கதிரோட்டம் 08-07-2022
இலங்கைப் பாராளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களுடன் எதிர்க் கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாசவை தவிர்த்து ஓரோயொரு உறுப்பினராக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில் விக்கிரமசிங்கா என்னும் ‘அக்கிரமத்திற்கான’அரசனை பிரதமராக நியமித்த ஜனாதிபதி கோட்டாபாய அவர்கள், அந்த நியமனம் இடம்பெற்று சில மாதங்களில் அவர் நியமித்த பிரதமரால் பாராளுமன்றத்தை நடத்த இயலாமற் போனமைக்காக நிச்சயம் வருந்தியிருப்பார்.
இதற்குக் காரணம். அன்றைய தினம் சபாநாயகரின் ஆசனத்தில் அமராமல் வழமைக்கு மாறாக சபை ஆசனங்களில் ஒன்றில் அதிலும் பிரதமர் ரணிலுக்கு அருகில் அமர்ந்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை சில நிமிடங்களில் முடிவடைந்ததே இன்றைய செய்தியாக எழுந்து நிற்கின்றது.
இந்த சம்பவமானது, இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் அல்லது ஜனாதிபதியின் வரலாற்றில் இதுவரை நிகழாத ஒன்றாகவே கருதப்படுகின்றது. வெளிநாடுகள் கூட ‘மூக்கை நுழைக்கும்’ விடயமாக மாறிவிட்ட இந்த அவமானச் சம்பவம் தொடர்பாக பிரதமராக வெறுமனே ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அவர் கூட எவ்வித கருத்தையும் கூற முன்வரவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் எப்போதும் நடக்காத சம்பவம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளதை நாம் நன்கு கவனிக்க வேண்டும்.
அன்றைய தினம் தனது அதிகாரத்திற்குள் இருக்கும் இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அங்கு தொடர்ந்து அமர்ந்திருக்க முடியாமல். எழுந்து சென்ற விடயமானது மக்களை சிந்திக்கவும் செய்திருக்கின்றது என்பதும் உண்மைதான்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்ததுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அருகில் அமர்ந்திருந்தார். அப்போது வீதிகளில் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்த ‘கோட்டா கோ ஹோம்’ என்னும் உரத்த கோசங்கள், அங்கும் உரத்து கேட்கும் என்று அவரோ அன்றி அவருக்கு அருகிலிருந்த ரணிலோ எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
அங்கு வழமைபோல். தனது வாய்ச் சொல் வீரத்தைக் காட்டுவதற்காக பிரதமர் ரணில் சர்வதேச நாணய நிதியத்துடன் தானும் தனது குழுவினரும் நடத்தும் பேச்சுவார்த்தைகள் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் உரத்துப் பேசத் தொடங்கினார்.
இதன் போது எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு தடையேற்படுத்தி, ஜனாதிபதிக்கு எதிராக கோசங்களை எழுப்பினர். ‘கோட்டா கோ ஹோம’; என கோசமிட்டு அவர்கள் ஜனாதிபதிக்கு தமது எதிர்ப்பைக் காட்டி நின்றனர்
அப்போது, நாடாளுமன்ற அவையில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி வரலாற்றில் எப்போதும் நடக்காத சம்பவம் ஒன்றுக்கு காரணகர்த்தாவாக அமைந்துவிட்டார்
இவ்வாறான அவமானத்தை மட்டுமல்லாது, பயனில்லாத பிரதமர் ஒருவரையும் நியமித்து நாட்டு மக்களையும் அறிவார்ந்தவர்களின் சமூகத்தையும் ஏமாற்றும் இந்த ‘இயலாத தலைவர்கள’ இருவரும் இனிமேலும் நாட்டின் அதிகார சபைக்கு தேவையற்றவர்கள் என்பதே அன்று நிரூபணமாகியுள்ளது. இதுவும் அங்குள்ள உண்மைத் தன்மையாகும்.