நாட்டு மக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல், நள்ளிரவில் வெளியேறினாலும் கோத்தாபய ராஜபக்ச வெளியிறானலும், கொழும்பில் போராட்டங்கள் ஓய்வதற்கான அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை.
இதனிடையே ஜனாதிபதி நாட்டில் இல்லாததால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தான் நாட்டில் இல்லாததால் ஜனாதிபதி இந்த நியமனத்தை அரசியல் யாப்பின் பிரிவு 37.1 கீழ் செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளார்.
பௌர்ணமி தினமான இன்று (13) புதன்கிழமை தான் பதவி விலகுவதாக அறிவித்திருந்த கோத்தாபய ராஜபக்ச உள்ளூர் நேரம் மதியம் 1:30 மணி வரை தனது பதவி விலகல் கடிதத்தை அளிக்கவில்லை. எனினும் அதிகாலையில் இராணுவ விமானம் ஒன்றில் தனது மனைவி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பியோடு மாலத்தீவு சென்றுவிட்டார்.
அவரை சட்டத்தின் முன்னர் நிறுத்தாமல், நாட்டைவிட்டுத் தப்பிச்செல்ல பிரதமர் ரணிலின் அரசு உதவியது என்று கூறும் போராட்டக்காரர்கள், அவரது இல்லத்தை முற்றுகையிட்டு பலவந்தமாக உள்நுழைந்து போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். இதையடுத்து மேல் மாகாணம் முழுவதிலும் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
கோத்தாபய தப்பித்துள்ள நிலையில், மக்களின் கோபம் இப்போது ரணில் பக்கம் திரும்பியுள்ளது. காலிமுகத்திடல் போராடுபவர்களின் கோபாவேசமும், தீவிரத்தன்மையும் அதிகரித்துவரும் நிலையில், கொழும்பு நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. போராட்டக்காரர்களைக் கலைக்கவும், கண்காணிக்கவும் உலங்கு வானூர்திகள் இறக்கப்பட்டுள்ளன.
அவ்வகையில் போராட்டம் நடைபெறும் இடம் மற்றும் பிரதமரின் இல்லம் போன்ற பகுதிகளின் மேல் குறைந்தது 6 ஹெலிகொப்டர்கள் வலம் வருவதை தொலைக்காட்சி படங்கள் காட்டின.
அவர் பதவி விலகும் கடிதத்தை தனது இறுதி இலக்கை அடைந்த பின்னரே அனுப்புவார் என்று அரசின் உயர்மாட்ட தகவல்கள் கூறுகின்றன. பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள் விரட்டியடிக்க இராணுவத்துடன் விமானப்படையும் களத்தில் இறக்கப்பட்டுள்ளது.
ரணில் விகரமசிங்கவும் உடனடியாக பதவி விலக வேண்டும், அதுவரை போராட்டத்தில் தொய்வு ஏதும் இருக்காது என்று போராட்டக்காரர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி இரவு 8 மணியளவில் கோத்தாபய ராஜபக்ஷவின் ராஜினாமா கடிதம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பப்படும் என தெரியவருகின்றது. ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் அலுவலகம் இன்று காலை தெரிவித்தது.
மாலத்தீவு சென்றுள்ள கோத்தாபய ராஜபக்ச வேறு நாட்டுக்குச் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு செல்லவுள்ள நாடு ஐக்கிய அரபு அமீரகம் எனவும், அங்குள்ள அமீரகங்களில் ஒன்றான அபுதாபியை அடைந்த பின்னரே கோத்தாபய பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைப்பார் எனவும் தற்போது தெரியவருகின்றது.
இதேநேரம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை இலங்கை விமானப்படையின் விமானத்தில் ஏற்றி அனுப்பியதனை உறுதி செய்த இலங்கை விமானப்படையானது இலங்கையின் தற்போதை சட்டத்திற்கு அமைய ஆட்சியாளர்களின் ஒப்புதலின் பெயரில் பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளிற்கு அமையவே ஜனாதிபதியை ஏற்றிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இலங்கையின் ஜனாதிபதியின் பயணம் மிகவும் இரகசியமாக மேற்கொண்டபோதும் உடனுக்குடன் தகவல்கள் வெளியே வருவது தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
காலிமுகத்திடலில் நடைபெறும் `கோகோத்தாகம` போராட்டக்களத்தில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது நான்கு பேர் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 17- 20 வயதானவர்கள் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. நேற்று அலரிமாளியில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.
இலங்கையில் நிலவும் சூழலையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது சேவைகளை இடை நிறுத்தியுள்ளது.
இதற்கமைய அடுத்த இரண்டு நாட்களுக்குத் தனது சேவையை ரத்து செய்துள்ளது என தூதரகம் இன்று அறிவித்துள்ளது.