இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்த பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கருத்தை வெளியிட்டுள்ளது.
“புதிய ஜனாதிபதியாக யாரைத் தெரிவு செய்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19ஆம் திகதியன்றே கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடி இது தொடர்பில் முடிவு எடுக்கும் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மேலும் விபரம் தெரிவிக்கையில்,
புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடத்தப்படவுள்ளது. ஜனாதிபதிப் பதவிக்கு மும்முனைப் போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ, டலஸ் அழகப்பெரும ஆகிய மூவரும் போட்டியிடத் தயாராகியுள்ளனர். இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளது என சுமந்திரன் எம்.பியிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 19ஆம் திகதிதான் வேட்புமனுத் தாக்கல் இடம்பெறவுள்ளது. அன்றுதான் புதிய ஜனாதிபதித் தெரிவுக்காக யார் யார் போட்டியிடுகின்றார்கள் என்பதை சரியாக உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். எனவே 19ஆம் திகதி வேட்புமனுத் தாக்கலின் பின்னர் அன்றைய தினமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடி எந்த வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் முடிவு எடுப்போம். அதுவரைக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனும் நாடாளுமன்றத்திலுள்ள பிரதான கட்சிகளுடனும் பேச்சுக்கள் தொடரும் என்றார்.