக்களை அழைத்து இணைத்துக் கொள்ள தென்னிலங்கை தயாராக இருக்கின்றது. ஆனால் தமிழர் விவகாரத்தைக் கணக்கில் எடுப்பதற்கோ சமரசம் காண்பதற்கோ தயாராக இல்லை என்பதுதான் தென்னிலங்கையின் உள்ளக்கிடக்கையாக உள்ளது.
மொத்தத்தில் கூறுவதாயின் தென்னிலங்கை அரசியல் சக்திகளிடம் இருந்தோ அல்லது பெரும்பான்மை மக்களிடம் இருந்தோ தமிழர் விவகாரம் குறித்து தெளிவான சமிக்ஞை கிடைப்பதாகத் தெரியவில்லை. இன்றைய நிலையில் கூட தென்னிலங்கை தமிழ் மக்கள் தமது தலை விதியை தாமே தீர்மானித்துக் கொள்ள வேண்டுமென்ற செய்தியைத்தான் அழுத்தம் திருத்தமாகக் கூறுவதாகவே உள்ளது. அதாவது அணைத்து இலங்கை மக்களுக்கும் தலைமை தாங்கும் ஆளுமை தகைமை தார்மீக அரசியல் நிலைப்பாடு என்பன தெற்கில் உள்ள எந்த அரசியல் சக்திக்கும் இல்லை என்பதுதான் உண்மையாகும்.
மறுபுறம் தமிழர்களுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலை முன் வைத்து தென்னிலங்கையை திசை திருப்பி ராஜபக்ஷக்கள் குளிர்காய முயல்கின்றனர்.
அதேவேளையில் நிலைமை கட்டுமீறிப்போகாது தடுத்து நிறுத்துவதுடன் ஒரு சில அரசியலமைப்பு ஏற்பாடுகளுடன் தென்னிலங்கையின் கொதிநிலைக்குள் மக்களை சமரசம் காண வைப்பதுடன் ராஜபக்ஷக்களையும் அவர்கள் சார்ந்த ஆளும் வர்க்கத்தினரையும் காப்பாற்றும் அரசியலை முன்னெடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ போன்றோர் வேகமாகச் செயற்படுகின்றனர்.
ராஜபக்ஷ அணியினர் தற்போது முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக பெரேராவை முன்னிறுத்தி அரசியல் காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலதிகமாக வகிக்கின்ற நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டுமென முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக பெரேரா பகிரங்கமாகவே அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுன தரப்பினரினதும் அங்கீகாரமும் ஆசிர்வாதமும் இன்றி நடைபெற்றிருக்காது.
அதாவது ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ தரப்பினர் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கென மக்கள் தரப்பில் இருந்து எழும்புகின்ற கோஷங்களுக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கல்தா கொடுத்துவிட்டு அமைச்சர் தம்மிக பெரேரா மூலம் இன்னொரு முலாம் பூச காய் நகர்த்த முயற்சிப்பதாகத் தெரிகின்றது.
ஆனால் சற்று அடங்கி இருந்த தென்னிலங்கை கொதி நிலை மீண்டும் எரிமலையாக குமுறத் தொடங்கிவிட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்த்து முழுமையான முறைமை மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக ஜனாதிபதியும் அரசாங்கமும் இராஜினாமா செய்வதோடு புதிய இடைக்கால நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாகஇ இலங்கையின் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் நான் அன்புடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால்இ அவர்கள் இனி பதவியில் நீடிப்பதற்கு தார்மீக உரிமை இல்லாததால்இ பொறுப்பை ஏற்று தங்கள் பதவிகளில் இருந்து அவர்கள் விலக வேண்டும். இந்தச் சூழ்நிலையில் மக்களுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்தாமல் அதிகாரத்தை மீண்டும் மக்களிடம் ஒப்படைத்து விடுங்கள்‘ என்று அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என அறிவித்துள்ளார்.
மகா சங்கத்தினரும் தென்னிலங்கை மக்களின் போராட்டத்துடன் கைகோர்த்துப் பயணிக்க களம் இறங்கியுள்ளனர்.
மொத்தத்தில் தமிழர் தரப்பின் முழமையான ஆதரவின்றி தென்னிலங்கை தமக்கான தீர்வினை அடைந்து கொள்வதற்கான களமே விரிந்து கிடக்கின்றது. ஆனால் அந்தத் தீர்வானது தமிழர்களுக்கான சவாலாக தென்னிலங்கை பிரசவிக்கின்ற குழந்தையாக இருக்கலாம். அது தென்னிலங்கையின் இனவாத முகத்தின் இன்னொரு கூட்டுக் கலவையுடன் பிறப்பதாகவே அமையும்.
வழமை போன்றே தென்னிலங்கை தலைமைகள் பிரிந்து நின்று தமது இலக்கை அடைந்து கொள்ள முயற்சிக்கின்றன. ஆனால் மக்கள் ஓரணியில் திரண்டு நிற்கின்றனர். இந்தப் பிளவுக்குள்ளும் தென்னிலங்கை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்பம் அவர்கள் சார்ந்த ஆளும் வர்க்கம் தற்போது இவர்களுக்காக துணை நிற்கும் பிரதமர் ரணில் விகரம சிங்க அணைவரும் வெளியேற வேண்டும் என்பதில் ஒற்றுமையுடன் ஓரணியில் நிற்கின்றனர். இது காலத்தின் தேவை என்பதை தென்னிலங்கை சரியாகக் கணித்துள்ளது.
ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ்த் தலைமைகள் இன்றும் பிரிந்த நின்று தத்தமது அரசியல் நலன்களுக்காக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். தென்னிலங்கை வேற்றுமைக்குள் ஒற்றுமைப்பட்டு நிற்கின்றனர். இந்த ஒற்றுமை தமிழ்த் தலைமைகளிடம் தமிழ் மக்களின் தலைவிதியை மாற்றுவதில் காண முடியாது உள்ளது. இது பற்றி தமிழ் மக்கள் ஆழ சிந்தித்தாக வேண்டும்.