வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
- நூறு நாட்களுக்குள் ‘கோதா கோ கம’ இளைஞர் யுவதிகள் சாதனை
- தென்னிலங்கையும் தமிழ் மக்களும் சுட்ட மண்ணும் பச்சைமண்ணுமாகவே உள்ளனர்
வடக்கும் கிழக்கும் மலையகமும் தென்னிலங்கையுடன் சுட்ட மண்ணும் பச்சைமண்ணுமாகவே இன்றும் உள்ளனர். இன்று இலங்கை எதிர் கொள்கின்ற பாரிய அரசியல் பொருளாதார நெருக்கடிக்குள்ளும் இணைந்து பயணிப்பதென்பது கானல் நீராகவே இருக்கின்றது. இனங்களுக்கிடையிலான அச்ச நிலை நம்பிக்கையீனம் புரிந்துணர்வு இன்மை என்பன இலகுவில் துடைத்து எறியப்படக் கூடியதொன்றல்ல என்பதை இன்றைய யதார்த்தமும் உணர்த்துகின்றது.
இன்றைய நெருக்கடிக்கு மத்தியில் துணைக்கு தமிழ் மக்களை அழைத்து இணைத்துக் கொள்ள தென்னிலங்கை தயாராக இருக்கின்றது. ஆனால் தமிழர் விவகாரத்தைக் கணக்கில் எடுப்பதற்கோ சமரசம் காண்பதற்கோ தயாராக இல்லை என்பதுதான் தென்னிலங்கையின் உள்ளக்கிடக்கையாக உள்ளது.
மொத்தத்தில் கூறுவதாயின் தென்னிலங்கை அரசியல் சக்திகளிடம் இருந்தோ அல்லது பெரும்பான்மை மக்களிடம் இருந்தோ தமிழர் விவகாரம் குறித்து தெளிவான சமிக்ஞை கிடைப்பதாகத் தெரியவில்லை. இன்றைய நிலையில் கூட தமிழ் மக்கள் தமது தலை விதியை தாமே தீர்மானித்துக் கொள்ள வேண்டுமென்ற செய்தியைத்தான் தென்னிலங்கை அழுத்தம் திருத்தமாகக் கூறுவதாகவே உள்ளது. அதாவது அணைத்து இலங்கை மக்களுக்கும் தலைமை தாங்கும் ஆளுமை தகைமை தார்மீக அரசியல் நிலைப்பாடு என்பன தெற்கில் உள்ள எந்த அரசியல் சக்திக்கும் இல்லை என்பதுதான் உண்மையாகும்.
மறுபுறம் தமிழர்களுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலை முன் வைத்து தென்னிலங்கையை திசை திருப்பி ராஜபக்ஷக்கள் குளிர்காயும் நிகழ்ச்சி நிரலையும் கைவசம் வைத்திருந்தனர்.
அதேவேளையில் நிலைமை கட்டுமீறிப்போகாது தடுத்து நிறுத்துவதுடன் ஒரு சில அரசியலமைப்பு ஏற்பாடுகளுடன் தென்னிலங்கையின் கொதிநிலைக்குள் மக்களை சமரசம் காண வைப்பதுடன் ராஜபக்ஷக்களையும் அவர்கள் சார்ந்த ஆளும் வர்க்கத்தினரையும் காப்பாற்றும் அரசியலை முன்னெடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ போன்றோர் வேகமாகச் செயற்பட்டனர்.
ராஜபக்ஷ அணியினர் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக பெரேராவை முன்னிறுத்தி அரசியல் காய்களை நகர்த்தத் தொடங்கினர். அதன் விளைவு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலதிகமாக வகிக்கின்ற நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டுமென முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக பெரேரா பகிரங்கமாகவே அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுன தரப்பினரினதும் அங்கீகாரமும் ஆசிர்வாதமும் இன்றி நடைபெற்றிருக்காது.
அதாவது ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ தரப்பினர் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கென மக்கள் தரப்பில் இருந்து எழும்புகின்ற கோஷங்களுக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கல்தா கொடுத்துவிட்டு அமைச்சர் தம்மிக பெரேரா மூலம் இன்னொரு முலாம் பூச காய் நகர்த்த முயற்சித்தனர்.
- திருப்பு முனை
ஆனால் இன்று இந்த பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் போது ஜூலை 9 ஆம் திகதி ‘கோதா கோ கம’ இளைஞர் யுவதிகளின் போராட்டம் மீண்டும் வீரியம் பெற்று தென்னிலங்கை மக்களை வீதியில் இறங்க வைத்து விட்டது சற்று அடங்கி இருந்த தென்னிலங்கை கொதி நிலை மீண்டும் எரிமலையாக வெடித்து கொழும்பை நோக்கி மக்களை நகர வைத்து விட்டது. .
‘கோதா கோ கம’ இளைஞர் யுவதிகள் தென்னிலங்கையை மீண்டும் ஓரணியில் திரட்டிவிட்டனர். கொழும்பு நோக்கி திரளும் மக்கள் ஜன சமுத்திரமே இதற்கு சான்று பகர்கின்றது. தற்போது ஜனாதிபதி செயலகம் ஜனாதிபதி மாளிகை அலரி மாளிகை என்பனவற்றை மக்கள் கைப்பற்றியுள்ளனர்.
- அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றம்
‘கோதா கோ கம’ தெடங்கிய கடந்த மூன்று மாதங்கள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.
1.ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ வீட்டுக்குப் போய்விட்டார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராஜினாமா செய்வதற்கு இணக்கம் தெரிவித்தள்ளார்.
- பிரதமராக இருந்த மகிந்தராஜபக்ஷ ‘மைனா கோ கம’ வுடன் ராஜினாமா செய்துவிட்டார்.
- ‘கா கா கபுடா’ வுடன் நிதி அமைச்சராக இருந்த பஸில் ராஜபக்ஷ ராஜினாமா செய்துவிட்டார்.
- ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சி அவர்களது ஆதரவு அணியினரதும் ஒட்டுமொத்த ஆட்சிக்கும் தென்னிலங்கை மக்கள் முற்றுப் புள்ளி இட்டுள்ளனர்.
5.மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க நாட்டை காப்பாற்றும் போர்வையில் ராஜபக்ஷக்களுக்காக அரசியலில் களம் இறங்கி கையைச் சுட்டுக் கொண்டதுடன் ஜக்கிய தேசிய கட்சியின் சவப்பெட்டிக்கான இறுதி ஆணியையும் அடித்துவிட்டார். அவருக்கோ அவர் தலைமை தாங்கும் ஜ.தே.க.வுக்கோ அரசியல் எதிர்காலம் இல்லாத நிலையை அவர் உருவாக்கிக் கொண்டுள்ளார்.
‘கோதா கோ கம’ இளைஞர் யுவதிகள் இலங்கை வரலாற்றில் பொறித்த வெற்றிகள் இவை. இந்த வெற்றியில் தென்னிலங்கை மக்களின் பங்களிப்பு அளப்பரியது.
தென்னிலங்கை தமது இளைஞர் யுவதிகள் குறித்து பெருமிதம் கொள்கின்றனர்.இது ஒரு யுகப் புரட்சி என்றும் வர்ணிக்கின்றனர். இன்றைய இந்த அரசியல் மாற்றத்திற்கு வித்திட்ட பெருமை ‘கோதா கோ கம’ இளைஞர் யுவதிகளையே சாரும் என்ற அங்கீகாரத்தையும் தென்னிலங்கை மக்கள் வழங்கியுள்ளனர்.
மொத்தத்தில் ‘கோதா கோ கம’ இளைஞர் யுவதிகள் புரையோடிப் போயுள்ள இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு புது யுகத்தை எதிர்பார்த்து நிற்கின்றனர். எனவேதான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் இராஜினாமா செய்யும் கடிதங்களைக் கையளித்தாக வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைத்துள்ளனர். இவர்களது இராஜினாமா கடிதங்கள் கையளிக்கப்படும்வரை தாம் கைப்பற்றியுள்ள ஜனாதிபதி மாளிகை ஜனாதிபதி செயலகம் அலரி மாளிகை ஆகியவற்றில் இருந்து வெளியேறப் போவதில்லை என்றும் ‘கோதா கோ கம’ இளைஞர் யுவதிகள் தாம் கைப்பற்றியுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர்.
போர் வெற்றி நாயகனாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நாட்டின் பாதுகாவலனாக காட்டப்பட்டு 69 இலட்சம் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிபீடமேறிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அவர்களது அணியினர் மக்களாலேயே துக்கி வீசப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் இத்துடன் முடிவடைவதில்லை என ‘கோதா கோ கம’ இளைஞர் யுவதிகள் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பதவி விலகுவதுடன் இடைக்கால அரசாங்கம் அமைத்து அடுத்த தேர்தல நடைபெறும்வரை தமது போராட்டம் தொடருமென்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
- பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அழைப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்த்து முழுமையான முறையான மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக ஜனாதிபதியும் அரசாங்கமும் இராஜினாமா செய்வதோடு புதிய இடைக்கால நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.
மகா சங்கத்தினரும் தென்னிலங்கை மக்களின் போராட்டத்துடன் கைகோர்த்துப் பயணிக்க களம் இறங்கியுள்ளனர். கொழும்பு புறக்கோட்டை மகா போதிக்கு முன்னால் மகாசங்கத்தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மொத்தத்தில் தமிழர் தரப்பின் முழமையான ஆதரவின்றி தென்னிலங்கை தமக்கான தீர்வினை அடைந்து கொள்வதற்கான களமே விரிந்து கிடக்கின்றது. ஆனால் அந்தத் தீர்வானது தமிழர்களுக்கான சவாலாக தென்னிலங்கை பிரசவிக்கின்ற குழந்தையாக இருக்கலாம். அது தென்னிலங்கையின் இனவாத முகத்தின் இன்னொரு கூட்டுக் கலவையுடன் பிறப்பதாகவே அமையும். அதனைத் தடுத்து நிறுத்தி தென்னிலங்கையை சரியான பாதையில் பயணிக்க வைப்பது தமிழ் மக்களின் தலைமைகளுக்கு உள்ள தார்மீகப் பொறுப்பும் கடமையுமாகும்.
- தென்னிலங்கை வேற்றுமைக்குள் ஒற்றுமை
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள தென்னிலங்கை தலைமைகள் வழமை போன்றே பிரிந்து நின்று தமது இலக்கை அடைந்து கொள்ள முயற்சிக்கின்றன. ஆனால் தென்னிலங்கை மக்கள் ஓரணியில் திரண்டு நிற்கின்றனர். இந்தப் பிளவுக்குள்ளும் தென்னிலங்கை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்பம் அவர்கள் சார்ந்த ஆளும் வர்க்கம் தற்போது இவர்களுக்காக துணை நிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அணைவரும் வெளியேற வேண்டும் என்பதில் ஒற்றுமையுடன் ஓரணியில் நிற்கின்றனர். இது காலத்தின் தேவை என்பதை தென்னிலங்கை சரியாகக் கணித்துள்ளது.
- வேற்றுமைக்குள் தமிழ்த் தலைமைகள்
ஆனால் துரதிஷ;டவசமாக தமிழ்த் தலைமைகள் இன்றும் பிரிந்து நின்று தத்தமது அரசியல் நலன்களுக்காக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.
தென்னிலங்கை வேற்றுமைக்குள் ஒற்றுமைப்பட்டு நிற்கின்றனர். இந்த ஒற்றுமை தமிழ்த் தலைமைகளிடம் தமிழ் மக்களின் தலைவிதியை மாற்றுவதில் காண முடியாது உள்ளது. இது பற்றி தமிழ் மக்கள் ஆழ சிந்தித்தாக வேண்டும்.